Delhi High Court : அதிகாரத்தில் இருப்பவர்கள் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்: டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி கருத்து
வெறுப்பு பேச்சு வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம் கடும் விமர்சனத்தை மேற்கொண்டுள்ளது.
கடந்த 2020ஆம் ஆண்டு, குடியரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது, வெறுப்பை தூண்டும் விதமாக பேசியதாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், பாஜக எம்பி பர்வேஷ் வர்மா ஆகியோர் மீது குற்றம்சாட்டப்படுகிறது.
இதையடுத்து, அவர்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்ய அனுமதி வழங்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பிருந்தா காரத் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. இது தொடர்பாக கீழமை நீதிமன்ற விதித்த உத்தரவை டெல்லி உயர் நீதிமன்றம் உறுதிபடுத்தியுள்ளது. அவர்களுக்கு எதிராக வழக்கை பதிவு செய்ய மத்திய அரசு தடை ஏதும் தடை விதிக்கவில்லை எனக் கூறி, கடந்தாண்டு தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை கீழமை நீதிமன்றம் நிராகரித்திருந்தது.
இருப்பினும், வெறுப்பு பேச்சில் குறிப்பாக அரசியல் தலைவர்களின் வெறுப்பு பேச்சில் டெல்லி உயர் நீதிமன்றம் கடுமையான விமர்சனத்தை மேற்கொண்டுள்ளது. இதுகுறித்து கவலை தெரிவித்துள்ள நீதிபதி சந்திர தாரி சிங், "தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், அரசியல் மற்றும் மதத் தலைவர்களால் குறிப்பாக மதம், சாதி, பிராந்தியம் அல்லது இனம் தொடர்பான வெறுப்பூட்டும் பேச்சு சகோதரத்துவக் கருத்துக்கு எதிரானது.
இம்மாதிரியான நபர்கள், அரசியலமைப்பு நெறிமுறைகளை முற்றிலுமாக தரைமட்டமாக்குகின்றனர். அரசியலமைப்பின் கீழ் உறுதி செய்யப்பட்டுள்ள சமத்துவம், சுதந்திரம் ஆகியவற்றை இம்மாதிரியான பேச்சுகள் மீறுகிறது. இது அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படைக் கடமைகளை அவமதிக்கும் செயலாகும். எனவே, மத்திய, மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குறிப்பிட்ட சமுதாயத்திற்கு எதிராக காட்டப்படும் பாகுபாடு முதல் அவர்களை விலக்கி வைத்து, நாடு கடத்தி, இனப்படுகொலை செய்வது வரை பல்வேறு வகையான தாக்குதல்களுக்கு வெறுப்பு பேச்சே தொடக்க புள்ளியாகும்.
இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில், தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் தங்கள் தொகுதியில் உள்ள வாக்காளர்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த சமூகம் மற்றும் தேசம் மற்றும் இறுதியில் அரசியலமைப்புக்காக பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்" என்றார்.
காஷ்மீர் பள்ளத்தாக்கிலிருந்து காஷ்மீர் பண்டிதர்கள் வெளியேற்றப்படுவதை மேற்கோள் காட்டி பேசிய நீதிபதி, "வெறுப்பு பேச்சு என்பது எந்த மதத்திற்கோ அல்லது சமூகத்திற்கோ எதிராக மட்டும் பேசப்படுவிதில்லை. அனைத்து மட்டங்களிலும் "வெறுக்கத்தக்க பேச்சை" திறம்பட கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது.
தற்போது நடைமுறையில் உள்ள சட்டத்தை பயனற்ற ஒன்றாக மாறாமல் இருப்பதை சட்ட அமலாக்க முகமைகள் உறுதி செய்ய வேண்டும்" என்றார்.