விமானப்படை பெண் அதிகாரி வழக்கு | இருவிரல் பரிசோதனை நடத்தப்படவில்லை: விமானப்படை தலைவர் சவுத்ரி
கோவை பெண் அதிகாரி விவகாரத்தில் அவருக்கு சர்ச்சைக்குரிய இருவிரல் பரிசோதனை செய்யப்படவில்லை. விமானப்படை சட்டங்களைப் பொருத்தவரை இத்தகைய விவகாரங்கள் மிகக் கடுமையாகப் பின்பற்றப்படும்.
கோவையில் விமானப்படை பெண் அதிகாரி ஒருவர் தன்னை உயரதிகாரி பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் அதனை உறுதி செய்ய தனக்கு சர்ச்சைக்குரிய இருவிரல் பரிசோதனை நடத்தப்பட்டதாகவும் புகார் செய்த விவகாரத்தில், விமானப்படைத் தலைவர் ஏர் சீஃப் மார்ஷல் தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார்.
இது குறித்து விமானப்படைத் தலைவர் வி.ஆர்.சவுத்ரி, "கோவை பெண் அதிகாரி விவகாரத்தில் அவருக்கு சர்ச்சைக்குரிய இருவிரல் பரிசோதனை செய்யப்படவில்லை. விமானப்படை சட்டங்களைப் பொறுத்தவரை இத்தகைய விவகாரங்கள் மிகக் கடுமையாகப் பின்பற்றப்படும். பெண் அதிகாரி பாலியல் பலாத்கார சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படுகிறது. விசாரணையின் முடிவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறியுள்ளார்.
இருவிரல் பரிசோதனையும் சர்ச்சையும்:
இருவிரல் பரிசோதனை என்பது பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மருத்துவர்கள் நடத்தும் ஒருவித சோதனை. இரண்டு விரல்களை பாதிக்கப்பட்ட பெண்ணின் பிறப்புறுப்பில் செலுத்தி, அவரது பிறப்புறுப்புப் பகுதியில் தெரியும் மாற்றங்களை வைத்து அவர் வன்புணர்வுக்கு தான் உட்படுத்தப்பட்டாரா அல்லது இருவரும் மனம் ஒத்தே உறவு கொண்டனரா என்று அறிக்கை அளிக்க பயன்படுத்தப்பட்ட ஒரு முறை. இது அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்படவில்லை. இந்த சோதனையின் மூலம் ஒரு பெண்ணின் விருப்பத்துக்கு மாறாக வன்புணர்வு நடந்ததா என்றெல்லாம் கூற முடியாது. மேலும் இது பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மேலும் மன உளைச்சலையே ஏற்படுத்தும் என்று கூறி உச்ச நீதிமன்ற இந்த நடைமுறைக்கு தடை விதித்தது. இந்நிலையில், விமானப்படை மருத்துவமனையில் தனக்கு இத்தகைய பரிசோதனை செய்யப்பட்டு மன உளைச்சல் ஏற்படுத்தப்பட்டதாக பெண் அதிகாரி கூறியிருந்தார். ஆனால் அதனை விமானப்படைத் தலைவர் திட்டவட்டமாக மறுத்திருக்கிறார்.
நடந்தது என்ன?
கோவை பந்தய சாலை பகுதியில் விமானப் படை பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மைரத்தில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 30 பேர் பயிற்சிக்காக வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த செப்டம்பர் 10-ஆம் தேதி தன்னை சக அதிகாரி பாலியல் வன்கொடுமை செய்ததாக, 29 வயதான பாதிக்கப்பட்ட பெண் அதிகாரி ஒருவர் விமானப்படை பயிற்சி கல்லூரி அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார். விளையாட்டின் போது காயமடைந்த அவர், தனது அறைக்கு சென்ற போது பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்க தாமதமாகி வந்ததால், பாதிக்கப்பட்ட பெண் அதிகாரி கோவை காவல் துறையிடம் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில்அமிர்தேஷ் மீது ஐபிசி 376 பிரிவின் கீழ் காந்திபுரம் அனைத்து மகளிர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த நிலையில் கோவை விமானப் படை கல்லூரியில் பயிற்சியில் இருந்த லெப்டினல் அமிர்தேஷ் என்ற விமானப் படை அதிகாரியை கோவை காவல் துறையினர் கைது செய்தனர். அதிகாரி லெப்டினல் அமிர்தேஷ் நீதிபதி இல்லத்திற்கு அழைத்து செல்லப்பட்டு ஆஜர் செய்யப்பட்டார். விமான படை அதிகாரி மீது கோவை காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க முடியாது என அமிர்தேஷ் தரப்பு வழக்கறிஞர் அபிடவிட் தாக்கல் செய்தார். கோவை காவல் துறை பதில் அபிடவிட் தாக்கல் செய்ய அவகாசம் கேட்ட நிலையில், விமானப் படை அதிகாரி லெப்டினல் அமிர்தேஷை ஒரு நாள் மட்டும் ரிமாண்ட் செய்ய நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
இதனையடுத்து லெப்டினல் அமிர்தேஷை உடுமலை கிளை சிறையில் காவல் துறையினர் அடைத்தனர். இதனிடையே இந்திய விமானப்படை கல்லூரியில் பெண் அதிகாரி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில், கோவை மாநகர காவல்துறையின் நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் எனவும், தவறிழைத்த அதிகாரி மீது குழு அமைத்து விசாரணை நடத்தி துறை ரீதியான நடவடிக்கை எடுக்கும் பணிகள் தொடங்கியுள்ளது என விமான படை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.