பிரதம மந்திரி கிஷான் நிதி: தகுதியற்ற விவசாயிகளை சென்றடைந்த ரூ.3 ஆயிரம் கோடி!
இந்தியாவில் உள்ள சுமார் 125 மில்லியன் விவசாயிகள் பயனடைகின்ற வகையில் பிரதம மந்திரி கிஷான் யோஜனா என்ற திட்டத்தினை மத்திய அரசு அறிவித்தது.
பிரதம மந்திரி கிஷான் யோஜனா திட்டத்தின் கீழ் 42 லட்சத்திற்கு மேற்பட்ட தகுதியற்ற விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட ரூ.3 ஆயிரம் கோடியினை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுவருவதாக மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் பிரதான தொழிலாகவே விவசாயம் உள்ளது. முன்பெல்லாம் எங்கு பார்த்தாலும் பச்சைப்போர்வை போர்த்தியது போல் தான் நம்முடைய விளை நிலங்களைப்பார்க்க முடியும். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக கடுமையான வறட்சியினைத்தான் விவசாயிகள் சந்தித்துவருகின்றனர். அதிலும் விவசாயத்திற்காகப் பெற்ற கடன்களைத் திரும்பி கட்ட முடியாமல் தற்கொலை செய்த நிகழ்வுகள் எல்லாம் அரங்கேறியது. இப்படிப்பட்ட சூழலில் தான் இந்தியாவில் உள்ள சுமார் 125 மில்லியன் விவசாயிகள் பயனடைகின்ற வகையில் பிரதம மந்திரி கிஷான் யோஜனா என்ற திட்டத்தினை கடந்த 2018 ஆம் ஆண்டு மத்திய அரசு அறிவித்தது. இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யும் தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் 3 தவணைகளாக ரூ.6 ஆயிரம் நிதி உதவிகள் வழங்கப்படுகிறது.
ஆனால் இத்திட்டம் எளிய விவசாயிகளுக்கு சென்றடையவில்லை என்ற குற்றச்சாட்டு சமீப காலங்களாக அதிகரித்து வருகிறது. இந்தக் குற்றச்சாட்டினை நிரூபிக்கும் வகையில் தான், இன்று நாடாளுமன்றத்தில் மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் பேசியுள்ளார். அவர் இந்தியா முழுவதும் பிரதம மந்திரியின் கிஷான் யோஜனா திட்டத்தின் கீழ், தகுதியற்ற 42 லட்ச விவசாயிகளுக்கு ரூ. 3 ஆயிம் கோடி வழங்கப்பட்டுள்ள நிலையில் அதனைத் திரும்ப பெறும் முயற்சியில் அரசு ஈடுபட்டுவருவதாக கூறியுள்ளார். குறிப்பாக அதிகபட்சமாக அசாமில் 8.35 லட்ச தகுதியற்ற விவசாயிகளிடமிருந்து ரூ.54 கோடியும், அதனைத்தொடர்ந்து தமிழ்நாட்டில் 7.22 லட்ச தகுதியற்ற விவசாயிகளிடமிருந்து ரூ. 340 கோடியும் பெறுவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுவருவதாக தெரிவித்துள்ளார். இதேப்போன்று பஞ்சாப்பில் 5.62 லட்ச தகுதியற்ற விவசாயிகளிடமிருந்து ரூ.437 கோடியும், மகாராஷ்டிராவில் 4.45 லட்ச பேரிடமிருந்து ரூ.358 கோடியும், உத்தரப்பிரதேசத்தில் 2.65 லட்ச தகுதியற்ற விவசாயிகளிடமிருந்து ரூ. 258 கோடி மற்றும் குஜராத்தில் 2.36 லட்சம் தகுதியற்ற விவசாயிகளிடமிருந்து ரூ. 220 கோடியினை திரும்ப பெறுவதற்கான நடவடிக்கைகளை அரசு தீவிரமாக மேற்கொண்டுவருவதாகவும் மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும் பிரதம மந்திரியின் கிசான் நிதியினை தவறாகப்பயன்படுத்தப்படாமல் இருக்க அரசாங்கத்தால் சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார். மேலும் கஷ்டப்படும் உண்மையான விவசாயிகளுக்கு பயனளிக்கும் பொருட்டு இத்திட்டம் முறையாக செயல்படுத்தப்படுவதாகவும், பல மாநிலங்களில் தகுதியற்ற விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட பணத்தினை மீட்டெடுக்க அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பபட்டுள்ளதாகவும் அமைச்சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இதோடு தகுதியற்ற பயனாளிகளிடமிருந்து பணத்தினை மீட்டெடுப்பதற்கான நிலையான செயல்பாட்டு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். அதன்படி, வருமான வரி செலுத்துவோரை அடையாளம் காண்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் மாநில அரசுகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளார். மேலும் பிரமத மந்திரியின் கிஷான் நிதியின் கீழ் பதிவு செய்யும் போது அந்த விவசாயிகள் தகுதியானவர்களா? என சரிபார்க்க வேண்டும் என அனனத்து மாநிலங்களுக்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது போன்ற பல்வேறு நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் அனைத்து மாநில அரசுகளுக்கும் விநியோகிக்கப்பட்டுள்ளன என்று அமைச்சர் நரேந்திர சிங் தோமர் பட்டியலிட்டுள்ளார்.