(Source: ECI/ABP News/ABP Majha)
Fast Track Courts: 389 போக்சோ விரைவு சிறப்பு நீதிமன்றங்களை, மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்க மத்திய அரசு முடிவு
பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு இந்தச் சட்டத்தின் மூலம் மரண தண்டனையும் விதிக்கப்படும். விரைவு சிறப்பு நீதிமன்றங்கள் உருவாவதற்கு இதுவே காரணமாக அமைந்தது.
மத்திய அரசின் நிதி ஆதரவுத் திட்டமான, விரைவு சிறப்பு நீதிமன்றங்களை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இதுகுறித்து மத்திய அமைச்சரவை வெளியிட்ட செய்திக் குறிப்பில், "ரூ.1572.86 கோடி மதிப்பில் (மத்திய அரசின் பங்கு ரூ. 971.70 கோடி மற்றும் மாநில அரசின் பங்கு ரூ. 601.16 கோடி) 389 பிரத்யேக போக்சோ நீதிமன்றங்கள் அடங்கிய 1023 விரைவு நீதிமன்றங்களுக்கு 01.04.2021 முதல் 31.03.2023 வரை மத்திய அரசின் நிதி உதவியைத் தொடர்ந்து அளிக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
நிர்பயா நிதியிலிருந்து மத்திய அரசின் பங்கு வழங்கப்படவுள்ளது. இந்தத் திட்டம் 02.10.2019 அறிமுகப்படுத்தப்பட்டது.
பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்கு அரசு தொடர்ந்து அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. பெண் குழந்தைகளுக்கு அதிகாரம் அளிப்பதற்காக ‘பெண் குழந்தைகளை பாதுகாப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்’ போன்ற திட்டங்களை அரசு ஏற்கனவே செயல்படுத்தி வருகிறது. 12 வயதிற்குட்பட்ட குழந்தைகள் மற்றும் 16 வயதிற்குட்பட்ட பெண்களின் மீது நடத்தப்படும் பாலியல் பலாத்கார சம்பவங்கள், ஒட்டுமொத்த நாட்டை உலுக்கியுள்ளது. இதுபோன்ற சம்பவங்களும், குற்றம்சாட்டப்பட்டவர்களின் நீண்டகால விசாரணைகளும் பிரத்யேக நீதிமன்ற முறை ஏற்படுவதற்கு காரணமாக இருந்தன. இதன் மூலம் விசாரணை விரைவுபடுத்தப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கப்படும்.
வழக்குகளை துரிதமாக விசாரிக்கவும், விரைவாக முடித்து வைக்கவும் கிரிமினல் சட்டம் (திருத்தி அமைக்கப்பட்டது), 2018-ஐ மத்திய அரசு கொண்டு வந்தது. பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு இந்தச் சட்டத்தின் மூலம் மரண தண்டனையும் விதிக்கப்படும். விரைவு சிறப்பு நீதிமன்றங்கள் உருவாவதற்கு இதுவே காரணமாக அமைந்தது.
துரிதமாக நீதி வழங்கப்படுவதை உறுதி செய்வதற்காக விரைவு சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சாதாரண நீதிமன்றங்களுடன் ஒப்பிடுகையில், வழக்குகளை முடித்து வைப்பதில் இந்த சிறப்பு நீதிமன்றங்கள் திறம்பட செயல்படுகின்றன. பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நீதி வழங்கப்படுவதுடன் பாலியல் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு தண்டனை அளிக்கும் முறையும் வலுப்படுத்தப்படுகிறது.
தற்போது 28 மாநிலங்களில் செயல்படும் இந்த திட்டத்தை, விரைவில் அனைத்து 31 மாநிலங்களுக்கும் விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. தொலைதூரப் பகுதிகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் உரிய காலத்தில் நீதி வழங்கும் மாநில/ யூனியன் பிரதேச அரசுகளின் முயற்சிகளுக்கு இந்தத் திட்டம் ஆதரவளிக்கிறது" என்று தெரிவிக்கப்பட்டது.
போக்சோ சட்டத்தின் கீழ் சிறப்பு நீதிமன்றங்கள்:
பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் (The Protection of Children from Sexual Offences (POCSO) Act,) போக்ஸோ சட்டம் 2012ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. விரைவான விசாரணைக்கு சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க இச்சட்டம் வழிவகை செய்கிறது. இச்சட்டத்தின்படி, சிறப்பு நீதிமன்றம் வழக்கை விசாரணைக்கு எடுத்த 30 நாட்களுக்குள், குழந்தையின் சாட்சியத்தை பதிவு செய்ய வேண்டும். இதன் விசாரணையை சிறப்பு நீதிமன்றம் கூடிய விரைவில் அல்லது ஓராண்டுக்குள் நிறைவு செய்ய வேண்டும். குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை கிடைக்கும் வகையில் இச்சட்ம் 2019ம் ஆண்டு திருத்தப்பட்டது.
போக்சோ சட்டத்தின் கீழ் சிறப்பு நீதிமன்றங்கள் மூலம், 2021 மே மாதம் வரை நிலுவையில் இருந்த 50,484 வழக்குகள் முடிக்கப்பட்டுள்ளதாக மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார். மக்களவையில் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்த பதிலில் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும், வாசிக்க:
TN Budget: PTR வெளியிடப்போகும் வெள்ளை அறிக்கையில் என்ன இருக்கும்... வெள்ளை அறிக்கை என்றால் என்ன?
Online Rummy Games: ஆன்லைன் ரம்மிக்கு தடை: வருகிறது புதிய சட்டம்! - அமைச்சர் தகவல்