Punjab Attack: பஞ்சாப் தாக்குதல்.. தமிழகத்தை சேர்ந்த 2 ராணுவ வீரர்கள் வீர மரணம்.. இரங்கல் தெரிவித்த ராமதாஸ்
பஞ்சாப் மாநிலம் பதிண்டா பகுதியில் நடைபெற்ற தாக்குதலில் உயிரிழந்த 4 ராணுவ வீரர்களில், இரண்டு பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.
பஞ்சாப் மாநிலம் பதிண்டா பகுதியில் நடைபெற்ற தாக்குதலில் உயிரிழந்த 4 ராணுவ வீரர்களில், இரண்டு பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது. அவர்கள் தேனி மற்றும் சேலத்தை சேர்ந்தவர்கள் ஆகும்.
ராணுவ முகாமில் துப்பாக்கிச்சூடு:
நாட்டின் மிக பெரிய ராணுவ முகாமான பதிண்டா ராணுவ முகாம், சண்டிகர்-ஃபாசில்கா பாதையில் தேசிய நெடுஞ்சாலை 7-இல் அமைந்துள்ளது. இந்நிலையில் அந்த முகாமில் நேற்று அதிகாலை அடையாளம் தெரியாத நபர்களால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதையடுத்து, ராணுவ முகாம் அதிரடிப்படையினரால் முழுமையாக சுற்றி வளைக்கப்பட்டு, தேடுதல் வேட்டை நடைபெற்றது. அப்போது, ராணுவ முகாமில் 4 வீரர்கள் துப்பாக்கி குண்டுகள் துளைத்து உயிரிழந்து கிடந்தனர். அவர்கள் அனைவரும் பீரங்கிப் படையை சேர்ந்தவர்கள் என தெரிய வந்தது. இந்த சம்பவம் தொடர்பாக அடையாளம் தெரியாத இரண்டு பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
2 தமிழக வீரர்கள் வீரமரணம்:
இந்நிலையில், உயிரிழந்த வீரர்கள் யார் என்பது தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, உயிரிழந்த 4 பேரில் இருவர் தமிழகத்தை சேர்தவர்கள் என தெரிய வந்துள்ளது. அவர்களில் ஒருவர் சேலம் மாவட்டம் பனங்காடு பகுதியை சேர்ந்த கமலேஷ் எனவும், மற்றொருவர் தேனி மாவட்டம் மூணாண்டிபட்டி பகுதியை சேர்ந்த லோகேஷ்குமார் என்பதும் தெரிய வந்துள்ளது.
ராமதாஸ் இரங்கல்:
தமிழக வீரர்களின் மரணம் தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில் ”பஞ்சாப் மாநிலம் பதிண்டா போர்ப்படை முகாமில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு தாக்குதலில் வீரச்சாவு அடைந்த வீரர்கள் சேலம் பனங்காடு கமலேஷ், தேனி மாவட்டம் மூணாண்டிபட்டி லோகேஷ்குமார் உள்ளிட்ட நால்வர் கொல்லப்பட்டது அதிர்ச்சியளிக்கிறது. அவர்களுக்கு பாட்டாளி மக்கள் கட்சி வீரவணக்கம் செலுத்துகிறது! துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட வீரர்களின் குடும்பங்களுக்கு இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த வீரச்சாவுகள் போர்க்காலத்தில் நிகழ்ந்ததாகக் கருதி அவர்களின் குடும்பங்களுக்கு ரூ.20 லட்சம் இழப்பீடும், அவர்களின் குடும்பங்களில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும்!” என வலியுறுத்தப்பட்டுள்ளது.
”பயங்கரவாத தாக்குதல் கிடையாது”
”பதண்டா ராணுவ முகாமில் தீவிரவாத தாக்குதல் எதுவும் நடைபெறவில்லை. ராணுவ முகாமில் இருந்த வீரர், சக வீரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதில், 4 வீரர்கள் உயிரிழந்தனர். 2 நாட்களுக்கு முன்பு ராணுவ முகாமில் ஒரு இன்சாஸ் துப்பாக்கி, 28 குண்டுகள் மாயமாகின. அதற்கும், இச்சம்பவத்துக்கும் தொடர்பு இருக்கலாம் என தெரிகிறது. இதன் பின்னணியில் ராணுவ வீரர்கள் சிலர் இருக்கலாம் என்ற சந்தேகமும் உள்ளது” என பஞ்சாப் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”துப்பாக்கிச்சூடு சம்பவம் துரதிர்ஷ்டவசமானது. இச்சம்பவம் தொடர்பாக யாரும் வதந்தி பரப்ப வேண்டாம். ஊடகங்கள், ஊகத்தின் அடிப்படையில் செய்தி வெளியிட வேண்டாம்” என வலியுறுத்தப்பட்டது.