"நாம் தோல்வியடைந்தால் மரணம் வெல்லும்", போதைப்பொருளுக்கு எதிரான பிரச்சாரத்தை துவங்கி வைத்த பினராயி விஜயன்!
“நாம் ஒரு நொடி கூட வீணடிக்க முடியாது. போதைக்கு எதிரான இந்த போராட்டத்தில் நாம் வெற்றி பெற வேண்டும். தோல்வி அடைந்தால் மரணம் வெல்லும். வெற்றி பெறுவோம், இது சாத்தியம், நாங்கள் அதை நிறைவேற்றுவோம்,"
கேரளாவில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்து வருவதைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், போதைப்பொருள் மாஃபியாவுக்கு எதிராக முழுவதுமாக போராடப் போவதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் வியாழன் அன்று உறுதியளித்தார்.
போதைப்பொருளுக்கு எதிரான பிரச்சாரம்
இந்தியாவில் போதைப்பொருள் பழக்கம் பலரிடையே அதிகரித்துள்ள நிலையில் அதற்கெதிரான பிரச்சாரத்தை துவக்கி வைத்த கேரள முதல்வர் போதைப்பொருளை ஒழிக்க போராடுவோம் என்று உறுதியளித்து பேசியுள்ளார். “நாம் ஒரு நொடி கூட வீணடிக்க முடியாது. போதைக்கு எதிரான இந்த போராட்டத்தில் நாம் வெற்றி பெற வேண்டும். தோல்வி அடைந்தால் மரணம் வெல்லும். வெற்றி பெறுவோம், இது சாத்தியம், நாங்கள் அதை நிறைவேற்றுவோம்," என்று ஐரோப்பாவிற்கு சுற்றுப்பயணத்தில் இருக்கும் பினராயி விஜயன், ஒரு விழாவில் உரையாற்றும் போது கூறினார்.
இந்த இயக்கம் பன்முகப்படுத்தப்படும் என்றும், பிரச்சினையை கையாளும் அனைத்து நிறுவனங்களும் இணைந்து செயல்படும் என்றும் அவர் கூறினார். இந்தியா முழுவதும் போதைப்பொருளுக்கு எதிரான நடவடிக்கைகள் எல்லா மாநிலங்களிலும் எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ள நிலையில் கடந்த சில மாதங்களாகவே தமிழ் நாட்டிலும், முதலமைச்சர் ஸ்டாலினால் அது குறித்த விழிப்புணர் பிரச்சாரங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. அதே போல கேரளாவிலும் இந்த பிரச்சாரத்தை நேற்று துவங்கி வைத்துள்ளார் முதல்வர் பினராயி விஜயன்.
தேச விரோதிகளாக கருத வேண்டும்
போதைப்பொருள் கடத்துபவர்களையும், விநியோகஸ்தர்களையும், தேச விரோதிகளாகக் கருதும் கலாச்சாரத்தை வளர்க்க வேண்டும் என்று கேரளா முதல்வர் பினராயி விஜயன் அழைப்பு விடுத்தார். பிரச்சாரத்தை வெற்றியடையச் செய்யுமாறு மத அமைப்புகள், குடியுரிமை சங்கங்கள் போன்றவற்றுக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
போதைக்கு எதிரான தீபம்
ஒரு மாத கால பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு போதைக்கு எதிரான உறுதிமொழிகள் எடுக்கப்படும். அக்டோபர் 24 ஆம் தேதி அனைத்து பொது இடங்களிலும், வீடுகளிலும் "போதைக்கு எதிரான" தீபம் ஏற்றப்படும் என்றும் கூறியுள்ளார். தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், ஊடக நிறுவனங்கள் மற்றும் திரைப்பட நடிகர்கள் இந்த பிரச்சாரத்திற்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளனர்.
போதைப்பொருள் வழக்குகள்
சராசரியாக, கேரள மாநிலத்தில் தினசரி குறைந்தது 77 போதைப்பொருள் தொடர்பான வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. இவை மொத்த வழக்குகளில் 10.25% ஆகும். கடந்த இரண்டு ஆண்டுகளில் போதைப்பொருள் தொடர்பான வழக்குகள் 10,000 க்கும் குறைவாக உள்ளன. ஆனால் இந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் 22,000-ஐ தாண்டியுள்ளது. இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான டி-20 போட்டிக்காக திருவனந்தபுரத்தில் இருந்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி, இந்த பிரச்சாரத்தின் போஸ்டரை வெளியிட்டார்.