CAPF: மத்திய காவல் படைகளில் என்னென்ன பிரிவுகள்..? ஒவ்வொரு தேர்விற்கும் என்னென்ன வித்தியாசம்..? ஓர் விரிவான அலசல்..!
மத்திய காவல் படைகளில் சிஏபிஎஃப், சிஆர்பிஎஃப், சிஐஎஸ்எஃப் உள்ளிட்ட பல்வேறு படைகள் செயல்பட்டு வருகின்றன. அவற்றின் பணிகள் என்ன? அவற்றுக்கு இடையேயான வித்தியாசங்கள் என்ன ?
மத்திய காவல் படைகளில் சிஏபிஎஃப், சிஆர்பிஎஃப், சிஐஎஸ்எஃப் உள்ளிட்ட பல்வேறு படைகள் செயல்பட்டு வருகின்றன. அவற்றின் பணிகள் என்ன? அவற்றுக்கு இடையேயான வித்தியாசங்கள் என்ன ? பார்க்கலாம்.
மத்திய காவல் படை:
சி.ஏ.பி.எஃப். என்று அழைக்கப்படும் மத்திய ஆயுத காவல் படை இந்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின்கீழ் செயல்பட்டு வருகிறது. இது இந்திய தேசத்தின் பாதுகாப்பை உறுதிசெய்ய ஏற்படுத்தப்பட அமைப்பாகும். மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் சட்டம் - ஒழுங்கைப் பாதுகாக்கவும் சிஏபிஎஃப் செயல்பட்டு வருகிறது. அதேபோல எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பை உறுதி செய்யவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆரம்ப காலங்களில் துணை ராணுவம் என்று ( Central Para-Military Forces -CPMF) அழைக்கப்பட்டு வந்த சிஏபிஎஃப், 2011 முதல் மத்திய ஆயுத காவல் படை என்று அழைக்கப்படுகிறது.
மத்திய ஆயுத காவல் படை, இந்திய ராணுவம் மற்றும் காவல்துறையுடன் இணைந்து செயல்படுகிறது. இதன் அதிகாரிகள், இந்திய அளவு அமைப்பான ரா (RAW), சிறப்பு பாதுகாப்பு அமைப்பு (SPG), தேசிய புலனாய்வு நிறுவனம் (NIA), புலனாய்வு அமைப்பு (IB), மத்திய புலனாய்வு அமைப்பு (CBI), தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF), போதைப்பொருள் கட்டுப்பாட்டு அமைப்பு (NCB) மாநில ஆயுதக் காவல் படை (ஜார்கண்ட் ஜாகுவார்ஸ், பிஹார் ராணுவப் படை, உ.பி./ ம.பி. எஸ்டிஎஃப், DRG, IRB, சத்தீஸ்கர் ஆயுதப்படை போலீஸ் போன்றவை) ஆகிய அமைப்புகளில் முக்கியப் பங்காற்றி வருகின்றனர்.
என்னென்ன பிரிவுகள்?
மத்திய ஆயுத காவல் படை 7 வகையான படைப் பிரிவுகளைக் கொண்ட அமைப்பாகும். இதன்படி,
* மத்திய ரிசர்வ் காவல் படை (சிஆர்பிஎஃப்),
* மத்திய தொழில் பாதுகாப்பு படை (சிஐஎஸ்எஃப்),
* எல்லைப் பாதுகாப்பு படை (பிஎஸ்எஃப்),
* இந்தோ- திபெத்தியன் எல்லை படை (ஐடிபிபி),
* தேசிய பாதுகாப்பு காவல் (என்எஸ்ஜி),
* சாஸ்த்ரா சீமா பால் (எஸ்எஸ்பி)
* அசாம் ரைஃபிள்ஸ் ஆகிய படைகள் செயல்பட்டு வருகின்றன.
எல்லை பாதுகாப்பு படைகள்
இதில், அசாம் ரைஃபிள்ஸ் மற்றும் எல்லைப் பாதுகாப்பு படை ஆகிய படைகள் எல்லை பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்டவை. இந்தோ- திபெத்தியன் எல்லைப் படை இந்திய - சீன எல்லை பாதுகாப்புக்காக அமைக்கப்பட்ட ஒன்றாகும்.
அதேபோல சாஸ்த்ரா சீமா பால் என்று அழைக்கப்படும் ஆயுத எல்லைப் படை (Armed Border Force) இந்திய - நேபாள் எல்லை மற்றும் இந்திய - பூடான் எல்லைகளில் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டுள்ள படை ஆகும். இதில் 67 பட்டாலியன்களுடன் 76,337 பேர் பணியாற்றி வருகின்றனர்.
மத்திய ரிசர்வ் காவல் படை (சிஆர்பிஎஃப்)
சிஏபிஎஃப் அமைப்பில் இருக்கும் படைகளிலேயே மிகப் பெரிய படைகளில் ஒன்று சிஆர்பிஎஃப் ஆகும். இதில் 247 பட்டாலியன்களுடன் 3,13,678 பேர் பணியாற்றி வருகின்றனர்.
சிஆர்பிஎஃப்ஃபில் விரைவு நடவடிக்கை படை மற்றும் கோப்ரா (Commando Battalion for Resolute Action - COBRA) படைகளும் உள்ளன. இதில் ஆர்ஏஎஃப் எனப்படும் விரைவு நடவடிக்கை படை, மதவெறி வன்முறைகளுக்கு எதிர்வினை ஆற்றும் வகையில் 15 பட்டாலியன்களுடன் செயல்பட்டு வருகிறது. நக்சல்களை ஒடுக்குவதற்காக 10 பட்டாலியன்களுடன் கோப்ரா படை செயல்பட்டு வருகிறது.
மத்திய தொழில் பாதுகாப்பு படை (சிஐஎஸ்எஃப்)
உலகத்திலேயே மிகப்பெரிய தொழில் பாதுகாப்பு படைகளில் ஒன்று மத்திய தொழில் பாதுகாப்பு படை ஆகும். இது பொதுத் துறை நிறுவனங்கள், பிரதான விமான நிலையங்கள் உள்ளிட்டவற்றுக்கு பாதுகாப்பு அளிக்கிறது. தேர்தல் நேரங்களில் பாதுகாப்பு அளிப்பதும் சிஐஎஸ்எஃப் பணி ஆகும், விவிஐபி-க்களின் பாதுகாப்பும் சிஐஎஸ்எஃப் வசம் உள்ளது. இந்தப் படையில் 132 பட்டாலியன்களுடன் 1,44,418 பணியாற்றி வருகின்றனர்.
தேசிய பாதுகாப்புப் படை (National Security Guard)
கறுப்புப் பூனைகள் என்று பொதுவாக அழைக்கப்படுபவையே தேசிய பாதுகாப்பு படை ஆகும். தீவிரவாதத்துக்கு எதிராக இந்தப் படை செயல்படுகிறது. தேசிய பாதுகாப்புப் படை சட்டம், 1986-ன் கீழ் இந்தப் படை உருவாக்கப்பட்டது. சிஏபிஎஃப்ஃபின் பிற படைகளில் இருந்து இதற்கு அதிகாரிகள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
தேர்வு எப்படி?
மத்திய ஆயுதக் காவல் படையான சிஏபிஎஃப் அமைப்பில் உள்ள அனைத்துப் படைகளுக்கான தேர்வுகள், எஸ்எஸ்சி எனப்படும் ஆட்களை தேர்வு செய்யும் தேர்வு மையத்தால் நடத்தப்படுகின்றன. இந்தத் தேர்வுகள் அனைத்தும் ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய இரு மொழிகளில் மட்டுமே நடத்தப்பட்டு வருகின்றன.
இதற்கிடையே மத்திய ரிசர்வ் காவல் படையின், 9,223 காவலர் Constable (GD) பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு தற்போது நடைபெற உள்ளது. இப்பணிகளுக்கான போட்டித் தேர்வுகள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. மொத்தமுள்ள காலிப் பணியிடங்களில் 579 பணியிடங்கள் தமிழ்நாட்டில் நிரப்பப்படவுள்ளன. தமிழ்நாட்டில் 12 மையங்களில் இந்தத் தேர்வு நடைபெற உள்ளது.
தாய்மொழியில் எழுத முடியாத நிலை
ஆண்டாண்டு காலமாக இந்தத் தேர்வுகள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே நடத்தப்பட்டு வருகின்றன. இதனால் தமிழ்நாட்டில் இருந்து இந்த தேர்வுக்கு விண்ணப்பிப்போர் சொந்த மாநிலத்திலேயே தங்கள் தாய்மொழியில் தேர்வினை எழுத முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்குக் கடிதம் எழுதினார். அதேபோல தமிழக அமைச்சரும் திமுக இளைஞரணித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின், போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் சிஏபிஎஃப் தேர்வு தமிழ் உள்ளிட்ட 13 மாநில மொழிகளிலும் ஆங்கிலம் மற்றும் இந்தியிலும் நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த நடைமுறை 2024 ஜனவரி 1ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.