UP Election 2022: : உ.பி.யில் உணவுத்துறை அமைச்சரும் ராஜினாமா...! அகிலேஷ் யாதவுடன் சந்திப்பு..! ஆட்டம் காணும் பா.ஜ.க...!
தரம்சிங் சைனியும் பாஜகவில் இருந்து விலகினார்
உத்தரபிரதேச சட்டசபை தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. 403 தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேசத்தின் சட்டசபை தேர்தல் வரும் பிப்ரவரி 10-ஆம் தேதி தொடங்க உள்ளது. ஆட்சியை பிடிப்பதற்காக ஆளுங்கட்சியான பா.ஜ.,க.விற்கும், அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சிக்கும் இடையே மிகப்பெரிய போட்டி நிலவி வருகிறது.
இந்த நிலையில், ஆளுங்கட்சியான பா.ஜ.க.வின் செல்வாக்கு கடந்த சில நாட்களாக தொடர்ந்து பின்னடைவைச் சந்தித்து வருகிறது. அம்மாநிலத்தின் அமைச்சர்களாக பொறுப்பு வகித்த சுவாமி பிரசாத் மெளரியா மற்றும் தாராசிங் சவுகான் ஏற்கனவே தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ள நிலையில், தற்போது மூன்றாவது ஒரு அமைச்சரும் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசின் ஆயுஷ், உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக அமைச்சராக பொறுப்பு வகித்தவர் தரம்சிங் சைனி. இவர் இன்று தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக கூறி, தனது ராஜினாமா கடிதத்தை முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கு அனுப்பியுள்ளமார். யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு தலித், பிற்படுத்தப்பட்டோர், விவசாயிகள், வேலையில்லாத இளைஞர்கள் மற்றும் சிறு வணிகர்களை கடுமையாக புறக்கணித்த காரணத்தாலே அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக தனது கடிதத்தில் கூறியுள்ளார்.
தரம்சிங் சைனி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பிறகு, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவை நேரில் சென்று சந்தித்துள்ளார். அகிலேஷ் யாதவும் தரம்சிங் சைனியை சந்தித்ததை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து, நான் உங்களை சமாஜ்வாதி கட்சிக்கு மனப்பூர்வமாக வரவேற்கிறேன் என்று பதிவிட்டுள்ளார். இதன்மூலம், அமைச்சர் தரம்சிங் சைனி சமாஜ்வாதியில் இணைந்திருப்பது உறுதியாகியுள்ளது.
சுவாமி பிரசாத் மெளரியா, தாராசிங் சவுகான் இருவரும் அம்மாநிலத்தில் மிகுந்த செல்வாக்கு மிகுந்தவர்கள். அவர்களது இழப்பே பா.ஜ.க.விற்கு பெரும் பின்னடைவு ஆகும். தற்போது, மூன்றாவதாக அமைச்சர் தரம்சிங் சைனியும் சமாஜ்வாதியில் இணைந்திருப்பது ஆளுங்கட்சிக்கு பலத்த அடியாகவே கருதப்படுகிறது.
அமைச்சர் தரம்சிங் சைனி மட்டுமின்றி ஷிகோகாபாத் எம்.எல்.ஏ. முகேஷ்வர்மாவும் தனது ராஜினாமா கடிதத்தை முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கு அனுப்பியுள்ளார். அவரும் பா.ஜ.க. அரசு தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எதிராக செயல்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.
இவர்கள் மட்டுமின்றி பா.ஜ.க.வின் உறுப்பினர்களான ரோஷன் லால் வர்மா, பிரிஜேந்திர பிரஜாபதி, பகவதி சரண் சாகர், வினய் சாக்யா மற்றும் அவதார் சிங் பதான, பாலபிரசாத் அவஸ்தி ஆகியோரும் கட்சியில் இருந்து விலகியுள்ளனர். இவர்களில் நான்குமுறை எம்.எல்.ஏ.வான பாலபிரசாத் அவஸ்தி அம்மாநில பிராமண சமுதாயத்தினர் இடையே மிகுந்த செல்வாக்கு மிகுந்தவராக காணப்படுகிறார். அவரும் நேற்று அகிலேஷ் யாதவை சந்தித்து பேசியுள்ளார்.
தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதம் கூட இல்லாத சூழலில், பா.ஜ.க. அமைச்சர்களும், உறுப்பினர்களும் தங்களது பதவியை ராஜினாமா செய்வதும், சமாஜ்வாதியில் இணைவதும் பா.ஜ.க. மாநில தலைமைக்கும், தேசிய தலைமைக்கும் கடுமையான பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்