தீபாவளி போனஸாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்.. மாஸ் காட்டிய நிறுவனம்! இன்ப அதிர்ச்சியில் ஊழியர்கள்!
தீபாவளியும் முடிந்துவிட்டது. அதையொட்டி வாங்கிய போனஸும் தீர்ந்துபோய்விட்டது. ஆனால் இந்தச் செய்தி இப்போது வைரலாகி எல்லோரையும் அடடே சொல்லி ஆச்சரியப்பட வைத்துக் கொண்டிருக்கிறது.
தீபாவளியும் முடிந்துவிட்டது. அதையொட்டி வாங்கிய போனஸும் தீர்ந்துபோய்விட்டது. ஆனால் இந்தச் செய்தி இப்போது வைரலாகி எல்லோரையும் அடடே சொல்லி ஆச்சரியப்பட வைத்துக் கொண்டிருக்கிறது. அதுவும் சூரத்துக்கும் தீபாவளி போனஸுக்கும் அப்படியொரு பந்தம் இருக்கிறது.
ஆம், தீபாவளியை ஒட்டி குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்த நிறுவனத்தின் முதலாளி தனது ஊழியர்களுக்குப் போனஸாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வழங்கியுள்ளார்.
சூரத்தில் உள்ளது அலையன்ஸ் க்ரூப் நிறுவனம். இது எம்ப்ராய்டரி தையல் மெஷின் உற்பத்தித் தொழிலில் உள்ளது. இந்த நிறுவனம் தனது ஊழியர்களுக்கு ஒக்கினாவா ப்ரெய்ஸ்ப்ரோ Okinawa PraisePro என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை போனஸாக வழங்கியுள்ளது. இந்த வகை இ ஸ்கூட்டரின் ஷோரூம் விலை ரூ.76,848 என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து அந்நிறுவனத்தின் இயக்குநர் சுபாஷ் தாவர் கூறுகையில், "அதிகரிக்கும் எரிபொருள் விலையைக் கருத்தில் கொண்டு எங்களின் ஊழியர்களுக்கு நாங்கள் இ ஸ்கூட்டரை போனஸாக வழங்கியுள்ளோம்" என்று கூறினார்.
அலையன்ஸ் நிறுவனத்தின் 35 பேருக்கு இந்த இ ஸ்கூட்டர் போனஸாக வழங்கப்பட்டுள்ளது.
இப்போதைக்கு இணையத்தில் இதுதான் ட்ரெண்டிக் டாபிக்.
கார் பரிசு கொடுத்த வைர வியாபாரி நினைவிருக்கா?
இதேபோல் கடந்த 2018 ஆம் ஆண்டு தீபாவளிப் பண்டிகையை ஒட்டி சூரத்தைச் சேர்ந்த வைர வியாபாரி ஒருவர், தனது ஊழியர்களுக்கு போனஸாக கார் வழங்கி அதிரவைத்தார். அப்போது ஃபேஸ்புக், ட்விட்டர் முழுவதும் நெட்டிசன்கள் அந்த கம்பெனியில் எப்படி வேலைக்குச் சேர்வது என்று கேட்டு கருத்துகளை பகிர்ந்தனர்.
சூரத்தைச் சேர்ந்த வைர வியாபாரி சவ்ஜி தோலக்கியா. இவர் தனது ஊழியர்களுக்கு கார், வீடு, ரொக்கப் பணம் எனப் பரிசாக வழங்கினார்.
தீபாவளி போனஸ் வழங்கும் நிகழ்வை “ஸ்கில் இந்தியா இன்சென்டிவ் செரிமோனி” என்று பெரும் விழாவாக நடத்திய சவ்ஜி தோலாக்கியா, விழாவில் பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்பிரன்ஸ் மூலம் கலந்துக்கொள்ள வைத்தார். இந்த போனஸுக்கு விசுவாச போனஸ் திட்டம் என்று பெயர். 600 ஊழியர்களுக்கு கார் வழங்கினார். அவர்களுக்கு, ரெனால்ட் மற்றும் மாருத்தி சுசூகி கார்கள் வழங்கப்பட்டது. அதேபோல், தனது நிறுவனத்தில் 25 வருடம் பணிப்புரிந்த மூன்று மூத்த ஊழியர்களுக்கு மெர்சிடீஸ் பென்ஸ் காரை பரிசாக வழங்கினார். பரிசாக வழங்கிய Mercedes-Benz GLS 350d SUV காரின் மதிப்பு குறைந்தது 1 கோடி ரூபாய் ஆகும்.
சுமார் 5000 தொழிலாளர்கள் வரை பணிப்புரியும் இந்நிறுவனத்தில் கார், வீடு பரிசாகப் பெற்றவர்கள் போக எஞ்சிய 4000 தொழிலாளர்களுக்கு வியக்கும் வகையில் தீபாவளிப் பரிசுகளை முன்னதே வழங்கினார்.
இப்பப் புரியுதா? சூரத்துக்கும் தீபாவளி போனஸுக்கும் இருக்கும் பந்தம்.