’அரெஸ்ட் வேறு; காவல் வேறு!’ - கைது நடவடிக்கை குறித்து உச்சநீதிமன்றம் கருத்து!
சட்டம் அனுமதிக்கின்றது என்பதைப் பயன்படுத்தி, தனி மனித சுதந்திரத்தைத் தடுப்பதற்காக அரசு கைதைப் பயன்படுத்தக் கூடாது என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
சட்டம் அனுமதிக்கின்றது என்பதைப் பயன்படுத்தி, தனி மனித சுதந்திரத்தைத் தடுப்பதற்காக அரசு கைதைப் பயன்படுத்தக்கூடாது என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
”அரசியலமைப்பு தனி மனித சுதந்திரத்தைத் தனியுரிமையாக அளித்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவரைக் காவலில் எடுக்கும் நிர்பந்தம் ஏற்படும் அளவுக்குக் குற்றச் செயல் நிகழ்ந்தாலோ, சாட்சிகளைக் கலைக்கும் சூழல் இருந்தாலோ, குற்றம் சாட்டப்பட்டவர் தப்பித்துச் செல்லும் வாய்ப்பு இருந்தாலோ கைது செய்யும் உரிமை இருக்கிறது. சட்டம் அனுமதி தருகின்றது என்ற ஒரே காரணத்திற்காகக் கைது நடவடிக்கையை மேற்கொள்ளக் கூடாது" என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கௌல், ஹ்ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு கூறியுள்ளது.
கைது செய்வதற்கான அதிகாரத்தின் இருப்பைத் தக்க வைத்துக் கொள்வதற்கும், நியாயமாகக் கைது செய்வதற்கும் இடையில் இருக்கும் வேறுபாடு கருதப்பட வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
"தொடர்ச்சியாக கைது செய்யும்போது, கைது செய்யப்படும் நபரின் சமூக அந்தஸ்து பாதிப்படைகிறது. புலனாய்வு செய்யும் அதிகாரி குற்றம் சாட்டவர் தப்பித்துவிடுவார் என்றோ, உத்தரவுகளை மீறுகிறார் என்றோ எண்ணினால் கைது செய்யலாம். இல்லையேல் கைது செய்யும் அவசியம் அந்த அதிகாரிக்கு இல்லை” என்று உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
இந்த உத்தரவு தொழிலதிபர் சித்தார்த்துக்கு முன் ஜாமீன் வழங்கக் கோரி, மூத்த வழக்கறிஞர்கள் பிரமோத் குமார் தூபே, ரவி ஷர்மா, ராகுல் ஷ்யாம் பண்டாரி ஆகியோர் தொடுத்த மேல் முறையீட்டின் மீது அளிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில், கடந்த ஜூலை மாதம் அலஹாபாத் உயர்நீதிமன்றம் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தது.
2007-ஆம் ஆண்டு உத்தரப் பிரதேச மாநில அரசு பூங்கா, அருங்காட்சியம் கட்டுவதற்காக உருவாக்கிய திட்டம் ஒன்றில் சதியில் ஈடுபட்டு, பொதுப் பணத்தில் 14 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பீட்டை ஏற்படுத்திய குற்றத்தின் மீது இந்த வழக்கு நடைபெற்று வருகிறது.
உச்சநீதிமன்ற அமர்விடம் ஜாமீன் கோரிய வழக்கறிஞர் தூபே, தனது வழக்குதாரர் கடந்த 7 ஆண்டுகளாக இந்த விசாரணையில் ஒத்துழைப்பு வழங்கி வருவதாக கூறினார். மேலும், அவரைச் சிறையில் அடைக்க எந்த நிர்பந்தமும் இல்லை என்றும், அவர் தப்பிக்கவோ, சாட்சிகளைக் கலைக்க எந்த வாய்ப்பும் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய காவல்துறையினர் முயன்று வருகின்றனர்.
இதுகுறித்து வழக்கறிஞர் தூபே, ‘இந்தியக் குற்றவியல் சட்டத்தின் 170வது பிரிவைக் காவல்துறை தவறாகப் புரிந்துகொண்டுள்ளது. 170-வது பிரிவு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் போது கைது (Arrest) என்று குறிப்பிடாமல், ‘காவலில்’ (Custody) வைக்க வேண்டும் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது’ என்று வாதிட்டார்.
அவர் கூறியுள்ளதை ஏற்றுக்கொண்டுள்ள உச்சநீதிமன்றம், 170-வது சட்டப்பிரிவின் படி, கைது செய்வது அவசியம் இல்லை என்றும், குற்றம் சாட்டப்பட்டவர் விசாரணை செய்யும் அதிகாரியுடன் நீதிமன்றத்திற்கு வந்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும்போது உடனிருந்தால் போதும் எனக் கூறியுள்ளது. இந்த நடவடிக்கையை நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்கள் பின்பற்ற வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.