Southwest Monsoon: இந்தியாவில் ஓய்ந்தது வெப்ப அலை.. இன்னும் இரண்டே நாட்களில் தென்மேற்கு பருவமழை - வானிலை மையம்
இந்தியா முழுவதும் வெப்ப அலை ஓய்ந்தது என இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலை கண்டு மகிழ்ச்சி நிம்மதியடைந்துள்ளனர்.
இந்தியா முழுவதும் வெப்ப அலை ஓய்ந்தது என இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலை கண்டு மகிழ்ச்சி நிம்மதியடைந்துள்ளனர்.
தென்மேற்கு பருவமழை
இந்தியாவில் ஆண்டுதோறும் ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை தென்மேற்கு பருவமழை பெய்வது வழக்கம். அதன்படி ஜூன் மாதத்தின் முதல் வாரத்தில் கேரளாவில் தொடங்கும் பருவமழையானது படிப்படியாக கர்நாடகா, மும்பை, கோவா, கொல்கத்தா ஆகிய நகரங்களில் மழை பெய்யத் தொடங்கும். ஆனால் கடந்த சில ஆண்டுகளாகவே பருவநிலை மாற்றம் காரணமாக மழை பெய்வது தாமதம், குறைந்த அளவு மழைப்பொழிவு போன்ற நிகழ்வுகள் ஏற்பட்டு வருகிறது.
நடப்பாண்டும் கடுமையாக இந்தியாவின் பல மாநிலங்களிலும் வெயில் வாட்டி வதைத்தது. தமிழ்நாட்டிலும் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் நிலவி வருகிறது. இதனால் வழக்கத்தை விட வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. பொதுமக்கள் பகல் நேரங்களில் வீட்டை விட்டு அவசியமின்றி வெளியே வர வேண்டாம். நீர்ச்சத்து மிக்க ஆகாரங்களை எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசும் வேண்டுகோள் விடுத்தது.
வெப்ப அலை ஓய்ந்தது
இப்படியான நிலையில் இந்தியா முழுவதும் வெப்ப அலை ஓய்ந்தது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியாகியுள்ள தகவலின்படி, இன்னும் 2 நாட்களில் தென்கிழக்கு வங்காள விரிகுடா, நிக்கோபார் தீவுகள் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் தென்மேற்கு பருவமழை பெய்யத் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான சூழல் நிலவி வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக இன்று கேரளாவில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக கூறிய வானிலை மையம், ராஜஸ்தான், பஞ்சாப், டெல்லி, உத்தரப்பிரதேசம், அரியானா, சதீஸ்கரில் ஆலங்கடி மழை பெய்யலாம் எனவும் கணித்துள்ளது. மேலும் 6 மாநிலங்களில் மலைப்பகுதியை ஒட்டிய இடங்களில் கனமழை பெய்யவும் வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கேரளாவில் பருவமழை ஜூன் 4 ஆம் தேதி முதல் தொடங்கும் என்று வானிலை மையம் நேற்றைய தினம் தெரிவித்திருந்தது.
இது வழக்கமாக (ஜூன் 1) தொடங்குவதை விட தாமதமாகும். அதேசமயம் இந்தாண்டு கேரளாவில் கனமழை வெளுத்து வாங்கும் என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். எது எப்படியோ நாட்டிற்கு அதிக மழை பொழிவை கொடுக்கும் தென்மேற்கு பருவமழை இந்தாண்டு நல்ல பலனை கொடுக்க வேண்டும் என்பது அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது.