தேசத்துரோக சட்டத்தை மீள்பரிசீலனைக்கு உட்படுத்தும் மத்திய அரசு.. உச்சநீதிமன்றத்தில் தகவல்!
இந்திய அரசியலமைப்பில் சட்டப்பிரிவு 124ஏ என்ற தேசத்துரோக சட்டத்தை மீண்டும் பரிசீலனை செய்து அதன் பயன்பாட்டை மேற்கொள்வது குறித்து ஆலோசிக்கப்படும் என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இந்திய அரசியலமைப்பில் சட்டப்பிரிவு 124ஏ என்ற தேசத்துரோக சட்டத்தை மீண்டும் பரிசீலனை செய்து அதன் பயன்பாட்டை மேற்கொள்வது குறித்து ஆலோசிக்கப்படும் என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
தேசத்துரோக சட்டமான சட்டப்பிரிவு 124ஏ மீது எதிர்த்து தொடுக்கப்பட்டுள்ள மனுக்களின் மீதான விசாரணையை மேற்கொள்ள வேண்டாம் என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளதோடு, இந்தச் சட்டம் பிரிட்டிஷ் ஆட்சியில் கொண்டு வரப்பட்டதால் அதன் செல்லுபடியாகும் காலம் குறித்து பரிசீலித்து வருவதாக தெரிவித்துள்ளது.
கடந்த மே 7 அன்று, உச்ச நீதிமன்றத்தில் தேசத்துரோக வழக்கிற்கு ஆதரவாக வாதாடிய மத்திய அரசு, தற்போது அதற்கு நேரெதிரான நிலைப்பாட்டை எடுத்திருப்பது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த மே 7 அன்று, தேசத்துரோக வழக்கு நீடிக்க வேண்டும் எனக் கூறிய மத்திய அரசு, கடந்த 1962ஆம் ஆண்டு அரசியலமைப்பு அமர்வு இந்தச் சட்டப்பிரிவு நீடிக்கலாம் எனக் கூறியதைச் சுட்டிக் காட்டியுள்ளது. மேலும், கடந்த 60 ஆண்டுகளாக இந்தச் சட்டம் அமலில் இருப்பதைச் சுட்டிக் காட்டியதோடு, சில சம்பவங்களில் இந்தச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்பட்டிருந்தாலும், அதனை மீள்பரிசீலனை செய்வதற்கான காரணமாக இது அமையாது எனவும் மத்திய அரசு கடந்த வாரம் தெரிவித்திருந்தது.
தற்போது புதிதாக மனுத் தாக்கல் செய்துள்ள மத்திய அரசு, அந்த மனுவில், இந்தியா தற்போது சுதந்திரம் அடைந்த 75வது ஆண்டை நெருங்கி வருவதாகவும், `அசாதி கா அம்ரித் மஹோத்சவ்’ என்ற பெயரில் இந்த நிகழ்வு கொண்டாடப்படும் போது, காலனிய காலத்தின் சுமைகளைக் கைவிட வேண்டும் எனக் கூறியிருப்பது பழைய சட்டங்களுக்கும் பொருந்தும் எனக் கூறியுள்ளது.
தேசத்துரோகம் குறித்து பல்வேறு தரப்புகளின் வெவ்வேறு அரசியல் பார்வைகள் குறித்தும் மத்திய அரசு முழுமையாக தெரிந்து வைத்திருப்பதாகவும், இந்தச் சட்டத்தை மீள்பரிசீலனை செய்யும் போது, குடிமக்கள் சுதந்திரம், மனித உரிமைகள் முதலான விவகாரங்கள் காரணமாக எழும் கோரிக்கைகளையும் கணக்கில் கொள்ளப் போவதாகவும் இந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த மீள்பரிசீலனை மேற்கொள்ளும் போது நாட்டின் ஒருமைப்பாடும், இறையாண்மையும் பாதுகாக்கப்படும் தன்மையோடு மேற்கொள்ளப்படும் எனவும் மத்திய அரசு கூறியுள்ளது.
தேசத்துரோக வழக்கில் பிணை வழங்கப்படாத காரணத்தால், இந்தியாவில் அரசு மீதான அதிருப்தியை வெளிப்படுத்துவது இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவதையும், ஆயுள் தண்டனையை வழங்கக்கூடியதாக இருப்பதையும் சுட்டிக்காட்டி பல்வேறு தரப்பினரும் தேசத்துரோக வழக்கு நடைமுறைப்படுத்தப்படுவதை எதிர்த்து வருகின்றனர். கடந்த 2021ஆம் ஆண்டு, ஜூலை மாதம், எடிட்டர்ஸ் கில்ட் ஆஃப் இந்தியாவும், முன்னாள் ராணுவ ஜெனரல் எஸ்.ஜி.வோம்பாட்கரே ஆகியோர் இந்தச் சட்டத்திற்கு எதிராக மனுத்தாக்கல் செய்த போது, தேசத்துரோக சட்டம் தவறுதலாக பயன்படுத்தப்படுவதைத் தடுப்பதே தனது முதன்மைப் பணி என உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.