Top 10 News: இழப்பீட்டுத் தொகை ரூ.10 லட்சமாக உயர்வு, அமித் ஷாவிற்கு கண்டனம் - டாப் 10 செய்திகள்
TOP 10 News: இந்தியா முழுவதும் காலை முதல் 11 மணி வரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே காணலாம்.
அமித் ஷாவை கண்டித்து திமுக தீர்மானம்
முதலமைச்சரும், திமுகவின் தலைவருமான மு.க. ஸ்டாலின் தலைமையில், அக்கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அதில், அம்பேத்கரை அவதூறாகப் பேசிய ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவுக்கு கண்டனம் தெரிவித்தும், ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை கைவிட வலியுறுத்தியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நெட் தேர்வு தேதியில் மாற்றம் வருமா?
பொங்கல் விழா நாட்களில் அறிவிக்கப்பட்ட தேசிய தேர்வு முகமையின் ‘யுஜிசி - நெட்’ தேர்வுகளை வேறு தேதிகளுக்கு மாற்ற வேண்டும் என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை சந்தித்து சு.வெங்கடேசன் எம்.பி. வலியுறுத்தல். உரிய மாற்றம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் கூறியுள்ளார் எனவும் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
இழப்பீட்டுத் தொகை ரூ.10 லட்சமாக உயர்வு
பொது இடங்களில் மின் விபத்துகளால் உயிரிழப்போரின் குடும்பத்தினருக்கு மின்சார வாரியம் வழங்கும் நிவாரணத் தொகை ரூ.5 லட்சத்திலிருந்து ரூ.10 லட்சமாக உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது. முழு பார்வை பாதிப்பு, 2 கை மற்றும் கால்களும் செயலிழந்தால் வழங்கப்படும் நிவாரணம் ரூ.3 லட்சமாக வழங்கப்படும்.
சென்னையில் விபத்து - 2 இளைஞர்கள் உயிரிழப்பு
சென்னை பள்ளிகரணையில் இன்று அதிகாலை நடந்த கோர விபத்தில் இரு இளைஞர்கள் நிகழ்விடத்திலேயே உயிரிழப்பு. கேரளாவைச் சேர்ந்த விஷ்ணு (24) மார்புப் பகுதியில் பலமாக தாக்கப்பட்டு உயிரிழந்த நிலையில், சென்னை பம்பல் பகுதியைச் சேர்ந்த கோகுல் (24) தலை தனியே துண்டிக்கப்பட்டு உயிரிழப்பு
மீண்டும் கேரளாவுக்கே எடுத்துச் செல்லப்படும் மருத்துவக் கழிவுகள்
நெல்லை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கொட்டப்பட்ட கேரள மருத்துவக் கழிவுகள் மீண்டும் கேரளாவுக்கு எடுத்துச் செல்லப்பட உள்ளன. இதற்காக திருவனந்தபுரத்தில் இருந்து 8 லாரிகள் வருகை.
ஏக்நாத் ஷிண்டேவிற்கு ஏமாற்றம்
மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி அரசில் 36 அமைச்சர்கள் மற்றும் 6 இணையமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு. உள்துறையை முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் தக்கவைத்துக் கொண்டார். ஏக்நாத் ஷிண்டேவிற்கு பொதுப்பணித்துறையும், அஜித்பவாருக்கு நிதித்துறையும் ஒதுக்கீடு
தயார் நிலையில் பி.எஸ்.எல்.வி. சி-60 ராக்கெட்
பி.எஸ்.எல்.வி. சி-60 ராக்கெட்டை வரும் 30ம் தேதி விண்ணில் ஏவ இஸ்ரோ முடிவு செய்துள்ளது. எஸ்.டி.எக்ஸ்.1, எஸ்.டி.எக்ஸ்.2 என தலா 220 கிலோ எடை கொண்ட 2 சிறிய செயற்கைக்கோள்களைச் சுமந்து செல்கிறது.
பிரேசிலில் 38 பேர் உயிரிழப்பு
பிரேசிலில் திடீரென கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, முன்னே சென்ற லாரி மீது மோதி கவிழ்ந்தது. அப்போது திடீரென பேருந்து தீப்பற்றி எரிந்தது. இதில் 38 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். 9 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் திடீர் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.5 ஆக பதிவு
ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை 4.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் (என்.சி.எஸ்.) உறுதி செய்துள்ளது. தேசிய நிலநடுக்கவியல் மையத்தின் அறிக்கைகளின்படி, நில அதிர்வு நிகழ்வு இந்திய நேரப்படி (IST) துல்லியமாக அதிகாலை 6:30 மணிக்கு பதிவு செய்யப்பட்டது.இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்பு எதுவும் ஏற்பட்டதாகத் தகவல் வெளியாகவில்லை.
ரோகித் சர்மா காயம்
மெல்பர்னில் நடைபெற உள்ள பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டிக்கான பயிற்சியின்போது, இந்திய கேப்டன் ரோகித் சர்மாவிற்கு இடது காலில் லேசான காயம். சிறிது நேரம் காலில் ஐஸ் பேக் உடன் அமர்ந்து இருந்ததாக தகவல்