![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
கோவா விமான நிலைய ரன்வேயில் சுற்றிய தெருநாய்! திரும்பிச் சென்ற விமானம்!
கோவா விமான நிலையத்தில் ஓடுதளத்தில் தெருநாய் ஓடியதால் பெங்களூரில் இருந்து வந்த விமானம் தரையிறங்காமல் திரும்பிச் சென்றது.
![கோவா விமான நிலைய ரன்வேயில் சுற்றிய தெருநாய்! திரும்பிச் சென்ற விமானம்! Stray Dog Enters Goa Airport Runway, Forces Vistara Flight To Return to Bengaluru Without Landing கோவா விமான நிலைய ரன்வேயில் சுற்றிய தெருநாய்! திரும்பிச் சென்ற விமானம்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/14/9e5e65c55fe0fd8d7295e39f75453c8c1699953405339102_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
இந்தியாவின் மிகவும் முதன்மையான சுற்றுலா நகரங்களில் ஒன்றாக கோவா உள்ளது. கோவாவிற்கு இந்தியா மட்டுமின்றி வெளிநாட்டில் இருந்தும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர். கோவாவில் அமைந்துள்ளது டபோலிம் விமான நிலையம். சுற்றுலா பயணிகள் பலரும் கோவாவிற்கு விமானங்கள் மூலம் வருவதால் இந்த விமான நிலையம் பரபரப்பாகவே காணப்படும்.
ஓடுதளத்தில் தெருநாய்:
இந்த சூழலில், விஸ்தாரா நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று பெங்களூரில் உள்ள கெம்பகவுடான சர்வதேச விமான நிலையத்தில் இருந்து கோவா நோக்கி நேற்று புறப்பட்டுள்ளது. கோவாவில் தரையிறங்குவற்காக கோவா விமான நிலையத்திற்கு வந்தபோது, விமான நிலையத்தின் ஓடுதளத்தில் ( ரன்வே) தெரு நாய் ஒன்று திரிந்து கொண்டிருந்தது.
இதைக்கண்ட விமானி அதிர்ச்சியடைந்தார். மேலும், அவர் விமான கட்டுப்பாட்டு அறைக்கு இதுதொடர்பாக தகவல் அளித்தார். பின்னர், விமானத்தை கோவா விமான நிலையத்தில் இறக்குவது பாதுகாப்பு இல்லை என்பதால் அந்த விமானத்தை மீண்டும் பெங்களூருக்கே இயக்கினார். இந்த சம்பவம் பயணிகளுக்கும், விமானிகளுக்கும், அதிகாரிகளுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
திரும்பிச் சென்ற விமானம்
நேற்று மதியம் 12.55க்கு பெங்களூரில் இருந்து புறப்பட்ட விஸ்தாரா விமானம் அங்கு தரையிற்காமலே மீண்டும் பெங்களூருக்கே மதியம் 3.05 மணிக்கு தரையிறங்கியது. பின்னர், பெங்களூரில் இருந்து மீண்டும் மாலை 4.55 மணிக்கு புறப்பட்டு கோவாவிற்கு மாலை 6.15 மணிக்கு சென்றடைந்தது. இந்த சம்பவம் தொடர்பாக விஸ்தாரா விமான நிறுவனம் அவர்களது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்திலும் பதிவிட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக கோவா விமான நிலைய இயக்குனர் எஸ்.வி.டி. தனம்ஜெயராவ், ஓடுதளத்தில் தெருநாய் இருப்பதை கண்டறிந்தவுடன் பணியாளர்கள் உடனடியாக விரைந்து சென்று நாயை அப்புறப்படுத்தினர் என்றும், தான் விமான நிலைய இயக்குனராக பதவியேற்ற இந்த ஒன்றரை ஆண்டுகளில் முதன்முறையாக இப்படி ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தரும் கோவா நகரத்தின் விமான நிலையத்தின் ஓடுதளத்தில் தெருநாய் சுற்றியதால், விமானமே தரையிறங்காமல் திரும்பிச் சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க: POCSO Case : நாடே போற்றும் தீர்ப்பு.. பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி கொலையான பெண் குழந்தை.. 109 நாள்களில் நீதிமன்றம் அதிரடி
மேலும் படிக்க: Rain Alert: தமிழ்நாட்டில் தயார் நிலையில் உள்ள 4,970 நிவாரண முகாம்கள் - வருவாய் அமைச்சர் கே.கே. எஸ்.எஸ். ஆர். ராமச்சந்திரன்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)