Supreme Court: காவிரி ஆணைய கூட்டத்தில் மேகதாது பற்றி விவாதிக்க ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை தடை..!
உச்சநீதிமன்றத்தில் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேகதாது பற்றி விவாதிப்பது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேகதாது பற்றி விவாதிக்கக் கூடாது என உச்சநீதிமன்றத்தின் தடை தொடர்கிறது.
உச்சநீதிமன்றத்தில் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேகதாது பற்றி விவாதிப்பது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசின் தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் ஆஜராகாததால் வழக்கின் விசாரணை ஆகஸ்ட் 10 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இதனால் இடைப்பட்ட காலக்கட்டத்தில் விரி மேலாண்மை ஆணையக் கூட்டம் நடந்தாலும் அதில் மேகதாது பற்றி விவாதிக்க முடியாது நிலை ஏற்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த ஜூன் 17 ஆம் தேதி காவிரி மேலாண்மை ஆணையத்தின் 16வது கூட்டம் டெல்லியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் அதில் கர்நாடக அரசின் மேகதாது விவகாரம் குறித்து விவாதிக்கப்படும் என நிகழ்ச்சி நிரலில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேகதாது பற்றி விவாதிக்கக்கூடாது என உத்தரவிடுமாறு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கு தொடர்ந்தது.
இதனிடையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் மற்றும் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார். இதனைத் தொடர்ந்து தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் ஜூன் 23 ஆம் தேதி மற்றும் ஜூலை 6 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு, பின் ஒத்தி வைக்கப்பட்டது. இதனால் வரும் ஜூலை 22 ஆம் தேதி காவிரி மேலாண்மை ஆணையத்தின் 16வது கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேகதாது பற்றி விவாதிக்க தமிழக அரசு சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும் நீர் பங்கீட்டை கூட உச்சநீதிமன்ற உத்தரவு படி சரியாக செயல்படுத்தாத சூழலில், மேகதாது அணை அமைத்து சரியான அளவில் நீர் தருகிறோம் என வாக்குறுதியை நாங்கள் நம்ப தயாராக இல்லை என தெரிவிக்கப்பட்டது.
அதற்கு கர்நாடக அரசு தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த கூட்டத்தில் மேகதாது பற்றி விவாதிக்கலாமா என்பது குறித்து விரி மேலாண்மை ஆணையத்தின் கருத்தை தெரிந்துக் கொள்ள விரும்புவதாக நீதிபதிகள், ஜூலை 22 ஆம் தேதி நடைபெறும் கூட்டத்தில் மேகதாது பற்றி விவாதிக்க கூடாது என தெரிவித்தனர். மேலும் 2018 ஆம் ஆண்டிலிருந்து இந்த வழக்கு நிலுவையில் இருந்து வரும் நிலையில் இன்னும் இருக்கக்கூடிய ஒரே ஒரு வாரத்தில் எதுவும் மாறிப்போய் விடுவதில்லை என நீதிபதிகள் தெரிவித்து செவ்வாய்கிழமைக்கு (ஜூலை 26) வழக்கை ஒத்தி வைத்தனர்.
இதனால் உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தால் தான் இனி காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேகதாது பற்றி விவாதிக்கக் கூடிய நிலையானது கர்நாடகாவிற்கு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.