மீண்டும் மாநிலமாகிறதா ஜம்மு காஷ்மீர்? சட்டப்பிரிவு 370 ரத்து வழக்கில் உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
ஜம்மு காஷ்மீருக்கு என தனி இறையாண்மை கிடையாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டது. அதுமட்டும் இன்றி, ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டத்தின் மூலம் அந்த மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. மத்திய அரசு எடுத்த இந்த நடவடிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
"சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது"
பல முக்கிய அம்சங்கள் எடுத்துக்கொள்ளப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில், சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்து உத்தரவு பிறப்பிக்க குடியரசு தலைவருக்கு அதிகாரம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து விவகாரத்தில் மத்திய அரசு எடுத்த நடவடிக்கை செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீருக்கு என தனி இறையாண்மை கிடையாது என கூறிய உச்ச நீதிமன்றம், "ஜம்மு காஷ்மீரில் போர் சூழல் காரணமாக சட்டப்பிரிவு 370 இடைக்கால ஏற்பாடாக கொண்டு வரப்பட்டது. ஜம்மு காஷ்மீர் அரசியல் நிர்ணய சபையின் பரிந்துரைக்கு குடியரசு கட்டுப்பட தேவையில்லை. ஜம்மு காஷ்மீர் அரசியல் நிர்ணய சபையே ஒரு தற்காலிக அமைப்புதான்.
இந்தியாவுடன் ஜம்மு காஷ்மீர் இணைந்த போது, அதன் இறையாண்மையை தக்க வைத்து கொண்டதா என்ற கேள்விக்கு இல்லை என்பதுதான் பதில். ஜம்மு காஷ்மீர் இறையாண்மையை தக்கவைத்துக்கொண்டதாக அரசியலமைப்பில் குறிப்பிடவில்லை. அரசியலமைப்பில் ஜம்மு காஷ்மீர் இறையாண்மை பற்றிய குறிப்பு தெளிவாக இல்லை" என்றார்.
"ஜம்மு காஷ்மீருக்கு விரைவில் மாநில அந்தஸ்து"
ஜம்மு காஷ்மீருக்கு விரைவில் மாநில அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் எனக் கூறிய நீதிபதிகள், "ஜம்மு காஷ்மீருக்கு விரைவில் மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்றும், யூனியன் பிரதேச அந்தஸ்து தற்காலிகமானது என்றும் சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்துள்ளார். சொலிசிட்டர் ஜெனரல் சமர்ப்பித்ததைக் கருத்தில் கொண்டு, ஜம்மு காஷ்மீரை யூனியன் பிரதேசமாக மறுசீரமைத்தது செல்லுமா என்பதைத் தீர்மானிக்க வேண்டிய அவசியமில்லை.
மாநிலத்தின் ஒரு பகுதியை யூனியன் பிரதேசமாக மாற்றுவதற்கு சட்டப்பிரிவு 3 அனுமதிப்பதால், லடாக் யூனியன் பிரதேசமாக மறுசீரமைக்கப்பட்டது செல்லும். நாடாளுமன்றத்தால் ஒரு மாநிலத்தை யூனியன் பிரதேசமாக மாற்ற முடியுமா என்ற கேள்விக்கு பதில் இல்லை.
செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்படுவதை உறுதிசெய்ய நடவடிக்கை எடுக்குமாறு இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அறிவுறுத்துகிறோம். மாநில அந்தஸ்தை மீட்டெடுப்பது கூடிய விரைவில் நடைபெறும்" என தெரிவித்துள்ளனர்.
இந்திய தலைமை நீதிபதி டி. ஒய். சந்திரசூட், நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, பி.ஆர். கவாய், சூர்யா காந்த், சஞ்சய் கிஷன் கவுல் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.