Uttarkhand Tunnel Collapse: 120 மணி நேரம்! சுரங்கப் பாதையில் சிக்கி தவிக்கும் 40 தொழிலாளர்கள்...திக் திக் நிமிடங்கள்!
நவீன இயந்திரங்களின் உதவி மூலம் 6வது நாளாக தொழிலாளர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
உத்தரகாண்ட் சுரங்க விபத்து
உத்தர காண்ட் மாநிலம் உத்தரகாசியில் பிரம்மகால்-யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் மலைப்பகுதி உள்ளது. அங்கு சுமார் 4 ஆயிரத்து 500 மீட்டர் தொலைவுக்கு சுரங்கப்பாதை அமைக்கும் பணி கடந்த சில ஆண்டுகளாக நடந்து வருகிறது. 90 சதவீத பணிகள் நிறைவடைந்த நிலையில், கடந்த 12ஆம் தேதி அந்த சுரங்கப்பாதையில் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. அடுத்தடுத்து மண் சரிவு ஏற்பட்டதால் சுரங்கப்பாதை முழுமையாக மூடிக் கொண்டது. அப்போது, சுரங்கப்பாதைக்குள் பணியில் இருந்த 40 தொழிலாளர்களும் சிக்கிக் கொண்டனர்.
தொடர்ந்து 5 நாட்களுக்கு மேலாக அவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால், வெளியேற முடியாமல் இன்று ஆறாவது நாளாக தவித்து வருகின்றனர். சிக்கிக் கொண்ட 40 தொழிலாளர்கள் பீகார், ஜார்கண்ட், உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம், ஒடிசா, உத்தரகண்ட், இமாச்சல் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.
6வது நாளாக தொடரும் மீட்பு பணி:
சுரங்கத்தில் மண் சரிந்துள்ள பகுதி சுமுர் 30 மீட்டர் நீளம் கொண்டதாக தெரிகிறது. எனவே, அந்த பகுதியில் துளையிட்டு தொழிலாளர்களை வெளியே கொண்டு வர தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில பேரிடர் மீட்புப் படை, தீயணைப்புப் படை, இந்தோ-தீபெத் எல்லை காவல் படை, அதிவிரைவு படை என சுமார் 200க்கும் மேற்பட்டோர் பணியில் ஈடுபட்டுள்ளனர். சுரங்கத்தில் சிக்கி இருக்கும் தொழிலாளர்கள் உடன் பைப்கள் மூலம் தொடர்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த பைப்கள் மூலம் தண்ணீர், உணவு, மருந்துகள் ஆகியவை செலுத்தப்பட்டு வருகின்றன. வாக்கி டாக்கி மூலம் சிக்கியவர்களுடன் தொடர்பு கொண்டு வருகின்றனர்.
நேற்று முன்தினம் 900 மில்லி மீட்டர் ஸ்டீப் பைப்பை செல்லுத்தும் பணி நடந்தது. இந்த நேரத்தில் எதிர்பாராதவிதமாக மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் தொழிலாளர்கள் மீட்கும் பணியில் இடையூறு ஏற்பட்டது. இதனை அடுத்து, சுரங்கம் தோண்டும் மிகப்பெரிய எந்திரத்தை கொண்டு வர அதிகாரிகள் முடிவு எடுத்தனர். அதன்படி, டெல்லியில் இருந்து இந்திய விமானப்படை மூலம் நேற்று முன்தினம் மாலை ராட்சத எந்திரம் கொண்டு வரப்பட்டு, தீவரமாக பணிகள் நடந்து வருகிறது. 25 கிலோ எடை கெண்ட இந்த எந்திரம் மணிக்கு 5 முதல் 6 மீட்டர் தூரத்துக்கு துளையிடும் ஆற்றலை கொண்டது.
இன்னும் எத்தனை நாட்கள்?
தொடர்ந்து 6வது நாளாக மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. சுரங்கப்பாதை மீட்பு பணிகளில் சர்வதேச அளவில் நிபுணத்துவம் பெற்ற தாய்லாந்து மற்றும் நார்வே நாட்டு நிபுணர்களிடம் ஆன்லைன் மூலம் கருத்துகள் கேட்கப்பட்டு உதவிகள் பெறப்பட்டுள்ளன. தற்போதைய நிலவரப்படி, இன்று காலையில் இருந்து தற்போது வரை பெரிய எந்திரம் மூலம் 21 மீட்டர் தூரம் துளையிடப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த முயற்சியில் வெற்றி பெற்றால் இன்றே 40 தொழிலாளர்களையும் மீட்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.