உத்தரகாண்ட் சுரங்கப்பாதை விபத்து: ”செய்திகளை வழங்கும்போது கவனமாக இருங்கள்” - ஊடகங்களுக்கு மத்திய அரசு அட்வைஸ்!
உத்தரகாண்டில் சுரங்கப்பாதையில் சிக்கியிருக்கும் தொழிலாளர்களை மீட்கும் பணி 11வது நாளாக தொடரும் நிலையில், ஊடகங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
Uttarkhand Tunnel Collapse: உத்தரகாண்டில் சுரங்கப்பாதையில் சிக்கியிருக்கும் தொழிலாளர்களை மீட்கும் பணி 11வது நாளாக தொடரும் நிலையில், ஊடகங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
11வது நாளாக தொடரும் மீட்புப் பணி:
உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் பிரம்மகால்-யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் மலைப்பகுதி உள்ளது. அங்கு சுமார் 4 ஆயிரத்து 500 மீட்டர் தொலைவுக்கு சுரங்கப்பாதை அமைக்கும் பணி கடந்த சில ஆண்டுகளாக நடந்து வருகிறது. 90 சதவீத பணிகள் நிறைவடைந்த நிலையில், கடந்த 12ம் தேதி அந்த சுரங்கப்பாதையில் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. அடுத்தடுத்து மண் சரிவு ஏற்பட்டதால் சுரங்கப்பாதை முழுமையாக மூடிக் கொண்டது.
அப்போது, சுரங்கப்பாதைக்குள் பணியில் இருந்த 41 தொழிலாளர்களும் சிக்கிக் கொண்டனர். தொழிலாளர்களை வெளியே கொண்டு வர 8 துறைகளை சேர்ந்த சுமார் 200க்கும் மேற்பட்டோர் இரவு பகலாக தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். உள்ளே இருக்கும் தொழிலாளர்களுக்கு 6 இன்ச் குழாய் மூலம் உணவு, மருந்து என தேவையான பொருட்களை அனுப்பி வருகின்றனர். 11வது நாளாக இன்று மீட்பு பணி தொடரும் நிலையில், பைப் மூலம் எண்டோஸ்கோபி கேமராவை செலுத்தி அங்குள்ள தொழிலாளர்களுடன் மீட்புக் குழுவினர் தொடர்பை ஏற்படுத்தியுள்ளனர்.
சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களின் முதல் காட்சி வெளியாகியது. சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்கள் ஒவ்வொருவரும் கேமரா முன் வரச்சொல்லி அடையாளம் கண்டு மீட்புக் குழு பேசியுள்ளது. மேலும், நேற்று முன்தினம் முதல் தொழிலாளர்களுக்கு சுடான உணவு வழங்கப்பட்டு வருகிறது. சுரங்கத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்க 2 அல்லது 15 நாட்கள் வரை ஆகும் என்று சொல்லப்பட்டு வருகிறது.
ஊடகங்களுக்கு அறிவுறுத்தல்:
இதனிடையே, சம்பவ இடத்திற்கு சென்று பல்வேறு செய்தி நிறுவனங்கள் அங்கிருந்து செய்திகளை வழங்கி வருகின்றன. இது தொடர்பாக மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் முக்கிய அறிவிப்பை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, "மீட்புப் பணிகள் குறித்து செய்திகள் வழங்கும்போது பொறுப்புணர்வுடன் செய்திகளை வழங்க வேண்டும். தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் செய்திகளை சுரங்கப்பாதையில் சிக்கி இருக்கும் தொழிலாளர்களின் குடும்பத்தினரும், உறவினர்களும் பார்த்துக் கொண்டிருப்பதை உணர்ந்து செய்திகளை வழங்க வேண்டும்.
பொதுமக்களுக்கு பயத்தை அல்லது அவநம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் செய்திகளை வழங்கக் கூடாது. குறிப்பாக, செய்தியின் தலைப்பு, வீடியோக்கள், புகைப்படங்களை வெளியிடும்போது கவனமாக செயல்பட வேண்டும். அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் செய்திகளை வெளியிடக் கூடாது. பரபரப்புச் செய்திகளை வெளியிடுவதில் ஊடகங்கள் எச்சரிக்கையாகவும், உணர்வுப்பூர்வமாகவும் இருக்க வேண்டும். மேலும், செய்தி சேகரிக்கும் ஆர்வத்தில், மீட்புப் பணிகளுக்கு எவ்வித தொந்தரவையும் யாரும் ஏற்படுத்தக் கூடாது" என்று மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும் படிக்க