TN Floods: தமிழக மழை வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க இயலாது - மத்திய நிதியமைச்சர் திட்டவட்டம்..
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடியை சந்தித்து கனமழையால் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
தமிழ்நாட்டில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த டிசம்பர் மாதம் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் மிக்ஜாம் புயலால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை மற்றும் அதன் தொடர்ச்சியாக வெள்ளம் பாதிப்பு ஏற்பட்டது. இதேபோல் டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் தென்மாவட்டங்களில் அதீத கனமழை பெய்து பெருவெள்ளம் சூழ்ந்தது. இந்த புயல், மழை, வெள்ள பாதிப்பால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடியை சந்தித்தார். அப்போது சீரமைப்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக தற்காலிக நிவாரணத் தொகையாக 7,033 கோடி ரூபாயும், நிரந்தர நிவாரணத் தொகையாக 12,659 கோடி ரூபாயும் கோரப்பட்டது. அந்நிதியினை விரைந்து ஒதுக்கீடு செய்யுமாறு மனு அளித்திருந்தார்.
அப்போது மிக்ஜம் புயல் கனமழையால் சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் கடந்த 47 ஆண்டுகளாக இல்லாத கனமழையால் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்பையும், தென் மாவட்டங்களில் தற்போது வரலாறு காணாத வகையில் 100 ஆண்டுகள் இல்லாத கனமழை பெய்ததால் ஏற்பட்ட பாதிப்புகளையும் கருத்தில் கொண்டு,தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று இந்தியப் பிரதமர் மோடியிடம், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “தமிழ்நாட்டில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது” என கூறினார். தேசிய பேரிடராக அறிவிப்பதற்கு சில வழிமுறைகள் உள்ள நிலையில், இதுவரை எந்த மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பை பேரிடராக அறிவித்தது இல்லை எனவும் அவர் கூறினார். தொடர்ந்து பேசிய நிர்மலா சீதாராமன், “வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென்மாவட்டங்களில் டிசம்பர் 21 ஆம் தேதி வரை 42,290 பேர் மீட்கப்பட்டுள்ளனர்” எனவும் கூறினார்.
மேலும், “மழை வெள்ளத்தால் தூத்துக்குடி, நெல்லை மக்கள் பாதிக்கப்பட்டபோது அவர்களை சென்று பார்க்காமல் கூட்டணி கூட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து டெல்லிக்கு வந்தார் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் எனவும் நிர்மலா சீதாராமன் குற்றம் சாட்டினார். கூட்டங்கள் எல்லாம் முடிந்த பின்பு, போகிற போக்கில் பிரதமரை சந்திக்கலாம் என்று சந்தித்துவிட்டு சென்றார்.
ஆனால், இரவானாலும் பராவாயில்லை ஒரு மாநிலத்தில் முதல்வர் நம்மை பார்க்க வேண்டும் என்று கேட்கிறார் என்பதற்காக அவரை பார்த்து பேசியவர் தான் பிரதமர் மோடி என நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.