Mahua Moitra: எம்.பி. பதவி பறிப்பு; சட்ட போராட்டத்தை தொடங்கிய திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மொய்த்ரா
எம்.பி. பதவி பறிக்கப்பட்டதற்கு எதிராக மொய்த்ரா சட்ட போராட்டத்தை தொடங்கியுள்ளார்.
பா.ஜ.க.வுக்கு எதிராகவும் அதானி குழுமம் தொடர்பாகவும் நாடாளுமன்றத்தில் கேள்விகளை எழுப்புவதற்கு திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா லஞ்சம் பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டு தேசிய அளவில் தொடர் பரபரப்பை கிளப்பியது. மொய்த்ரா, தன்னிடம் லஞ்சம் பெற்று கொண்டு நாடாளுமன்றத்தில் கேள்விகளை எழுப்பியதாக மக்களவை ஒழுங்கு நடவடிக்கை குழுவுக்கு தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தனி கடிதம் எழுதினார்.
லஞ்சம் பெற்றாரா மஹுவா மொய்த்ரா?
இந்த விவகாரத்தில் மொய்த்ராவுக்கு எதிராக விசாரணை நடத்த வேண்டும் என பாஜக எம்பி நிஷிகாந்த் துபே, மக்களவை சபாநாயகருக்கு கடிதம் எழுதினார். இது தொடர்பான ஆதாரங்களை நிஷிகாந்த் துபேவிடம் அளித்த மொய்த்ராவின் முன்னாள் காதலரும் உச்ச நீதிமன்ற வழக்கறிஞருமான ஜெய் ஆனந்த் தேஹாத்ராய், மொய்த்ராவுக்கு எதிராக சிபிஐயிடம் புகார் அளித்தார்.
இரு தரப்பையும் அழைத்து, மக்களவை நெறிமுறைகள் குழு, விசாரணை நடத்தியது. இறுதியில், மக்களவையில் இருந்து மொய்த்ராவை சஸ்பெண்ட் செய்ய நெறிமுறைகள் குழு பரிந்துரைத்தது. இதை தொடர்ந்து, மொய்த்ராவை பதவி நீக்கம் செய்யும் தீர்மானம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதன் மூலம் அவரது எம்பி பதவி பறிக்கப்பட்டது.
சட்டப்போராட்டத்தை தொடங்கிய மொய்த்ரா:
இந்த நிலையில், தனது எம்பி பதவி பறிக்கப்பட்டதற்கு எதிராக மொய்த்ரா சட்ட போராட்டத்தை தொடங்கியுள்ளார். எம்பி பதவி பறிக்கப்பட்டதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் அவர் இன்று வழக்கு தொடர்ந்துள்ளார்.
மொய்த்ராவை பதவி நீக்கம் செய்யும் தீர்மானம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டபோது, எதிர்க்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால், நாடாளுமன்றம் இன்று இருமுறை ஒத்திவைக்கப்பட்டது. இறுதியாக, அறிக்கையை ஏற்று கொள்வதாக அறிவித்த மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, "நாடாளுமன்ற உறுப்பினர் மஹுவா மொய்த்ராவின் செயல்பாடு தவறானது. அநாகரீகமானது. எனவே, குழுவின் முடிவுகளை இந்த சபை ஏற்றுக்கொள்கிறது. அவர் எம்.பி.யாக நீடிப்பது ஏற்புடையதல்ல" என்றார்.
கடந்த 2005 ஆம் ஆண்டு நடந்த சம்பவத்தை குறிப்பிட்டு பேசிய ஓம் பிர்லா, "2005இல் இதே போன்ற குற்றச்சாட்டில் சிக்கிய 10 எம்பிக்களின் பதவி பறிக்கப்பட்டது. அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகு எம்.பி.க்கள் அவையில் பேசும் உரிமையை இழந்துவிட்டனர் என அப்போதைய சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி கூறியிருந்தார்" என விளக்கம் அளித்தார்.
மொய்த்ராவுக்கு ஆதரவாக பேசியுள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மேற்குவங்க முதலமைச்சருமான மம்தா பானர்ஜி, "பதவி நீக்கத்தை ஏற்று கொள்ள முடியாது. பாஜகவின் பழிவாங்கும் அரசியல் ஜனநாயகத்தை கொன்றுவிட்டது" என்றார்.