US Travel Advice: அச்சச்சோ.. இந்தியாவிற்கா போறீங்க, பேரை கெடுக்கும் அமெரிக்கா - வாய் திறக்காத பாஜக, மோடிக்கு துரோகம்?
US Travel Advice: இந்தியாவில் வன்முறை, பாலியல் தொல்லை மற்றும் தீவிரவாத பிரச்னைகள் அதிகரித்துள்ளதாக, அமெரிக்கர்களுக்கான பயண வழிகாட்டு நெறிமுறைகளில் அந்நாட்டு அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.

US Travel Advice: இந்தியாவிற்கு அமெரிக்க பெண்கள் யாரும் தனியாக செல்ல வேண்டாம் என, அந்நாட்டு அரசாங்கம் வழிகாட்டு நெறிமுறைகளில் எச்சரித்துள்ளது.
இந்திய பயணம் - லெவல் 2 எச்சரிக்கை
இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்ளும் அமெரிக்கர்களுக்கு அந்நாட்டு அரசாங்கம், லெவல் 2 பயண எச்சரிக்கைகளை விடுத்துள்ளது. இதன் மூலம் கூடுதல் கவனமாக இருக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் நிகழும் குற்றம் மற்றும் தீவிரவாத தாக்குதல்கள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, ஜுன் 16ன் தேதி வெளியிடப்பட்ட அறிக்கையில் அமெரிக்க உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. சில இடங்களில் ஆபத்து அதிகரிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.
அமெரிக்க சொல்லும் குற்றச்சாட்டுகள்:
அமெரிக்காவின் வழிகாட்டு நெறிமுறையில், “இந்தியாவில் பாலியல் வன்கொடுமை என்பது மிகவும் வேகமாக வளர்ந்து வரும் குற்றமாக உள்ளது. பாலியல் தொல்லை உள்ளிட்ட வன்முறைச் சம்பவங்கள் சுற்றுலா தளங்கள் உள்ளிட்ட பகுதிகளில் அரங்கேறுகின்றன. எந்தவித முன்னறிவிப்பும் இன்றி தீவிரவாதிகள் தாக்கலாம். அவர்கள் சுற்றுலா தளங்கள், போக்குவரத்து மையங்கள், வணிக வளாகங்கள் மற்றும் அரசு வசதிகளை குறிவைக்கலாம். தனியாக எங்கும் பயணிக்க வேண்டாம், குறிப்பாக பெண்ணாக இருந்தால் தனியாக பயணிப்பதை முற்றிலும் தவிருங்கள்” என எச்சரிக்கப்பட்டுள்ளது.
”ஊழியர்களுக்கு முன் அனுமதி”
மேலும், “ இந்திய கிராமப்புறங்களில் உள்ள அமெரிக்க குடிமக்களுக்கு அவசர சேவைகளை வழங்க அமெரிக்க அரசாங்கத்திற்கு குறைந்த வாய்ப்பே உள்ளது. இதில், கிழக்கு மகாராஷ்டிரா மற்றும் வடக்கு தெலுங்கானாவிலிருந்து மேற்கு மேற்கு வங்காளம் வரையிலான பகுதிகள் அடங்கும். ஆபத்துகள் காரணமாக, இந்தியாவில் பணிபுரியும் அமெரிக்க அரசு ஊழியர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல சிறப்பு அனுமதியை பெற வேண்டும்” என வலியுறுத்தப்பட்டுள்ளது.
கூடுதல் கவனத்துடன் இருக்கும் பகுதிகள்:
தொடர்ந்து, “ஜம்மு & காஷ்மீர், இந்தியா - பாகிஸ்தான் எல்லை, மத்திய மற்றும் கிழக்கு இந்தியாவின் சில பகுதிகளுக்கு செல்லும்போது கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். இந்தியாவின் சில மாநிலங்களின் தலைநகரங்களை தாண்டி பயணிக்க அமெரிக்க குடிமக்கள் முன் அனுமதி பெற வேண்டும்” என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. அதில்,
- பீகார்
- ஜார்கண்ட்
- சத்தீஸ்கர்
- மேற்குவங்காளம்
- மேகாலயா
- ஒடிஷா ஆகிய மாநிலங்கள் அடங்கும்.
வாய் திறக்காத பாஜக:
பிரதமர் மோடியும், அமெரிக்க அதிபர் ட்ரம்பும் சிறந்த நண்பர்கள் என பல இடங்களில் அவர்களே குறிப்பிட்டுள்ளனர். ஆனால், வரி விதிப்பு மற்றும் இந்தியா - பாகிஸ்தான் அமைதி உடன்படிக்கை ஆகியவற்றில், நட்பு நாட்டை போன்று இந்தியாவை ட்ரம்ப் நடத்தவில்லை என்பதே எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டாக உள்ளது. தற்போது, குற்றச்செயல்கள் நிறைந்த, பெண்களுக்கு பாதுகாப்பே இல்லாத நாடு இந்தியா என்பதை போல, அமெரிக்காவின் பயண வழிகாட்டு நெறிமுறைகள் அமைந்துள்ளன. இது நாட்டின் ஒட்டுமொத்த சுற்றுலா துறையையும் பாதிக்கும் வாய்ப்பை ஏற்படுத்துகிறது. உலக நாடுகளுக்கு இந்தியா மீதுள்ள நன்மதிப்பை கெடுக்கும் விதமாகவும் உள்ளது. ஆனால், இதுகுறித்து மத்திய அரசு தரப்பில் இருந்து தற்போது வரை எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.
திமுக கண்டனம்:
இதுதொடர்பாக தமிழ்நாடு அமைச்சர் மனோ தங்கராஜ் வெளியிட்டுள்ள கண்டன பதிவில், “இது மிகப்பெரும் வெட்கக்கேடு. இது உலக அரங்கில் இந்தியாவிற்கு பெரும் அவமானம், தலைகுனிவு. பிரதமர் மோடி தன்னால் இயன்றவரை இந்தியாவை அனைத்து தளங்களிலும் பின்னோக்கி இழுத்து கொண்டு செல்கிறார். 15 ஆண்டுகள் இந்த ஆட்சி தொடர்ந்தால் இந்தியா 50 ஆண்டுகள் பின்னோக்கி நகரும். மதக்கலவரம், கலாச்சார செருக்கு, வெறுப்பு பேச்சு, வீண் விளம்பரங்கள் போன்ற முட்டாள்தனங்களுக்கு பாஜக அரசு செலுத்தும் அக்கறையை நாட்டின் முன்னேற்றத்திலும், பாதுகாப்பிலும் காண்பிக்க வேண்டும்”என சாடியுள்ளார்.





















