Telangana : ஒரு மனம்.. இரு மதம்! கதறிய மனைவி சுல்தானா! நடுரோட்டில் வெட்டிக்கொல்லப்பட்ட கணவன் நாகராஜ்!
கொலையான நாகராஜின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்த காவல்துறையினர் கொலை சம்பவத்தில் சிக்கிய சுல்தானாவின் உறவுக்கார இளைஞரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தெலங்கானா மாநிலம் செகந்திராபாத் பகுதியை சேர்ந்த 25 வயதான இளைஞரான நாகராஜ் என்பவர் ஹைதராபாத்தில் உள்ள கார் ஷோரூம் ஒன்றில் சேல்ஸ் மேனாக பணிபுரிந்து வந்தார்.
இவரும் அதே பகுதியை சேர்ந்த சையது அஷ்ரின் சுல்தானா என்ற முஸ்லீம் பெண்ணும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களின் காதலுக்கு இரு வீட்டாரும் தொடக்கத்தில் இருந்தே கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதன் காரணமாக, இரண்டு மாதங்களுக்கு முன்பு நாகராஜும், சுல்தானாவும் தங்கள் பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டு ஹைதராபாத்தில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தனர்.
கொலை :
நாகராஜ், தனது மனைவி சுல்தானாவுடன் கடந்த புதன்கிழமை இரவு ஹைதராபாத் நகரப்பகுதியில் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். சரூர்நகர் தாசில்தார் அலுவலகம் அருகே வாகன நெரிசல் மிகுந்த பகுதியில் அவர் வந்த போது அவரது மோட்டார் சைக்கிளை மறித்த 4 பேர் கொண்ட கும்பல், மனைவி சுல்தானாவின் கண்முன்னே நாகராஜை கத்தியால் சரமாரி தாக்குதல் நடத்தினர்.
உயிருக்கு போராடிய தனது கணவன் நாகராஜனை காப்பாற்ற சுல்தானா முயற்சி செய்தார். அப்பொழுது, சுல்தானாவை கீழே தள்ளிவிட்டு நாகராஜை சரமாரியாக அடித்து கொலை செய்தனர். தாக்குதல் நடத்திய 4 பேரும் தனது உறவினர்கள் என்பதை அறிந்த சுல்தானா தனது கணவரின் உயிரை காக்க போராடியும், தனது கணவரின் உயிரை காப்பாற்ற முடியாமல் கதறி அழுதார்.
ஏற்கனவே தலையில் வெட்டப்பட்டு உயிரிழந்து கிடந்த நாகராஜின் சடலத்தை மீண்டும் இரும்பு கம்பியால் தாக்குவதற்கு ஒருவன் முயற்சிக்க சுல்தானா அவனை தடுத்தார். இதையடுத்து அந்த பெண்ணை தாக்க கம்பியை ஓங்க, இதை கண்டு ஆவேசமான அந்த பகுதி மக்கள் கையில் இருந்த ஹெல்மெட் உள்ளிட்டவற்றை கொண்டு அந்த கொலையாளி மீது தாக்கினர். தொடர்ந்து அந்த நபரை மடக்கிப் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
கொலையான நாகராஜின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்த காவல்துறையினர் கொலை சம்பவத்தில் சிக்கிய சுல்தானாவின் உறவுக்கார இளைஞரிடம் விசாரணை நடத்தினர். அவரிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில், தங்கள் வீட்டுப்பெண்ணை வேறு மதத்தை சேர்ந்த இளைஞர் திருமணம் செய்து கொண்டதை ஏற்க முடியாமல், ஆத்திரத்தால் சுல்தானாவின் உறவினர்கள் திட்டமிட்டு இந்தக் கொலையில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரது உறவினர்கள் 4 பேரை பிடித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்