Religious Freedom : "மத சுதந்திர உரிமையில் இந்த விஷயம் உட்படாது” : உச்சநீதிமன்றத்தில் தெரிவித்த மத்திய அரசு!
“இதுபோன்ற மதமாற்றங்கள் தடுக்கப்படாவிட்டால், விரைவில் இந்துக்கள் இந்தியாவில் சிறுபான்மையினராக மாறிவிடுவார்கள். எனவே, இதற்காக நாடு தழுவிய சட்டத்தை இயற்ற மத்திய அரசு கடமைப்பட்டுள்ளது"
மத சுதந்திரத்திற்கான உரிமையில், பிறரை குறிப்பிட்ட மதத்திற்கு மாற்றுவதற்கான அடிப்படை உரிமை இல்லை என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.
மத மாற்றப் பிரச்சனை தீவிரமானது
நாடு முழுவதும் மதமாற்றம் என்ற வஞ்சகமாக மோசடி நடைபெற்று வருவதாக கூறி தொடரப்பட்ட ஒரு பொதுநல வழக்கின் மீது தாக்கல் செய்யப்பட்ட பிராமண பாத்திரத்தில் மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது. மதமாற்றம் குறித்த இத்தகைய பிரச்சனைகளை மத்திய அரசு தீவிரமாக எடுத்துக்கொள்ளும் என்றும், இதுகுறித்த அச்சுறுத்தலை மத்திய அரசு அறிந்திருப்பதால், உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் மத்திய அரசு அதில் குறிப்பிட்டுள்ளது.
மேலும், "மத சுதந்திரத்திற்கான உரிமையில், மோசடி செய்தோ, ஏமாற்றியோ, வற்புறுத்தியோ, வசீகரம் செய்தோ ஒரு நபரை மதம் மாற்றுவதற்கான உரிமை நிச்சயமாக இல்லை" என்று அது கூறியது. மத சுதந்திரத்திற்கான உரிமை, நாட்டின் அனைத்து குடிமக்களின் மதிப்புமிக்க உரிமையாகும், இது சட்டமன்றத்தால் பாதுகாக்கப்பட வேண்டும் என்று கூறியது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நீதிபதி எம்.ஆர்.ஷா தலைமையிலான பெஞ்ச், கட்டாய மத மாற்றம் தொடர்பான பிரச்சினை "மிகவும் தீவிரமானது" என்றும், அதன் நிலைப்பாட்டை தெளிவுபடுத்த விரிவான பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்யுமாறு மத்திய அரசை கேட்டுக் கொண்டது.
மாநில அரசுகளின் அறிவுறுத்தல்களுடன் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசை கேட்டுக் கொண்டது.
மத்திய அரசு பிராமண பத்திரம்
மத்திய அரசு மேலும் அந்த பிராமண பாத்திரத்தில், "பல ஆண்டுகளாக ஒன்பது மாநிலங்கள் இந்த நடைமுறையைத் தடுக்கும் சட்டங்களை இயற்றியுள்ளன. ஒடிசா, மத்தியப் பிரதேசம், குஜராத், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், உத்தரகண்ட், உத்தரப் பிரதேசம், கர்நாடகா மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்கள் ஏற்கனவே மதமாற்றம் தொடர்பான சட்டத்தை கொண்டுள்ள மாநிலங்களாகும். பெண்கள் மற்றும் பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் பின்தங்கிய வகுப்பினர் உட்பட சமூகத்தின் பாதிக்கப்படக்கூடிய பிரிவினரின் நேசத்துக்குரிய உரிமைகளைப் பாதுகாப்பதற்கு இத்தகைய சட்டங்கள் அவசியம்" என்று பிரமாணப் பத்திரம் கூறியது.
நீதிமன்றம் கேள்வி
இந்த வழக்கை டிசம்பர் 5-ம் தேதிக்கு விசாரணைக்கு ஒத்திவைத்த பெஞ்ச் முன்னதாக, கட்டாய மத மாற்றம் ஒரு "மிகவும் தீவிரமான பிரச்சினை" என்றும், மதத்தைப் பொறுத்த வரையில் குடிமக்களின் மனசாட்சியின் சுதந்திரத்துடன் "நாட்டின் பாதுகாப்பும்" பாதிக்கலாம் என்றும் உச்சநீதிமன்றம் குறிப்பிட்டது. அதில், “இது மிகவும் ஆபத்தான விஷயம். அனைவருக்கும் மத சுதந்திரம் உள்ளது. இது என்ன கட்டாய மதமாற்றம்?'' என்று கேள்வி எழுப்பியது.
தடுப்பதற்கு சட்டம் இயற்ற வேண்டும்
நாடு முழுவதும் வஞ்சகமான மத மாற்றம் தலைவிரித்தாடுவதாகவும், அதன் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த மத்திய அரசு தவறிவிட்டதாகவும் கூறி வழக்கறிஞர் அஷ்வினி குமார் உபாத்யாய் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் விசாரித்தது. "வஞ்சகமான மத மாற்றத்தை" கட்டுப்படுத்துவதற்கான அறிக்கை மற்றும் மசோதாவை தயாரிக்க இந்திய சட்ட ஆணையத்திற்கு உத்தரவிடுமாறு மனுவில் கோரப்பட்டது.
மேலும் மிரட்டல், பரிசுகள் மற்றும் பணப் பலன்கள் மூலம் மோசடியான மத மாற்றம் செய்தல் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 14, 21 மற்றும் 25 வது பிரிவுகளை புண்படுத்தும் என்று நீதிமன்றத்தில் அறிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. “இதுபோன்ற மதமாற்றங்கள் தடுக்கப்படாவிட்டால், விரைவில் இந்துக்கள் இந்தியாவில் சிறுபான்மையினராக மாறிவிடுவார்கள்.
எனவே, இதற்காக நாடு தழுவிய சட்டத்தை இயற்ற மத்திய அரசு கடமைப்பட்டுள்ளது” என்று அது மேலும் கூறியது. முன்னதாக, உபாத்யாய் தாக்கல் செய்த இதேபோன்ற மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.