SSC Scam: மேற்கு வங்க அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி கைது: ரியாக்ட் செய்த மம்தா பானர்ஜி
ஊழலை தான் ஒருபோதும் ஆதரிப்பதில்லை என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
ஊழலை தான் ஒருபோதும் ஆதரிப்பதில்லை என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் ஆசிரியர் நியமனத்தில் நடந்த ஊழலில் தொடர்புடையதாக அம்மாநில அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் கைது செய்யப்பட்டவும் அவர் முதல்வர் மம்தா பானர்ஜிக்கு 4 முறை ஃபோன் செய்ததாக அமலாக்கத் துறை தெரிவித்தது. ஒரு நபரை விசாரணைக்காக அழைத்துச் செல்லும் முன்னர் நாங்கள் அந்த நபரை அவருடைய நண்பர், உறவினர், வழக்கறிஞர் அல்லது நம்பிக்கைக்குரியவர் என யாரேனும் ஒருவருடன் பேச அனுமதிப்போம். அந்த வகையில் பார்த்தா சாட்டர்ஜிக்கு அனுமதி வழங்கினோம். அவர் ஜூலை 23ஆம் தேதி அதிகாலை 2.31 மணி, 2.33, 3.37 அம்ற்றும் 9.35 என 4 முறை ஃபோன் செய்தார். ஆனால் மம்தா பானர்ஜி ஒருமுறைகூட ஃபோனை எடுக்கவில்லை என்று அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
இது ஊடகங்களில் வெளியான நிலையில் மம்தா பானர்ஜி, ஊழலையும், எந்தவிதமான தவறையும் நான் ஒருபோதும் ஆதரிப்பதில்லை என்று கூறியுள்ளார்.
கட்டுக்கட்டாக பணம்:
மேற்குவங்க அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜியின் உதவியாளர் ஒருவரின் வீட்டில் இருந்து 20 கோடி ரூபாயை அமலாக்கத்துறை இயக்குநரகம் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை (ஜூலை 22) பறிமுதல் செய்தது. மேற்கு வங்கத்தில் ஆசிரியர் பணி நியமன ஊழல் தொடர்பாக அர்பிதா முகர்ஜியின் வீட்டில் அமலாக்கத்துறை இயக்குநரகம் சோதனை நடத்தியது. பின்னர், "இந்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் ஊழலின் குற்றத்தின் மூலம் இந்த பணம் வந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது" என அமலாக்கத்துறை இயக்குநரகம் அறிக்கை வெளியிட்டது. வீட்டில் சோதனை நடத்திய போது சிக்கிய 2000 ரூபாய், 500 ரூபாய் கட்டுகளின் புகைப்படம் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும், அர்பிதா முகர்ஜிக்கு சொந்தமான இடத்திலிருந்து 20க்கும் மேற்பட்ட மொபைல் போன்கள் மீட்கப்பட்டன. அவை எதற்காக பயன்பட்டது என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. சட்டர்ஜியைத் தவிர, கல்வித்துறை இணை அமைச்சர் பரேஷ் சி அதிகாரி, எம்எல்ஏ மாணிக் பட்டாச்சார்யா உள்ளிட்டோர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.
மேற்குவங்க பள்ளி கல்வித்துறை ஆணையத்தின் மூலம் அரசு நடத்தும் மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் சட்டவிரோத நியமனங்கள் செய்யப்பட்டதாகக் கூறப்படும் போது, தற்போது தொழில் மற்றும் வணிகத் துறை அமைச்சராக இருக்கும் பார்த்தா சாட்டர்ஜி, கல்வி அமைச்சராக பதவி வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சோதனையை கடுமையாக விமர்சித்துள்ள ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், "மத்திய பாஜக அரசு தனது அரசியல் எதிரிகளை துன்புறுத்த மேற்கொண்ட தந்திரம்" என குறிப்பிட்டுள்ளது.
"திரிணாமுல் நடத்திய தியாகிகள் தின பேரணி நாடு முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், அடுத்த நாளே, அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தியது. திரிணாமுல் தலைவர்களை துன்புறுத்துவதற்கும் மிரட்டுவதற்கும் ஒரு முயற்சியே தவிர இது வேறில்லை" என்று மேற்கு வங்க போக்குவரத்து அமைச்சர் ஃபிர்ஹாத் ஹக்கீம் விமர்சித்துள்ளார்.
ஆனால், திரிணாமூல் காங்கிரஸ் தலைவரும் மேற்குவங்க முதல்வருமான மம்தா பானர்ஜி இவ்விவகாரத்தில் இருந்து ஒதுங்கியுள்ளார்.