Turkey Earthquake : நிலநடுக்கத்தால் நிலைகுலைந்த துருக்கி.. பதறி தலைதூக்கிய மனிதநேயம்.. உதவிக்கரம் நீட்டும் இந்தியா..
பிரதமரின் முதன்மை செயலாளர் பி.கே. மிஸ்ரா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் நிவாரண பொருள்களை அனுப்பும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
![Turkey Earthquake : நிலநடுக்கத்தால் நிலைகுலைந்த துருக்கி.. பதறி தலைதூக்கிய மனிதநேயம்.. உதவிக்கரம் நீட்டும் இந்தியா.. Turkey Earthquake India To Send Rescue Teams Relief Material To devastated country Turkey Earthquake : நிலநடுக்கத்தால் நிலைகுலைந்த துருக்கி.. பதறி தலைதூக்கிய மனிதநேயம்.. உதவிக்கரம் நீட்டும் இந்தியா..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/07/9a52c6ef64e9a7362045bf45a52c38b51675745745842224_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
மத்திய கிழக்கில் அமைந்துள்ள துருக்கியில் நேற்று மிக மோசமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் சிக்கி 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பலர் இடிபாடுகளில் சிக்கியிருப்பதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என கூறப்படுகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நான்கு நிலநடுக்கம் ஏற்பட்டதில் நிலைமை மிக மோசமாக மாறியுள்ளது. இந்நிலையில், இந்த மோசமான நிலைநிடுக்கத்தை சமாளிக்க துருக்கிக்கு தங்களால் முடிந்த அனைத்து உதவிகளையும் இந்தியா அளிக்கும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
பிரதமரின் முதன்மை செயலாளர் பி.கே. மிஸ்ரா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் நிவாரண பொருள்களை அனுப்பும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அமைச்சரவை செயலாளர், பல்வேறு அமைச்சகங்களின் பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
அதன்படி, தேசிய பேரிடர் மீட்பு படையின் தேடுதல் வீரர்களையும் மருத்துவர்களையும் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, நிலநடுக்கத்தில் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி, "துருக்கியில் நிலநடுக்கத்தால் உயிர் சேதம், உடமைகள் சேதம் அடைந்ததை நினைத்து வேதனை அடைந்துள்ளேன். உயிரிழந்த குடும்பங்களுக்கு அனுதாபங்கள்.
காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும். துருக்கி மக்களுடன் இந்தியா துணை நிற்கிறது. இந்த துயரத்தை சமாளிக்க அனைத்து உதவிகளையும் வழங்க தயாராக உள்ளது" என குறிப்பிட்டிருந்தார்.
துருக்கி- சிரியா எல்லையில் காசியான்டெப் மாகாணத்தில் அமைந்துள்ள நூர்டகிக்கு கிழக்கே 23 கிலோமீட்டர் தொலைவில், 24.1 கிலோமீட்டர் ஆழத்தில் அதிகாலையில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் 7.8 ஆக பதிவாகியது.
100 ஆண்டுகளுக்கு பிறகு அப்பகுதியை தாக்கிய இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால், பல கட்டடங்கள் குலுங்கி இடிந்து விழுந்து தரைமட்டமாகின. சிரியாவில் பாதிப்பு சற்றே குறைவாக இருந்தாலும், துருக்கியில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
குடியிருப்புகள் மட்டுமின்றி, அந்நாட்டில் இருந்த 2,200 ஆண்டுகள் பழமையான காசியண்டெப் கோட்டை உள்ளிட்ட பல வரலாற்று சிறப்புமிக்க கட்டடங்களும் தரைமட்டமாகின. இந்த நிலநடுக்கத்தின் எதிரொலிது லெபனான் உள்ளிட்ட பகுதிகளிலும் உணரப்பட்டது. தற்போது வரை இரு நாடுகளிலும் சேர்த்து ஆயிரத்து 4000க்கும் அதிகமானோர் உயிரிழந்த நிலையில், பல்லாயிரக்கணக்கானோர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.
காலையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து பிற்பகலிலும், ரிக்டர் அளவில் 7.6 என்ற அளவிலான மேலும் ஒரு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இரண்டாவது நிலநடுக்கத்தை தொடர்ந்து மூன்றாவது முறையாக ரிக்டர் அளவில் 6.0 என்ற அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
நிலநடுக்கதால் துருக்கியில் மொத்த இறப்பு எண்ணிக்கை 10,000 பேரை எட்டும் என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் மதிப்பிட்டுள்ளது. பொருளாதார ரீதியாக 1 பில்லியன் அமெரிக்க டாலர் முதல் 10 பில்லியன் டாலர்கள் வரை இழப்பு இருக்கலாம். இது துருக்கியின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 சதவீதம் வரை இருக்கும் என்றும் அறிக்கையில் மதிப்பிடப்பட்டுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)