Joshimath: தொடர்ந்து புதையும் ஜோஷிமத் நகரம்... அவசர கூட்டத்தை கூட்டிய பிரதமர் அலுவலகம்... என்னதான் நடக்கிறது..?
உத்தரகண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி, சனிக்கிழமையன்று ஜோஷிமத்திற்குச் சென்று நிலைமையை ஆய்வு செய்தார்.
பிரதமர் அலுவலகத்தில் அவசர கூட்டம்:
உத்தரகண்ட் மாநிலம் ஜோஷிமத் நகரின் பல பகுதிகளில் மண் பெயர்ந்து வருவதால் கட்டிடங்களில் தொடர் விரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால், மக்கள் பீதியின் உச்சத்தில் உள்ளனர். ஆன்மீகம் மற்றும் சுற்றுலாவுக்கு பெயர் போன ஜோஷிமத் நகரத்தில் இருந்து அரசு நிர்வாகம் மக்களை வெளியேற்றி வருகிறது.
இந்நிலையில், அவசர கூட்டத்திற்கு பிரதமர் அலுவலகம் அழைப்பு விடுத்துள்ளது. பிரதமர் மோடியின் முதன்மை செயலாளரான பி.கே. மிஸ்ரா தலைமையில் இந்த கூட்டம் நடைபெற உள்ளது.
அமைச்சரவை செயலாளர், மத்திய அரசின் மூத்த அதிகாரிகள், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் உறுப்பினர்கள் ஆகியோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு ஜோஷிமத் நிலவரம் குறித்து ஆலோசிக்க உள்ளனர்.
உத்தரகண்ட் மாநிலத்தின் மூத்த அதிகாரிகள், மாவட்ட அதிகாரிகள் உள்ளிட்டோரும் வீடியோ கான்பரன்சிங் மூலம் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளனர்.
புதையும் கிராமம்:
உத்தரகண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி, சனிக்கிழமையன்று ஜோஷிமத்திற்குச் சென்று நிலைமையை ஆய்வு செய்தார். இதையடுத்து, பாதிப்புக்கு உள்ளான 600 குடும்பங்களை நகரில் இருந்து வெளியேற்ற உடனடியாக உத்தரவிட்டார்.
ஆரம்பத்தில், நகரில் உள்ள பல்வேறு கோயில்கள், வீடுகளில் விரிசல் ஏற்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியது. விரிசல் நீண்டு கொண்டே சென்ற நிலையில் பல்வேறு கட்டிடங்கள் சரிந்து விழுந்தது. இம்மாதிரியாக நடப்பதற்கு காரணம் என்ன என தெரியாமல் மக்கள் குழம்பினர்.
இதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டு வருகிறது. மனிதர்களால் நிகழ்ந்த சுற்றுச்சூழல் மாற்றங்கள், இயற்கை போன்றவையே காரணம் என வாடியா இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹிமாலயன் ஜியாலஜியின் இயக்குனர் கலாசந்த் சான் தெரிவித்திருந்தார்.
என்ன காரணங்கள்..?
ஜோஷிமத் நகரம் தானாக புதைவதற்கான காரணத்தை விளக்கி பேசிய கலாசந்த், "ஜோஷிமத் பாதிப்புக்கு உள்ளாவதற்கு மூன்று அடிப்படை காரணங்கள் உள்ளன. நூற்றாண்டுக்கு முன்னர் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டு நிலச்சரிவின் இடிபாடுகளின் மீது உருவாக்கப்பட்டது ஒரு காரணம்.
பூகம்பங்கள் அதிகம் ஏற்படும் மண்டலத்தில் அமைந்திருப்பது இரண்டாவது காரணம். காலநிலை மாற்றம், காலபோக்கில் நிலத்தடியின் கீழ் பாயும் நீரால் கற்களின் பலம் குறைந்தது மூன்றாவது காரணம்.
நிலச்சரிவு இடிபாடுகளின் மேல் ஜோஷிமத் அமைந்திருப்பது பற்றி அட்கின்ஸ் முதன்முதலில் 1886இல் ஹிமாலயன் அரசிதழில் எழுதினார். பழைய புதைவு மண்டலத்தில் ஜோஷிமத் அமைந்திருப்பது பற்றி 1976ஆம் ஆண்டி மிஸ்ரா கமிட்டியில் குறிப்பிடப்பட்டது.
ஜோஷிமத் பத்ரிநாத்தின் நுழைவாயிலாக இருப்பதால், ஹேம்குந்த் சாஹிப், பனிச்சறுக்கு தலமான அவுலியில் ஆங்காங்கே கட்டுமானப் பணிகள் நீண்ட காலமாக நடைபெற்று வருகின்றன. கட்டுமான பணிகளால் ஏற்படும் அழுத்தம் குறித்து யாரும் யோசிக்கவில்லை. இதனால், வீடுகளில் விரிடல் ஏற்பட்டிருக்கலாம்"