BJP Chief Arrest: நட்ட நடு இரவில் கைது; தெலங்கானா பா.ஜ.க. தலைவரை கஸ்டடியில் எடுத்த காவல்துறை - நடந்தது என்ன?
தெலங்கானா மாநில பாஜக தலைவர் பண்டி சஞ்சய் குமாரை போலீஸார் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனர். இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பியுள்ளது.
![BJP Chief Arrest: நட்ட நடு இரவில் கைது; தெலங்கானா பா.ஜ.க. தலைவரை கஸ்டடியில் எடுத்த காவல்துறை - நடந்தது என்ன? Telangana BJP Chief Midnight Arrest Party Says Illegal know more details BJP Chief Arrest: நட்ட நடு இரவில் கைது; தெலங்கானா பா.ஜ.க. தலைவரை கஸ்டடியில் எடுத்த காவல்துறை - நடந்தது என்ன?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/05/ee44f9e7ebfa1515626686918c5196711680700083493224_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தெலங்கானாவில் இந்தாண்டின் இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டு, தெலங்கானா மாநிலம் உருவாக்கப்பட்டதை தொடர்ந்து நடத்தப்பட்ட முதல் தேர்தலில் கே. சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலங்கானா ராஷ்டிரிய சமிதி (கட்சியின் பெயர் பார்த் ராஷ்டிரிய சமிதி என மாற்றப்பட்டுள்ளது) வெற்றி பெற்றது.
தெலங்கானா அரசியல்:
இதையடுத்து, அங்கு ஆட்சியை கைப்பற்ற பாஜக அரசு தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், ஹைதராபாத்தை பாக்கியநகர் என பிரதமர் மோடி குறிப்பிட்டது பெரும் பேசுபொருளாக மாறியது. அதேபோல, சந்திரசேகர ராவ், குடும்ப அரசியலில் ஈடுபடுவதாக பாஜக தலைவர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.
இதற்கிடையே, பாரத் ராஷ்டிரிய சமிதி கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்களை தங்கள் பக்கம் இழுக்க பாஜக பேரம் பேசியதாக வெளியான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக, தெலங்கானா காவல்துறை மூன்று பேரை கைது செய்தது.
கஸ்டடியில் எடுத்த மாநில காவல்துறை:
இப்படி அரசியல் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கும் தெலங்கானாவில் புதிய சர்ச்சை வெடித்துள்ளது. தெலங்கானா மாநில பாஜக தலைவர் பண்டி சஞ்சய் குமாரை போலீஸார் நேற்று இரவு கைது செய்தனர். இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பியுள்ளது.
கரீம்நகர் நாடாளுமன்ற உறுப்பினரான பண்டி சஞ்சய் குமார், எந்த விளக்கமும் இன்றி அவரது வீட்டில் இருந்து காவலில் எடுக்கப்பட்டதாகத அவரது கட்சியினர் தெரிவித்துள்ளனர். பின்னர், அவர் வேறு வேறு காவல்நிலையங்களுக்கு மாற்றப்பட்டது பல்வேறு கேள்விகளுக்கு வழிவகுத்தது. அவரது பாதுகாப்பு குறித்து பாஜகவினர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதை சட்டவிரோத கைது என்று கூறி, பாஜகவும் தெலங்கானா உயர்நீதிமன்றத்தில் இன்று வழக்கு தொடர்ந்துள்ளது. பண்டி குமார், எதற்காக காவலில் வைக்கப்பட்டார், தற்போது அவர் எங்கு அடைக்கப்பட்டுள்ளார் என மனுவில் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளது.
இதுகுறித்து காவல்துறை விளக்கம் அளிக்கையில், "பண்டி குமார் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார். மேல்நிலைப் பள்ளித் தேர்வுத் தாள்கள் கசிந்த விவகாரம் தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார்". ஆனால், இந்த குற்றச்சாட்டை பாஜக மறுத்துள்ளது. அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும் விமர்சித்துள்ளது.
வரும் சனிக்கிழமை, பிரதமர் மோடி தெலங்கானாவுக்கு பயணம் மேற்கொள்கிறார். அப்போது, பல்வேறு வளர்ச்சி பணி திட்டங்களை தொடங்கி வைத்து பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொள்ள உள்ளார். பிரதமர் மோடியின் தெலங்கானா பயணம் குறித்த அறிவிப்பு வெளியானாதில் இருந்தே பாஜகவுக்கும் பாரத் ராஷ்டிரிய சமிதிக்கும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்த சூழ்நிலையில், தெலங்கானா மாநில பாஜக தலைவர் காவலில் எடுக்கப்பட்டுள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)