Gyanvapi Mosque Case: ஞானவாபி மசூதியை இந்து கடவுளிடம் ஒப்படைக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கு...மசூதி கமிட்டியின் மனு தள்ளுபடி..!
மசூதி வளாகம் முழுவதையும் இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், மே 16 அன்று மசூதிக்குள் காணப்பட்ட சிவலிங்கத்தை வழிபட மனுதாரர்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் வழக்கு தொடரப்பட்டது.
உத்தரப் பிரதேசம் வாரணாசியில் அமைந்துள்ளது ஞானவாபி மசூதி. இங்கு, ஆண்டுக்கு ஒரு முறை இந்துக்கள் வழிபாடு மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், ஆண்டு முழுவதும் வழிபாடு மேற்கொள்ள அனுமதி வழங்க கோரி இந்து பெண்கள் ஐந்து பேர் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இதற்கு மத்தியில், இந்த மசூதி வளாகத்தில் உள்ளூர் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் வீடியோ ஆய்வு மேற்கொள்ளப்பட்டபோது, சிவலிங்கம் போன்ற தொன்மையான சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்டதாக தகவல் வெளியானது.
இது எந்த காலத்தை சேர்ந்தது என்பது குறித்து ஆராய 'கார்பன் டேட்டிங்' முறை மேற்கொள்ளப்பட வேண்டும் என இந்து மனுதாரர்கள் வேறு மனு ஒன்றை தொடர்ந்திருந்தனர். அந்த மனுவை வாரணாசி நீதிமன்றம் சமீபத்தில் நிராகரித்திருந்தது.
Gyanvapi Mosque case: Varanasi Court dismisses Muslim's side plea, defers hearing till Dec 2
— ANI Digital (@ani_digital) November 17, 2022
Read @ANI Story | https://t.co/j6rxj8YS0b#Gyanvapi #Varanasi #GyanvapiMosqueCase pic.twitter.com/VQHpRW57Th
இதை தொடர்ந்து, வழிபாடு மேற்கொள்ள அனுமதி வழங்கக் கோரி மனு தாக்கல் செய்த ஐந்து இந்து பெண்களில் நான்கு பேர், சிவலிங்கம் போன்ற சிலையின் தொன்மத்தை கண்டறிய கார்பன் டேட்டிங் போன்ற விஞ்ஞானப்பூர்வமான ஆய்வை நடத்த வேண்டும் என கடந்த மாதம் வேறு மனு ஒன்றை தாக்கல் செய்தனர். மேலும், இந்து கடவுகளின் சிலைகள், மசூதிக்கு உள்ள இருப்பதாக அவர்கள் மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.
ஆனால், கார்பன் டேட்டிங் போன்ற ஆய்வுக்கு மசூதி கமிட்டி எதிர்ப்பு தெரிவித்திருந்தது. சிவலிங்கம் என சொல்லப்படும் சிலை, உண்மையிலேயே நீரூற்று என்றும் மசூதிக்கு செல்லும் இஸ்லாமியர்கள் வழிபடுவதற்கு முன்னதாக தங்களைதானே சுத்தம் செய்ய அதை பயன்படுத்தி வருவதாகவும் மசூதி கமிட்டி விளக்கம் அளித்திருந்தது.
இச்சூழலில், ஞானவாபி மசூதி வளாகத்தை விஸ்வேஷ்வர் விராஜ்மான் கடவுளிடம் ஒப்படைக்க வேண்டும் என விஸ்வ வேத சனாதன சங்கத்தின் சர்வதேச பொதுச் செயலாளர் கிரண் சிங் வழக்கு தொடர்ந்திருந்தார். இதற்கு எதிராக அஞ்சுமன் இஸ்லாமியா மஸ்ஜித் கமிட்டி மனு ஒன்றை தாக்கல் செய்தது. இந்த வழக்கை விசாரித்த வாரணாசி நீதிமன்றம், கமிட்டியின் மனுவை தள்ளுபடி செய்துள்ளது.
மசூதி வளாகம் முழுவதையும் இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், மே 16 அன்று மசூதிக்குள் காணப்பட்ட சிவலிங்கத்தை வழிபட மனுதாரர்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் விஸ்வ வேத சனாதன சங்கம் கோரிக்கை விடுத்திருந்தது.
இருப்பினும், ஞானவாபி மசூதி வளாகத்திற்குள் பிரார்த்தனை செய்ய உரிமை கோரி ஐந்து இந்து பெண்கள் தாக்கல் செய்த வழக்குக்கும் இந்த குறிப்பிட்ட மனுவுக்கும் தொடர்பில்லை என்றும் விஸ்வ வேத சனாதன சங்கம் தெரிவித்திருந்தது.