முழு இந்தியாவா? இந்தி-இந்தியாவா? - இந்தி அதிகாரபூர்வ மொழியான வரலாறு இன்று!
இன்றைய தேதியில் மத்திய அரசின் அனைத்துவித அறிக்கைகளும், நீதிமன்ற உத்தரவுகள், ஊடகத் தொடர்பு, பொது உத்தரவு என அத்தனையும் ஆங்கிலம், இந்தி என இரண்டு மொழிகளில் அரசால் வெளியிடப்படுவதற்குக் காரணம் அதுதான்
26 ஜனவரி இந்திய அரசியலமைப்புச் சட்டம் செயல்பாட்டுக்கு வந்த நாள். அதே தினத்தில்தான் நாட்டின் அதிகாரபூர்வ மொழியாக ஆங்கிலமும் இந்தியும் இருக்கும் என மத்தியில் அரசால் முடிவு செய்யப்பட்டது. இந்தி ஆட்சி மொழிகளில் ஒன்றாகக் கொண்டு வரும் முயற்சிகள் எதோ இன்று நேற்று நிகழ்ந்தது அல்ல. ஒரு நாட்டின் ஏகாதிபத்தியமாக இருக்க அந்த நாட்டில் ஏகாதிபத்தியச் சிந்தனைகளை விதைக்க மொழியை விடச் சிறந்த ஆயுதம் எதுவும் இல்லை.
1947ல் இந்தியா சுதந்திரம் பெற்றாலும் இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஆங்கிலேயர்கள் கொஞ்சம் கொஞ்சமாக நாட்டை விட்டு வெளியேற முடிவு செய்த நிலையில் அடுத்து அந்த ஏகாதிப்பத்திய அரியணையைக் கைப்பற்றுவது யார் என்கிற பனிப்போரில் மொழியானது பெரும் ஆயுதமாக இருந்தது. அரசியல் சாசனத்தை நடைமுறைக்குக் கொண்டு வரும் அதே சமயம் நாட்டின் அதிகாரபூர்வ மொழியாக இந்தி இருக்கும் என அரசியல் நிர்ணய சபையில் விவாதங்கள் எழுந்தது. அப்போது ‘எனது அருமை உத்திரப்பிரதேசத்துச் சகோதரர்கள் இந்தி-ஏகாதிபத்தியத்தை இங்கே கசையடிப்பதன் மூலம் எங்களுக்கு எந்த வகையிலும் உதவப்போவதில்லை. நாடு முழு இந்தியாவாக இருக்க வேண்டுமா அல்லது இந்தி-இந்தியாவாக இருக்க வேண்டுமா என்பது உத்திரப்பிரதேசத்து நண்பர்களின் தேர்வைப் பொறுத்தது’ எனப் பேசினார்’ நிர்ணய சபை உறுப்பினர்களில் ஒருவரான டி.டி.கிருஷ்ணமாச்சாரி.
அதுமட்டுமல்ல 1937ல் அப்போதைய காங்கிரஸ் அரசை தலைமையேற்று வழிநடத்திய ராஜாஜி அரசுப் பள்ளிகளில் இந்தியும் இடம்பெறும் என்றபோது மெட்ராஸ் மாகாணத்தின் பல்வேறு இடங்களில் போராட்டம் வெடித்தது, தாளமுத்து, நடராசன் என்கிற இருவர் இந்த போராட்டத்தில் தங்கள் உயிரைத் தியாகம் செய்தார்கள். இதற்கிடையே 1939ல் இரண்டாம் உலகப் போர் இழப்பீடுகளை எதிர்த்து காங்கிரஸ் அரசு ராஜினாமா செய்த நிலையில் 1940ல் அப்போதைய் ஜெனராலாக இருந்த எர்ஸ்கைன் பள்ளிகளில் இந்தி கட்டாயம் என்கிற அரசு உத்தரவைத் திரும்பப் பெற்றார். இதற்கிடையேதான் சுதந்திரத்துக்குப் பிறகு பல கால நீண்ட விவாதத்தின் அடிப்படையில் இந்தி மற்றும் ஆங்கிலம் இரண்டுமே அதிகாரப்பூர்வ மொழியாக இருக்கும் என 1950ல் அறிவிக்கப்பட்டது. மேலும் அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 344ல் கூறுவதுபடி அடுத்த 15 ஆண்டுகளுக்கு இது செயல்பாட்டில் இருக்கும் என அறிவிக்கப்பட்டது. அப்படியிருந்த சூழலில் 1963ல் கொண்டுவரப்பட்ட அதிகாரப்பூர்வ மொழிகள் சட்டம் இந்தி மட்டுமே இந்தியாவின் அதிகாரபூர்வ மொழியாக இருக்கும் என்கிற சூழலை உண்டுபண்ணியது. அப்போது ராஜ்யசபா உறுப்பினராக இருந்த அண்ணாதுரை இந்தச் சட்டத்துக்கு எதிராகக் கொதித்து எழுந்தார். ஆங்கிலமும் இந்தியும் ஆட்சிமொழியாக காலவரையற்று இருக்க வேண்டும் என தனது வாதத்தை முன்வைத்தார். அதே சமயம் ஆட்சிமொழி நிர்ணயத்துக்கான காலவரையறை தேதி நெருங்கிக் கொண்டிருந்தது. தமிழ்நாட்டில் ஆங்காங்கே இந்தித் திணிப்பை எதிர்த்தும் அதிகாரப்பூர்வ மொழிகள் சட்டம் 1963ஐ எதிர்த்தும் கிளர்ச்சி எழுந்தது. இந்தக் கிளர்ச்சியைக் கட்டுக்குள் கொண்டுவர அப்போதைய பிரதமராக இருந்த லால் பகதூர் சாஸ்திரி 26 ஜனவரி 1965ல் ஆங்கிலமும் இந்தியும் அதிகாரபூர்வ மொழியாகத் தொடரும் என்பதை வானொலி வழியாக அறிவித்தார். இந்த அறிவிப்பு 1967ல் சட்டத் திருத்தமாகவே கொண்டுவரப்பட்டது. அண்ணாதுரை கேட்டுக்கொண்டது போலவே கொடுக்கப்பட்ட காலவரையறைக்குக் பிறகும் இரண்டு மொழிகளும் அதிகாரப்பூர்வ மொழியாக இருக்கும் என சட்டத்திருத்தம் செய்யப்பட்டது.
இன்றைய தேதியில் மத்திய அரசின் அனைத்துவித அறிக்கைகளும், நீதிமன்ற உத்தரவுகள், ஊடகத் தொடர்பு, பொது உத்தரவு என அத்தனையும் ஆங்கிலம், இந்தி என இரண்டு மொழிகளில் அரசால் வெளியிடப்படுவதற்குக் காரணம் அதுதான்.
டி.டி.கிருஷ்ணமாச்சாரி சொன்னதுபோல ஒருவேளை உத்திரப்பிரதேசத்து நண்பர்கள் இந்தி -இந்தியாவைத் தேர்ந்தெடுத்திருந்தால் இன்று இந்தியா எப்படி இருந்திருக்கும் என கற்பனை கூட செய்துபார்க்க முடியாதுதான். நாடு நாடாக இருக்க மாநிலங்கள் அதன் தனித்துவம் குன்றாமல் இருக்க வேண்டும். தனித்துவத்துக்கு அதன் மொழி முதன்மையானது. மொழிகளை இந்தி ஏகாதிபத்தியத்துக்கு பலியாகாமல் காப்பாற்றியதன் வழி உண்மையில் இவர்கள் இந்தியாவைக் காப்பாற்றினார்கள் என்று சொன்னால் அது மிகையில்லை.