ED: எஸ்.கே. மிஸ்ராவை தவிர தகுதியான அதிகாரிகள் யாரும் இல்லையா..? - மத்திய அரசை கடிந்து கொண்ட உச்சநீதிமன்றம்
'எஸ்.கே. மிஸ்ரா இல்லாமல் ஒட்டுமொத்த அமலாக்கத்துறையும் செயல்பட முடியாதா? மற்ற அதிகாரிகள் எல்லாம் தகுதி அற்றவர்களா?'
எஸ்.கே. மிஸ்ராவின் பதவி நீட்டிப்பு வழக்கில் மத்திய அரசுக்கு காட்டமாக கண்டனம் தெரிவித்த உச்சநீதிமன்றம், அதிகாரிகள் எல்லாம் தகுதி அற்றவர்களா என கேள்வி எழுப்பி உள்ளது.
அமலாக்கத்துறையின் இயக்குநராக இருக்கும் எஸ்.கே. மிஸ்ராவின் பதவிக்கால்ம் இந்த மாதம் 31ம் தேதியுடன் முடிய உள்ளது. ஏற்கெனவே அவரது பதவிக்காலத்தை மூன்று முறை நீட்டித்ததால், இந்த முறை புதிய தலைவரை தேர்வு செய்யுமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது. இதுமட்டுமில்லாமல் கடந்த 2021ம் ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்பை மீறும் விதமாக எஸ்.கே. மிஸ்ராவின் பதவிக்காலம் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் உச்சநீதிமன்றம் அதிருப்தியை வெளிபடுத்தி இருந்தது.
இந்த சூழலில் எஸ்.கே.மிஸ்ராவின் பதவிகாலத்தை அக்டோபர் 31ம் தேதி வரை நீட்டிக்க அனுமதி கேட்ட வழக்கு விசாரணைக்கு வந்தது. சர்வதேச அளவிலான நிதி மோசடிகளை தடுப்பதற்கான அமைப்புக்கு இந்தியா சார்பில் அளிக்க வேண்டிய அறிக்கையை எஸ்.கே. மிஸ்ரா தயாரித்து வருவதாலும், அவரின் பணி தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பதாலும் மிஸ்ராவின் பதவிக்காலத்தை நீட்டிக்க வேண்டும் என மத்திய அரசு சார்பில் முறையிடப்பட்டது. அப்போது பேசிய உச்சநீதிமன்ற நீதிபதிகள், எஸ்.கே. மிஸ்ரா இல்லாமல் ஒட்டுமொத்த அமலாக்கத்துறையும் செயல்பட முடியாதா என்றும், மற்ற அதிகாரிகள் எல்லாம் தகுதி அற்றவர்களா என்றும் கேள்வி எழுப்பினர். மேலும் மூன்று எஸ்.கே. மிஸ்ராவின் பதவிக்காலத்தை ஜூலை 31ம் தேதி வரை நீட்டித்தது சட்டவிரோதமானது என்ற நீதிபதிகள், மத்திய அரசுக்கு கண்டனத்தையும் பதிவு செய்தது. இறுதியாக எஸ்.கே. மிஸ்ரா செப்டம்பர் 15ம் தேதி வரை பதவியில் நீட்டிப்பார் என உத்தரவிட்டது. மேலும், செப்டம்பர் 15ம் தேதி நள்ளிரவு எஸ்.கே.மிஸ்ராவின் பதவிக்காலம் முடியும் என்ற உச்சநீதிமன்றம், அதன்பிறகு மிஸ்ராவின் பதவி நீட்டிப்பு தொடர்பாக எந்த வழக்கும் ஏற்கப்படாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கடந்த 2018ஆம் ஆண்டு, நவம்பர் மாதம், அமலாக்கத்துறை இயக்குநராக எஸ்.கே.மிஸ்ரா நியமிக்கப்பட்டார். அமலாக்கத்துறை இயக்குநரின் பதவிக்காலம் 2 ஆண்டுகளாகும். அதன்படி, 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம், அவர் ஓய்வு பெறவிருந்தார். ஆனால், அவருக்கு மேலும் ஓராண்டு பதவிக்கால நீட்டிப்பு வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டது. அரிதான மற்றும் விதிவிலக்கான வழக்குகளில் மட்டுமே நீட்டிப்புகள் வழங்கப்பட வேண்டும் என்பதால், மிஸ்ராவை மேலும் நீட்டிக்க வேண்டாம் என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது.
ஆனால், நவம்பர் 2021 இல், மிஸ்ரா ஓய்வு பெறுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு, இரண்டு அவசரச் சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்தது. அதன்படி, அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ இயக்குநர்களின் பதவிக்காலத்தை ஓராண்டுக்கு நீட்டிக்கும் மத்திய அரசின் அதிகாரம் வலுப்படுத்தப்பட்டது. நவம்பர் 2022 இல், மிஸ்ராவின் பதவிக்காலம் மீண்டும் ஒருமுறை நீட்டிக்கப்பட்டது. இதை எதிர்த்து, காங்கிரஸ் மூத்த தலைவர்களான ஜெயா தாக்கூர், ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் சாகேத் கோகாய் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர்.