National Games open: ஊழலை ஒழித்து விளையாட்டுத் துறையை தூய்மைப் பயன்படுத்தியுள்ளோம்: பிரதமர் மோடி
ஊழல், குடும்ப அரசியலை ஒழித்து விளையாட்டுத் துறையை பாஜக தூய்மைப் பயன்படுத்தியுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
ஊழல், குடும்ப அரசியலை ஒழித்து விளையாட்டுத் துறையை பாஜக தூய்மைப்படுத்தியுள்ளது. முன்னர் இந்த கெட்ட விஷயங்களால் நம் வீரர்கள் விளையாட்டில் முழு திறனையும் காட்ட முடியாமல் இருந்தது. இப்போது அவை களையப்பட்டுள்ளன என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். குஜராத் தலைநகர் அஹமதாபாத்தில் 36வது தேசிய விளையாட்டுப் போட்டிகளை துவக்கிவைத்த பிரதமர் மோடி இவ்வாறாக கூறினார்.
குஜராத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இந்த விளையாட்டுப் போட்டி பிரதமர் மோடியால் தொடங்கிவைக்கப்பட்டது.
National Games 2022 - "TORCH OF UNITY"🔦#NationalGames2022 | #36thNationalGames pic.twitter.com/nXUFApMrgu
— DD Sports - National Games 2022 🇮🇳 (@ddsportschannel) September 29, 2022
7 ஆயிரம் வீரர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சி:
குஜராத்தில் இன்று தொடங்கியுள்ள 36-வது தேசியவிளையாட்டுப் போட்டிகள் வரும் 12-ம் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் நாடு முழுவதும் இருந்து 7 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் கலந்துகொள்கின்றனர். போட்டிகள் குஜராத்தில் உள்ள அகமதாபாத், காந்தி நகர், சூரத், வதோதரா, ராஜ்கோட், பாவ்நகர் ஆகிய 6 நகரங்களில் நடைபெறுகிறது. இந்த தேசிய விளையாட்டுப் போட்டியில் 28 மாநிலங்கள், 8 யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த சுமார் 7 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் கலந்துகொள்கின்றனர். மொத்தம் 36 விளையாட்டுகளில் போட்டி நடைபெறவுள்ளது. இதில் தடகள போட்டிகள் மட்டும் செப்டம்பர் 30 முதல் அக்டோபர் 4 வரை காந்தி நகரில் நடத்தப்பட உள்ளது.
2023-ம் ஆண்டு ஹங்கேரிநாட்டில் உலக தடகள சாம்பியன்ஷிப் நடைபெறுகிறது. இந்தத் தொடரில் கலந்துகொள்ள தேசிய விளையாட்டு போட்டியின் உயர்மட்ட செயல்திறன், நேரடி தகுதியாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். இதனால் இன்று தொடங்கியுள்ள இந்த தேசிய விளையாட்டு போட்டி தடகள வீரர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
அதே வேளையில் இந்த தேசிய விளையாட்டில் ஸ்டீபிள் சேஸ் வீரர் அவினாஷ் சேபிள், நீளம் தாண்டுதல் வீரர்முரளி சங்கர், ஈட்டி எறிதல் வீராங்கனைஅன்னு ராணி, வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவி, ஓட்டப்பந்தய வீராங்கனைகள் ஹிமா தாஸ், டூட்டி சந்த், அம்லன் போர்கோஹேய்ன், ஜோதி யார்ராஜி உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் கலந்து கொள்கின்றனர். அதேவேளையில் ஒலிம்பிக் சாம்பியனான நீரஜ் சோப்ரா, காமன்வெல்த் டிரிப்பிள் ஜம்ப்பில் தங்கம் வென்ற எல்தோஸ் பால், பாட்மிண்டன் நட்சத்திரம் பி.வி.சிந்து ஆகியோர் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
விளையாட்டின் மூலம் ஒற்றுமை: விளையாட்டின் மூலம் ஒற்றுமையைக் கொண்டாடுவோம் என்ற மையப்பொருளில், ஏழு ஆண்டு இடைவெளிக்குப் பின்னர் நடைபெறுகிறது. கடைசியாக இந்த விளையாட்டுப் போட்டிகள் 2015-ம் ஆண்டு கேரளாவில் நடைபெற்றன என்பது குறிப்பிடத்தக்கது. 36வது தேசிய விளையாட்டுப் போட்டியின் சின்னமாக சிங்கம் தேர்வு செய்யப்பட்டு பிரபலப்படுத்தப்பட்டு வருகிறது. இந்தப் போட்டியின் தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடியுடன் குஜராத் முதல்வர் பூபேந்திர பாட்டீலும் கலந்து கொண்டார். விரைவில் சட்டமன்றத் தேர்தலை சந்திக்கவுள்ள குஜராத்தில் இந்தப் போட்டியின் மூலம் பாஜக தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முயற்சிக்கிறது.