![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Marital Rape : `திருமணங்களை வன்முறையாக சித்தரிக்கக்கூடாது!’ - மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி
`பெண்களையும் குழந்தைகளையும் பாதுகாப்பது முக்கியம் என்றாலும், எல்லா திருமணங்களையும் வன்முறையாக சித்தரிப்பதை ஏற்க முடியாது’ என மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.
![Marital Rape : `திருமணங்களை வன்முறையாக சித்தரிக்கக்கூடாது!’ - மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி Union Minister Smriti Irani says that marriage must not been seen violent to a question on criminalising marital rape Marital Rape : `திருமணங்களை வன்முறையாக சித்தரிக்கக்கூடாது!’ - மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/04/56f4e1d752a8acb2258f3771674f6bdc_original.png?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
`பெண்களையும் குழந்தைகளையும் பாதுகாப்பது முக்கியம் என்றாலும், எல்லா திருமணங்களையும் வன்முறையாகவும், அனைத்து ஆண்களையும் வன்கொடுமை குற்றவாளிகளாகவும் சித்தரிப்பதை ஏற்க முடியாது’ என மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார். கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் பினாய் விஸ்வம் திருமணத்திற்குப் பிறகு கணவர்களால் பெண்கள் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுவது குறித்து குற்றச் சட்டம் உருவாக்குவது பற்றி எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
`இந்த நாட்டின் ஒவ்வொரு திருமணத்தையும் வன்முறையானதாகவும், ஒவ்வொரு ஆணையும் வன்கொடுமை குற்றவாளியாகவும் கண்டிப்பதை இந்த நாடாளுமன்றத்தில் ஏற்க முடியாது’ என்று மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார். மாநிலங்களவை உறுப்பினர் பினாய் விஸ்வம் எழுப்பிய கேள்வியில், குடும்ப வன்முறை, பாலியல் வன்கொடுமை ஆகிய வழக்குகளை இணைத்து அதுகுறித்து அரசுக்குத் தெரிந்த தகவல்களைக் கோரியுள்ளார். எனினும், மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி இந்த விவகாரம் குறித்து தொடர்ந்து பேசுவதற்கு மறுத்துள்ளார்.
![Marital Rape : `திருமணங்களை வன்முறையாக சித்தரிக்கக்கூடாது!’ - மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/04/de030a9933f864129419dfd43da6c327_original.jpg)
`நாட்டில் சுமார் 30 உதவி மையங்கள் இயங்கி 66 லட்சம் பெண்களுக்கு உதவி வழங்கியுள்ளன. நாட்டில் சுமார் 703 ஒன் ஸ்டாப் செண்டர்கள் மூலமாக 5 லட்சம் பெண்களுக்கு உதவி வழங்கப்பட்டுள்ளது. பெண்களையும், குழந்தைகளையும் பாதுகாப்பிற்கு நம் நாட்டில் அதிக முக்கியத்துவம் வழங்கப்படுகிறது’ என மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறியுள்ளார்.
View this post on Instagram
கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த எம்.பி பினாய் விஸ்வம் தொடர்ந்து ஸ்மிருதி இரானி பேசுவது அவையைத் தவறாக வழிநடத்துவதாகவும், திருமணத்திற்குப் பிறகு கணவர்களால் பெண்கள் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படும் விவகாரத்தை சுருக்குவதாகவும், நாடு முழுவதும் இந்தக் குற்றத்தால் பாதிக்கப்படும் எண்ணற்ற பெண்களை இழிவுபடுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.
தற்போது டெல்லி உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் ராஜிவ் சக்தேர், ஹரி ஷங்கர் ஆகியோர் 2015ஆம் ஆண்டு ஆர்.ஐ.டி ஃபவுண்டேஷன் என்ற அரசுசாரா தொண்டு நிறுவனம், அனைத்து இந்திய ஜனநாயக்ப் பெண்கள் சங்கம், இரு தனிநபர்கள் ஆகியோர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனு மீது விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த மனுவில் திருமணத்திற்குப் பிறகு கணவர்களால் பெண்கள் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுவதைக் குற்றமாகக் கருத வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.
இந்திய குற்றவியல் சட்டத்தின் 375வது சட்டப்பிரிவின் இரண்டாவது விதிவிலக்காக 15 வயதுக்கு அதிகமான தன் மனைவியுடன் ஆண் பாலியல் உறவு கொள்வதை வன்கொடுமை என ஏற்க முடியாது எனக் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)