மசூதியில் இருப்பது சிவலிங்கமா? ஆய்வு செய்ய இந்திய தொல்லியல் துறைக்கு வாரணாசி நீதிமன்றம் உத்தரவு
மசூதியில் விஞ்ஞானப்பூர்வ ஆய்வு மேற்கொள்ள இந்திய தொல்லியல் துறைக்கு வாரணாசி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகே உள்ள ஞானவாபி மசூதியில் ஆய்வு மேற்கொள்ள இந்திய தொல்லியல் துறைக்கு வாரணாசி நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. இந்த மசூதிக்கு உள்ளே அமைந்துள்ள சிறிய குளத்தில், சிவலிங்கம் இருப்பதாகவும், முகலாயர் காலத்தில் கட்டப்பட்ட ஞானவாபி மசூதி, இந்துக் கோயில் இருந்த இடத்தில் கட்டப்பட்டதா என்பதை அறிய, அங்கு ஆய்வு செய்ய உத்தரவிடக் கோரி இந்துக்கள் மனு தாக்கல் செய்தனர்.
ஞானவாபி மசூதியில் இருப்பது சிவலிங்கமா?
கடந்த மே மாதம், இந்துக்கள் தாக்கல் செய்த மனுவுக்கு ஆட்சேபனை தெரிவித்து, இஸ்லாமியர் தரப்பு எதிர் மனு தாக்கல் செய்தனர். இந்துக்கள், இஸ்லாமியர்கள் தரப்பு வாதத்தை கேட்டறிந்த பிறகு, கடந்த ஜூலை 14ஆம் தேதி உத்தரவு ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில், மசூதியில் விஞ்ஞானப்பூர்வ ஆய்வு மேற்கொள்ள இந்திய தொல்லியல் துறைக்கு, வாரணாசி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதை தொடர்ந்து, வழக்கு விசாரணை ஆகஸ்ட் 4ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
வழக்கில் தொடர் பின்னடைவை சந்தித்து வரும் இஸ்லாமியர் தரப்பு:
உத்தரவு குறித்து கருத்து தெரிவித்த மசூதி தரப்பு வழக்கறிஞர் முகமது தௌஹித் கான், "இதை ஏற்க முடியாது, இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம். இந்த ஆய்வு மசூதிக்கு சேதம் விளைவிக்கும்" என்றார்.
இதுகுறித்து இந்துக்கள் தரப்பு வழக்கறிஞர் விஷ்ணு சங்கர் ஜெயின் கூறுகையில், "மசூதி வளாகம் முழுவதையும் தொல்பொருள் ஆய்வுக்கு உட்படுத்துவதன் மூலம் மட்டுமே காசி விஸ்வநாதர் கோயில்- ஞானவாபி மசூதி பிரச்னையை தீர்க்க முடியும் என்று முன்பு வாதிட்டேன். ஞானவாபி வளாகத்தின் மூன்று குவிமாடங்கள், மேற்கு சுவர் மற்றும் முழு வளாகத்தையும் ஆய்வு செய்த பிறகு நிலைமை தெளிவாகும்" என்றார்.
ஞானவாபி மசூதியில் ஆண்டுக்கு ஒரு முறை இந்துக்கள் வழிபாடு மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், ஆண்டு முழுவதும் வழிபாடு மேற்கொள்ள அனுமதி வழங்க கோரி இந்துப் பெண்கள் ஐந்து பேர் வாரணாசி உள்ளூர் நீதிமன்றத்தில் முதலில் வழக்கு தொடர்ந்தனர். இந்து பெண்களின் மனுவை தள்ளுபடி செய்யக் கோரி வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால், இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதையடுத்து, உள்ளூர் நீதிபதியின் தீர்ப்புக்கு எதிராக இந்து பெண்களின் மனுவை தள்ளுபடி செய்யக் கோரி அஞ்சுமன் இன்டெஜாமியா மசூதி (ஏஐஎம்) கமிட்டி மற்றும் உத்தரபிரதேச சன்னி வக்பு வாரியம் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன.
இந்த மனுவை அலகாபாத் உயர் நீதிமன்றமும் தள்ளுபடி செய்தது. முன்னதாக, மசூதி வளாகத்தில் உள்ளூர் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் வீடியோ ஆய்வு மேற்கொள்ளப்பட்டபோது, சிவலிங்கம் போன்ற தொன்மையான சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்டதாக தகவல் வெளியானது.