ஜம்மு காஷ்மீர் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டது செல்லும்: தலைமை நீதிபதி சந்திரசூட்
சட்டப்பிரிவு 370ஐ நீக்கி மத்திய அரசு எடுத்த நடவடிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் மூன்று தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370ஐ நீக்கி மத்திய அரசு எடுத்த நடவடிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் மூன்று தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்திய தலைமை நீதிபதி டி. ஒய். சந்திரசூட் ஒரு தீர்ப்பும் நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, பி.ஆர். கவாய் மற்றும் சூர்யா காந்த் ஆகியோர் ஒரே தீர்ப்பை வழங்கியுள்ளனர். அதேபோல, நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் தனிப்பட்ட தீர்ப்பை வழங்கியுள்ளார்.
தலைமை நீதிபதி வழங்கிய தீர்ப்பு என்ன?
தலைமை நீதிபதி சந்திரசூட் வழங்கிய தீர்ப்பில், "ஜம்மு காஷ்மீர் அரசியல் நிர்ணய சபை கலைக்கப்பட்டதை தொடர்ந்து, சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்து உத்தரவு பிறப்பிக்க குடியரசு தலைவருக்கு அதிகாரம் உள்ளது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
சட்டப்பிரிவு 370 தற்காலிகமானதா?, அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370(1)ஐ பயன்படுத்தி ஜம்மு காஷ்மீர் அரசியல் நிர்ணய சபைக்கு பதிலாக ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை உருவாக்கப்பட்டது செல்லுமா? ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை ஒப்புதல் வழங்காததால் குடியரசு தலைவரின் உத்தரவு செல்லுமா? கடந்த 2018ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அமல்படுத்தப்பட்ட குடியரசுத் தலைவர் ஆட்சியும் அது நீட்டிக்கப்பட்டதும் செல்லுமா? ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டத்தின் மூலம் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களா பிரிக்கப்பட்டது செல்லுமா? குடியரசு தலைவர் பிறப்பித்த உத்தரவு செல்லுமா? ஆகிய விவகாரங்கள் கருத்தில் கொள்ளப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டதற்கு எதிராக மனுதாரர்கள் தனிப்பட்ட வழக்கு தொடுக்கவில்லை என்பதால் அதில் தீர்ப்பு வழங்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
மத்திய அரசின் அதிகாரங்கள் குறித்து பேசிய தலைமை நீதிபதி, "குடியரசு தலைவர் ஆட்சி அமலில் உள்ள மாநிலங்களில் மத்திய அரசின் அதிகாரங்களில் வரம்ப உள்ளது. சட்டப்பிரிவு 356இன் கீழ் அதிகாரத்தைப் பயன்படுத்துதல், குடியரசு தலைவர் உத்தரவின் நோக்கத்துடன் நியாயமான தொடர்பைக் கொண்டிருக்க வேண்டும்.
"இடைக்கால ஏற்பாடாக கொண்டு வரப்பட்ட சட்டப்பிரிவு 370"
குடியரசுத் தலைவர் ஆட்சியின் போது மாநிலத்தின் சார்பாக மத்திய அரசு எடுக்கும் ஒவ்வொரு முடிவையும் எதிர்க்க முடியாது. அப்படி செய்தால், அது அரசு நிர்வாகத்தை ஸ்தம்பிக்க வைக்கும். குடியரசுத் தலைவர் ஆட்சியின் போது, மாநிலத்தின் அடிப்படை கட்டமைப்பை மாற்றும் முடிவுகளை மத்திய அரசால் மேற்கொள்ள முடியாது என்ற மனுதாரர்களின் வாதத்தை ஏற்று கொள்ள முடியாது.
இந்தியாவுடன் ஜம்மு காஷ்மீர் இணைந்த போது, அதன் இறையாண்மையை தக்க வைத்து கொண்டதா என்ற கேள்விக்கு இல்லை என்பதுதான் பதில். ஜம்மு காஷ்மீர் இறையாண்மையை தக்கவைத்துக்கொண்டதாக அரசியலமைப்பில் குறிப்பிடவில்லை. அரசியலமைப்பில் ஜம்மு காஷ்மீர் இறையாண்மை பற்றிய குறிப்பு தெளிவாக இல்லை.
ஜம்மு காஷ்மீரில் போர் சூழல் காரணமாக சட்டப்பிரிவு 370 இடைக்கால ஏற்பாடாக கொண்டு வரப்பட்டது. ஜம்மு காஷ்மீர் அரசியல் நிர்ணய சபை கலைக்கப்பட்டதை தொடர்ந்து, சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்து உத்தரவு பிறப்பிக்க குடியரசு தலைவருக்கு அதிகாரம் உள்ளது. ஜம்மு காஷ்மீர் அரசியல் நிர்ணய சபையின் பரிந்துரைக்கு குடியரசு கட்டுப்பட தேவையில்லை. ஜம்மு காஷ்மீர் அரசியல் நிர்ணய சபையே ஒரு தற்காலிக அமைப்புதான்" என்றார்.