Tirupati Temple: பக்தர்களின் கவனத்திற்கு.. திருப்பதி கோயிலில் அதிரடி கட்டுப்பாடுகள்..திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு
திருமலை வெங்கடேச பெருமாள் கோயில் அருகே 6 வயது சிறுமியை சிறுத்தை தாக்கி கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
குழந்தைகளுடன் மலை ஏறும் பக்தர்களின் கவனத்திற்கு:
ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள பிரசித்தி பெற்ற திருமலை வெங்கடேச பெருமாள் கோயில் அருகே 6 வயது சிறுமியை சிறுத்தை தாக்கி கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்திய இந்த சம்பவத்தால் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் அதிரடி கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
அதிரடி கட்டுப்பாடுகள்:
அதன்படி, குழந்தைகளுடன் திருப்பதி மலை ஏறும்போது கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்கும்படி பெற்றோரை திருமலை திருப்பதி தேவஸ்தானம் (டி.டி.டி) கேட்டு கொண்டுள்ளது. அதேபோல, 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுடன் வரும் பக்தர்கள், காலை 5 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே படிக்கட்டுகள் மூலம் திருப்பதி மலையேற அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டும் இன்றி, மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை இரு சக்கர வாகனங்களின் மலை ஏறக்கூடாது என தேவஸ்தானம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகள், நேற்று முதல் அமலுக்கு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தேவஸ்தானம் வெளியிட்ட அறிக்கையில், "குழந்தைகளை குறிவைத்து காட்டு மிருகங்கள் தாக்குதல் நடத்தி வருவதை கவனத்தில் எடுத்து கொண்டு, இரண்டு முக்கிய முடிவுகளை திருமலை திருப்பதி தேவஸ்தானம் எடுத்துள்ளது. இது ஞாயிற்றுக்கிழமை முதல் அமலுக்கு வந்தது" என குறிப்பிட்டுள்ளது.
சிறுத்தை நடமாட்டம்:
திருமலை வெங்கடேச பெருமாள் கோயிலை, தேவஸ்தானம் கமிட்டிதான் நிர்வகித்து வருகிறது. திருப்பதி மலையில் சிறுத்தை நடமாட்டம் குறித்து தகவல் தெரிவித்துள்ள தேவஸ்தானம், "அலிபிரிக்கு அருகில் இருந்து கலிகோபுரம் மற்றும் ஸ்ரீ லட்சுமி நரசிம்ம ஸ்வாமி கோவிலில் உள்ள மூன்று இடங்கள் உட்பட ஐந்து இடங்களில் சிறுத்தைகளின் நடமாட்டம் கண்டறியப்பட்டது. சனிக்கிழமை 38வது திருப்புவனத்திலும் சிறுத்தை நடமாட்டம் கண்டறியப்பட்டுள்ளது" என குறிப்பிட்டுள்ளது.
படிக்கட்டுகள் மற்றும் சாலை என இரண்டிலும் பயணிக்கும் பக்தர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை செய்ய திருமலை திருப்பதி தேவஸ்தான தலைவர் பி. கருணாகர ரெட்டி இன்று மாலை உயர்மட்டக் கூட்டத்தை நடத்துகிறார்.
சிறுத்தையால் கொல்லப்பட்ட குழந்தையின் பெயர் லக்ஸிதா. கடந்த வாரம், தனது பெற்றோருடன் மலையேறச் சென்றபோது தெரியாமல் அவர் காட்டுக்குள் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.
திருப்பதி திருமலை வெங்கடேச பெருமாள் கோயில் செல்லும் படிக்கட்டுகளில் அமைந்துள்ள மற்றொரு கோயிலுக்கு அருகில் உள்ள புதர் நிறைந்த பகுதியில் குழந்தையின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அவரது உடலில் உள்ள காயங்கள், வனவிலங்கால் அவர் அடித்து கொள்ளப்பட்டதை உறுதி செய்தது.
கடந்த ஜூன் மாதம், அப்பகுதியில் மூன்று வயது சிறுவன் சிறுத்தை தாக்குதலுக்கு உள்ளானான். ஆனால், சிறிது நேரத்திலேயே மீட்கப்பட்டான். சுமார் 150 கேமராக்களைப் பயன்படுத்தி, அந்த சிறுத்தை சிக்கிய பின்னர் மற்றொரு காட்டில் விடப்பட்டது.