புதிதாக பிறந்த கன்றுக்கு பெயர் சூட்டும் விழா… பிரம்மாண்டமாக நடத்திய தம்பதியினர்! தெலங்கானாவில் ருசீகரம்…
அந்த பசு கர்ப்பமாக இருந்தபோது, அதற்கு வளைகாப்பு விழாவையும் கூட இந்த தம்பதியினர் நடத்தி உள்ளனர் என்பதுதான் இதில் சுவாரஸ்யமான விஷயம்.
தெலங்கானா மாநிலம் யெல்லாரெட்டிப்பேட்டையைச் சேர்ந்த தம்பதியினர், தங்கள் வீட்டு பசுவுக்குப் பிறந்த கன்றுக்கு 'சிவடு' எனப் பெயர் சூட்டி, அதற்கு பிரம்மாண்ட பெயர் சூட்டு விழாவை நடத்தி உள்ளனர். ராஜண்ணா- சிர்சில்லா மாவட்டத்தில் நடந்த இந்த வினோத பெயர் சூட்டு விழாவின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. மிரியல்கர் ராமன் கிஷன் மற்றும் அவரது மனைவி, சில பழமைவாத நம்பிக்கைகளைக் கொண்டுள்ளதால் மாட்டிற்கு பெயர் வைத்து விழா கொண்டாடி இருக்கின்றனர். இந்துமதத்தின் மீது தீவிர நம்பிக்கை கொண்ட அவர்கள் நீண்ட காலமாக பசுவைப் பராமரித்து, வழக்கமான பூஜைகள் மற்றும் பிரார்த்தனைகளும் செய்து வருகின்றனராம். பல நாட்களாகவே இந்த தம்பதியினர் இது போன்ற செயல்களை செய்து வந்த போதிலும், கன்றுக்குட்டிக்கு பிரம்மாண்ட பெயர் சூட்டு விழா நிகழ்த்தியது பெரிதாக பேசப்படுகிறது.
அந்த பசு கர்ப்பமாக இருந்தபோது, அதற்கு வளைகாப்பு விழாவையும் கூட இந்த தம்பதியினர் நடத்தி உள்ளனர் என்பதுதான் இதில் சுவாரஸ்யமான விஷயம். அது கன்று ஈன்றதை அடுத்து, பிறந்த கன்றுக்கு பூணூல் சூட்டு விழாவும் நடத்தினார்கள். கடந்த 21ம் தேதி மார்க்கண்டேயர் கோவிலில் வேத பண்டிதர் உமா சங்கர சர்மாவின் வேதமந்திரங்களுக்கு இடையில் கன்றுக்கு பெயர் சூட்டும் நிகழ்ச்சியை நடத்தி, பிறந்த கன்றுக்கு 'சிவடு' என்று சிவன் பெயரை சூட்டினர். தம்பதிகள் பசு மற்றும் சிவடு இரண்டையும் புதிய ஆடைகள் மற்றும் வெள்ளியால் செய்யப்பட்ட ஆபரணங்களால் அலங்கரித்தனர். இந்த தம்பதியரின் அழைப்பின் பேரில், யெல்லாரெட்டிப்பேட்டை மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பெயர் சூட்டும் விழாவில் கலந்துகொண்டு, விருந்து உண்டு சென்றுள்ளனர்.
பசுவுக்கு பூஜைகள் செய்வதால், அதை தெய்வீக உயிரினமாக கருதும் நபர்களுக்கு ஆரோக்கியம், செல்வம் மற்றும் செழிப்பு கிடைக்கும் என்பது அவர்களின் நம்பிக்கை. பெயர் சூட்டும் விழாவில் கலந்து கொண்ட திரளான மக்களிடம் தம்பதிகள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இது குறித்த செய்திகள் சமூக வலைதளங்களில் வெளியாகி விவாதத்தை எழுப்பி உள்ளது. இந்தியாவில் பசு மிகப்பெரிய சர்ச்சைக்குரிய விஷயமாக இருக்கும் நிலையில் இது போன்ற சம்பவம் நிகழ்ந்ததை அடுத்து விவாதம் மென்மேலும் அதிகரித்து உள்ளது.
இதே போன்று கடந்த மார்ச் மாதத்தில் ஒரு கன்றுக்கு பெயர் சூட்டு விழா மங்களுருவில் நடைபெற்றது. ஆனால் அது இந்து மத நம்பிக்கைகளுக்காக நடத்தப்படவில்லை. காசர்கோடு பகுதியில் உருவான மாட்டு வகை ஆன கிட்டா வகை மாடுகளின் இனம் குறித்த விழிப்புணர்வை வழங்குவதற்காக அந்த பெயர் சூட்டு விழா நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.