The Kashmir Files: தி காஷ்மீர் பைல்ஸ் படத்தைக் கொண்டாடும் பாஜக... என்ன காரணம்?
கடந்த மார்ச் 11ஆம் தேதி 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' நாடு முழுவதும் 630 திரையரங்குகளில் வெளியானது. படம் பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட்டடித்துள்ளதால், படக் காட்சிகளின் எண்ணிக்கை தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்தி மொழித் திரைப்படமான 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' படத்துக்குப் பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜகவினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். பாஜக ஆளும் மாநிலங்களில் இந்தப் படத்துக்கு 100 சதவீதம் வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. சிறப்புக் காட்சிகள் திரையிடப்பட்டு வருகின்றன. இதற்கு என்ன காரணம்? அந்தப் படத்தில் அப்படி என்னதான் காட்டப்பட்டுள்ளது? பார்க்கலாம்.
காஷ்மீர் பள்ளத்தாக்கில் 1980-களின் பிற்பகுதியிலும் 90-களிலும் காஷ்மீரி பண்டிட்டுகள் வெளியேறியதன் பின்னணியை கதைக் களமாகவும், அந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகவும் கொண்டு எடுக்கப்பட்ட படம் 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்'. இப்படம் விவேக் அக்னிஹோத்ரி என்பவரால் எழுதப்பட்டு, இயக்கப்பட்டது. 2 மணி நேரம் 50 நிமிடங்களுக்கு இந்தத் திரைப்படம் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
இந்தப் படத்தில் அனுபம் கெர், தர்ஷன் குமார், மிதுன் சக்கரவர்த்தி, விவேக் அக்னிஹோத்ரியின் மனைவி பல்லவி ஜோஷி மற்றும் பலர் நடித்துள்ளனர். ஜீ ஸ்டூடியோஸ் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது. முதலில் இந்தப் படத்தை இந்தியாவின் குடியரசு தினமான ஜனவரி 26ஆம் தேதி நாடு முழுவதும் வெளியிடத் திட்டமிடப்படது. எனினும் ஒமிக்ரான் பரவல் காரணமாகப் படம் தள்ளிப் போனது.
இந்நிலையில் கடந்த மார்ச் 11ஆம் தேதி 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' நாடு முழுவதும் 630 திரையரங்குகளில் வெளியானது. படம் பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட்டடித்துள்ளதால், படக் காட்சிகளின் எண்ணிக்கை தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது.
பாஜகவினர் ஆதரவு
படத்தின் வசனங்கள், பின்னணி ஆய்வு, நடிப்பு ஆகியவை விமர்சகர்களால் பாராட்டப்பட்டு வருகின்றன. அதேபோல படத்துக்கு பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பாஜகவினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். பாஜக ஆளும் மாநிலங்களில் 100 சதவீதம் வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேசம், ஹரியாணா, உத்தராகாண்ட், கர்நாடகா, கோவா, மத்தியப் பிரதேசம், குஜராத் மற்றும் திரிபுரா ஆகிய பாஜக ஆளும் மாநிலங்கள் இந்த திரைப்படத்துக்கான மாநில அரசின் கேளிக்கை வரியை 100 சதவீதம் ரத்து செய்துள்ளன.
காவல்துறைக்கு விடுமுறை
மத்தியப் பிரதேசத்தில் 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' படத்தைப் பார்க்க காவல்துறைக்கு விடுமுறையே அளிக்கப்பட்டது. இந்த நிலையில் படத்தைப் பார்த்த பிரதமர் மோடி, திரைப்படக் குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டினார். அதேபோல நாடாளுமன்றக் கூட்டத்திலும் 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' படத்தைப் பாராட்டிப் பேசினார்.
அப்போது பேசிய பிரதமர் மோடி, ''இந்தப் படத்தை இழிவுபடுத்த சதி நடந்து வருகிறது. பேச்சு சுதந்திரம் என்பதன் கொடியை ஏந்தி இருப்பதாகக் கூறிக்கொள்பவர்கள், கடந்த சில நாட்களாகக் கடும் கோபத்தில் உள்ளனர். உண்மையை அடிப்படையாகக் கொண்ட ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தைப் புகழ்வதற்குப் பதிலாக, அவர்கள் இழிவுபடுத்துகின்றனர்'' என்று தெரிவித்தார்.
தமிழக பாஜக சார்பில் திரையிடல்
சென்னையில் மட்டும் சத்யம், பெரம்பூர் எஸ்2, மாயாஜால், ஐனாக்ஸ், ஏஜிஎஸ், விஆர் மால் உள்ளிட்ட 18-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் படம் திரையிடப்பட்டு வருகிறது. தமிழக பாஜக சார்பில் நாளை (மார்ச் 16) மாலை 5.30 மணிக்கு ரோஹினி திரையரங்கில் இந்தப் படத்தின் சிறப்புக் காட்சி வெளியிடப்பட உள்ளது.
கதைக் களம் என்ன?
காஷ்மீரைச் சேர்ந்த மாணவர், தாத்தாவுடன் டெல்லியில் வசித்தவாறே ஜேஎன்யூவில் படித்து வருகிறார். தன்னுடைய பெற்றோர் விபத்தில் உயிரிழந்துவிட்டதாக, தாத்தா அனுபம் கெர் தெரிவித்ததை நம்பி வருகிறார். தன்னுடைய ஜேஎன்யூ ஆசிரியை ராதிகா மேனன் கூறுவதையும் அப்படியே நம்புகிறார்.
எனினும் தாத்தாவின் இறப்புக்குப் பிறகு அவரின் அஸ்தியைக் கரைக்க, காஷ்மீர் செல்லும் மாணவருக்கு வேறோர் உலகம் விரிகிறது. தனது பெற்றோர் வன்முறையில் கொல்லப்பட்டதை அறிந்துகொள்கிறார். அந்தக் கல்லூரி மாணவனின் பயணமே 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' படம். இதில் ஆர்ட்டிகிள் 370 குறித்தும் பேசப்படுகிறது.
முஸ்லிம்களுக்கு எதிராக பாரபட்சம்
எனினும் 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' படம் வரலாற்றைத் திசை திருப்பி விட்டதாகவும் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. அந்தக் காலகட்டத்தில் காஷ்மீரி இந்துக்கள் கொல்லப்பட்டதாகவும், பண்டிட்டுகள் காஷ்மீர் பள்ளத்தாக்கை விட்டே வெளியேற்றப்பட்டதாகவும் படத்தில் காண்பிக்கப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்தது. ஜேஎன்யூ எனப்படும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் குறித்துப் படத்தில் தவறாக சித்தரிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதேபோல முஸ்லிம்களுக்கு எதிராக பாரபட்சம் காட்டப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
மதிப்பீட்டு சர்ச்சை
இதற்கிடையே திரைப்படங்கள் குறித்து உலகளாவிய அளவில் மதிப்பீடு செய்யும் ஐஎம்டிபி நிறுவனத்தில், 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' படத்துக்கு அசாதாரணமான முறையில் மதிப்பீட்டு முறை நடந்ததாக, அந்நிறுவனமே குற்றம் சாட்டியது. இதனால் மதிப்பீட்டு முறையையே அந்நிறுவனம் மாற்றி அமைத்தது.
விக்கிப்பீடியாவிலும் படம் பற்றிய குறிப்புகள் தொடர்ந்து மாற்றி அமைக்கப்பட்டுக்கொண்டே இருந்தன. கடந்த மார்ச் 13, 14 ஆகிய தேதிகளில் மட்டும் 100-க்கும் மேற்பட்டோர் விக்கிப்பீடியாவில் திருத்தம் செய்திர்ந்தனர்.
வழக்குகள்
முன்னதாக உ.பி.யைச் சேர்ந்த நபர் ஒருவர், முஸ்லிம்கள்தான் காஷ்மீரி பண்டிட்டுகளைக் கொன்றதாக 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' படம் சித்தரிக்கிறது என்று குற்றம்சாட்டி, படத்துக்குத் தடை விதிக்கக் கோரி பொது நல வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார். வரலாற்றின் ஒருபக்கத்தை மட்டுமே காட்டி, முஸ்லிம்களின் உணர்வுகளைப் புண்படுத்துவதாகக் கூறிய அவர், இதனால் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை தூண்டப்படும் என்று கூறியிருந்தார். எனினும் தொழில்நுட்பக் காரணங்களுக்காக வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
அதேபோல காஷ்மீர் கிளர்ச்சியின்போது உயிரிழந்த இந்திய ராணுவ வீரரின் மனைவி, தன்னுடைய கணவர் குறித்து தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாகக் கூறி வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து சம்பந்தப்பட்ட வீரர் குறித்த காட்சிகள் நீக்கப்பட்டு, படம் வெளியாகியுள்ளது.
காஷ்மீரில் இனப் படுகொலை
இதற்கிடையே இந்தப் படம் காஷ்மீரின் உண்மை என்று கூறிய படத்தின் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி, காஷ்மீர் பண்டிட்டுகள் வெளியேற்றப்பட்டதை இனப் படுகொலை என்றும் விமர்சித்தார்.
படத்தை எடுக்கும் முன், காஷ்மீரில் இருந்து வெளியேற்றப்பட்ட 700 காஷ்மீரிகளிடம் பேசியதாகவும் சுமார் 2 ஆண்டுகளுக்கு இந்தப் பணி நடைபெற்றதாகவும் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி தெரிவித்திருந்தார். முன்னதாக விவேக் அக்னிஹோத்ரி இயக்கத்தில் வெளியான முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி குறித்த படமும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது.
இந்தப் படத்தைப் பார்த்து யாரும் விமர்சிக்கக்கூடாது என்று தமிழகத்தில் கண்டிப்பான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அதனாலேயே படம் குறித்து அதிகம் பேசப்படவில்லை என்றும் இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த அர்ஜூன் சம்பத் குற்றம் சாட்டியுள்ளார்.
காஷ்மீர் என்றாலே சர்ச்சைதான் என்ற சூழலில், காஷ்மீர் கிளர்ச்சி குறித்த படமும் சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது.