Ayodhya Election Result 2024: அயோத்தியில் எடுபடாத பாஜகவின் ராமர் கோயில் வியூகம்: தட்டித்தூக்கிய சமாஜ்வாதி!
Ayodhya Lok Sabha Election Result 2024: ராமர் கோயில் அமைந்துள்ள அயோத்தி ஃபைசாபாத் தொகுதியில் சமாஜ்வாதி கட்சி சார்பில் அவதேஷ் பிரசாத் முன்னிலை வகித்து வருகிறார்.
நாடு முழுவதுமுள்ள 543 நாடாளுமன்ற மக்களவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடைபெற்றது. முதல் கட்டமாக தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள், புதுச்சேரி உட்பட 102 தொகுதிகளில், ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அதைதொடர்ந்து, மீதமுள்ள தொகுதிகளில் 6 கட்டங்களாக கடந்த ஜுன் 1ம் தேதி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த 7 கட்டங்களிலும் பதிவான வாக்குகள் இன்று காலை 8 முதல் எண்ணப்பட்டு வருகிறது.
அந்த வகையில் அயோத்தி ராமர் கட்டப்பட்டுள்ள ஃபைசாபாத் தொகுதியில் யாருக்கு வெற்றி என்பது மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் பெரிதும் கைக்கொடுக்கும் என பாஜக நம்பியுள்ளது. ஆனால் அயோத்தி இருக்கும் ஃபைசாபாத் தொகுதியில் வெற்றியை தீர்மானிப்பது அது மட்டுமல்ல என அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
ஃபைசாபாத் தொகுதியில், இஸ்லாமியர்கள், பட்டியலினத்தவர்கள் பெரும்பாளானோர் வசித்து வருகின்றனர். கடந்த 2 நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பாஜவை சேர்ந்த லல்லு சிங் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முக்கிய காரணம் கூட்டணி கட்சிகள் வலுவாக இருந்தது தான். இந்நிலையில் இம்முறையும் பாஜக தரப்பில் லல்லு சிங் வேட்பாளராக களம் இறக்கப்பட்டுள்ளார். இவருக்கு எதிராக சமாஜ்வாதி கட்சி தரப்பில் அவதேஷ் பிரசாத், பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் சச்சிதாந்த் பாண்டே களம் கண்டுள்ளனர். ஆனால் கடந்த இரண்டு தேர்தல்களை போல் இல்லாமல், அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி இம்முறை சற்று எழுச்சி பெற்றுள்ளது.
இந்நிலையில் இக்கட்சி சார்பில் நிறுத்தப்பட்டுள்ள அவதேஷ் பிரசாதிற்கு யாதவ் சமூகம் மற்றும் இஸ்லாமியர்களின் ஆதரவு உள்ளது. இத்தகைய சூழலில் ஃபைசாபாத் மக்களவைத் தொகுதியில் பாஜகவின் வெற்றி என்பது கேள்வி குறியாக உள்ளது. இன்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தற்போதைய நிலவரப்படி சமாஜ்வாதி கட்சியை சார்ந்த அவதேஷ் பிரசாத் முன்னிலை வகித்து வருகிறார். பாஜகவை சார்ந்த லல்லு சிங் 3,609 வாக்குகள் வித்தியாசத்தில் இரண்டாம் இடத்தில் உள்ளார்.