"குடித்துவிட்டு ஆடுவதா புத்தாண்டு?" : பாஜக எம்பி ப்ரக்யா தாகூர் பேச்சு
"டிசம்பர் 31 அன்று இரவு முழுவதும் மது அருந்தி நடனமாடுபவர்கள், மறுநாள் மதியம் தாமதமாக எழுவார்கள். பிரகாசமான காலையை பார்க்கவே மாட்டார்கள். அதில் என்ன புதுமையை பார்த்துவிடப்போகிறார்கள்?", என்றார்.
பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) எம்பி பிரக்யா சிங் தாக்கூர் சனிக்கிழமையன்று புத்தாண்டு கொண்டாட்டங்களில் மது அருந்துதல் மற்றும் நடனமாடுதல் போன்றவற்றை குறித்து தாக்கி பேசியுள்ளார்.
புத்தாண்டு எது?
புத்தாண்டு தினத்தன்று போபாலில் நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், "நவராத்திரியின் முதல் நாளில் நமது புத்தாண்டு சைத்ரா மாதத்தில் தொடங்குகிறது. இந்த நேரத்தில் புதிய பயிர்கள் பயிரிடப்படுகின்றன, மேலும் ஒரு புதிய வளிமண்டலத்தில் புதிய காற்று மற்றும் நறுமணம் நமக்கு கிடைக்கிறது. துர்கா தேவியின் ஆசீர்வாதங்கள் கிடைக்கும் இதுதான் எங்கள் புத்தாண்டு", என்று சித்திரை மாதத்தில் வரும் புத்தாண்டு குறித்து பேசினார். இன்று ஆங்கில காலண்டரின் படி புத்தாண்டாக உலகமே கொண்டாடும் நிலையில், இந்தியாவிலும் விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம்.
பிரக்யா தாக்கூர் விமர்சனம்
இந்த தினத்தில் மத சார்பின்றி அனைவரும் அவரவர் வணங்கும் தெய்வங்களை வணங்கி கொண்டாடுவது வழக்கம். அதுபோக புத்தாண்டு என்றாலே மதுபானம், இரவு கொண்டாட்டங்கள், விபத்து என்ற பெயரும் உள்ளது. அதனால் கலாச்சாரம் சீரழிகிறது என்று பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) எம்பி பிரக்யா சிங் தாக்கூர் சனிக்கிழமையன்று கூறியுள்ளார்.
சித்திரைப்புத்தாண்டு
சித்திரை மாத புத்தாண்டு குறித்து பேசுகையில், "நம் புத்தாண்டில், எல்லாம் புதியது, இயற்கையானது, அந்த நேரத்தில் அது புதிதாக மலர்கிறது. ஒரு புதிய தொடக்கத்தை உணர்கிறோம், அதைக் கொண்டாடுகிறோம். முடிவில் நம் வாழ்வில் மகிழ்ச்சியையும், புதுமையையும் கொண்டுவரும் விஷயங்களைச் செய்ய வேண்டும்," என்று அவர் மேலும் கூறினார்.
மது அருந்தி நடனமாடுவது நம் கலாச்சாரமல்ல
ஆங்கில புத்தாண்டு அன்று நடக்கும் விஷயங்களை கடுமையாக சாடிய பாஜக தலைவர், "டிசம்பர் 31 அன்று இரவு முழுவதும் மது அருந்தி நடனமாடுபவர்கள், மறுநாள் மதியம் தாமதமாக எழுவார்கள். பிரகாசமான காலையை பார்க்கவே மாட்டார்கள். அதில் என்ன புதுமையை பார்த்துவிடப்போகிறார்கள்? இத்தகைய மேற்கத்திய நாகரீகம் நமது கலாச்சாரமாக இருக்க முடியாது", என்றார். புத்தாண்டின் முதல் நாளான ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வாரணாசி அசிகாட்டில் 'கங்கா ஆரத்தி' நடைபெற்றது. கங்கா ஆரத்தியை காண மக்கள் காட்டில் திரண்டனர். உஜ்ஜயினியில், இன்று காலை ஆரத்தியை காண பக்தர்கள் மஹாகாலேஷ்வர் கோவிலில் குவிந்தனர்.