”ஒருவர் தன் தரப்பு நியாயத்தை சொல்லவேண்டிய அவசியமில்லை, காலம் சொல்லும்” - சோனு சூட்
உங்கள் நியாயத்தை ஒவ்வொருவருக்கும் சொல்லவேண்டிய அவசியம் இல்லை, காலம் பதில்சொல்லும் என ஐடி ரெய்டில் சிக்கிய பாலிவுட் நடிகர் சோனு சூட் தெரிவித்துள்ளார்.
உங்கள் நியாயத்தை ஒவ்வொருவருக்கும் சொல்லவேண்டிய அவசியம் இல்லை, காலம் பதில் சொல்லும் என ஐடி ரெய்டில் சிக்கிய பாலிவுட் நடிகர் சோனு சூட் தெரிவித்துள்ளார்.
பாலிவுட் பிரபல நடிகர் சோனுசோட் வீட்டில் சில தினங்களுக்கு முன் வருமான வரித்துறையினர் விடிய விடிய ரெய்டு நடத்தினர். ஊரார் அறிந்த சோனு சூடுக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை ரெய்டு நடந்தது. சோனு சூடின் உறவினர்கள் வீடுகளிலும் ரெய்டு நடந்தது. இந்நிலையில் பாலிவுட் நடிகர் சோனு சூட் ரூ.20 கோடி வரி ஏய்ப்பு செய்தது வருமான வரித்துறையினரின் சோதனை மூலம் தெரியவந்தது. இதுகுறித்து தெரிவித்துள்ள வருமான வரித்துறை, மும்பை, லக்னோ, கான்பூர், ஜெய்ப்பூர், டெல்லி, குருகிராமில் உள்ள 28 வளாகங்களில் இந்த ஐடி சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் வரி ஏய்ப்பு தொடர்பான பல சான்றுகள் கிடைத்துள்ளன என்று குறிப்பிட்டனர்.
இந்நிலையில் சோனு சூட், தனது சமூகவலைதள பக்கம் வாயிலாக விளக்கமளித்துள்ளார்.
அதில் அவர், நாம் எல்லாவற்றிற்கும் விளக்கம் கொடுக்கத் தேவையில்லை. ஏனெனில் காலம் பதில் சொல்லும். இந்திய மக்களுக்கு சேவை செய்ய வேண்டுமென்று நான் எனது உள்ளத்தையும் முழு பலத்தையும் செலுத்தி வருகிறேன். எனது தொண்டு நிறுவனத்தின் ஒவ்வொரு ரூபாயும் ஓர் இன்னுயிரைக் காக்கும் பணிக்காக காத்திருக்கிறது. தேவையுள்ள ஒருவரைச் சென்றடையக் காத்திருக்கிறது. பல நேரங்களில் நான் விளம்பரங்கள் மூலம் ஆதரித்த பல முன்னணி பிராண்டுகள் உதவிக்கரம் நீட்டுமாறு வேண்டியுள்ளேன். அத்தனை உதவிகளும் மனிதாபிமான அடிப்படையில் தேவையுள்ளவர்களை சென்றடைகிறது. கடந்த சில நாட்களாக சில விருந்தினர்களைக் கவனிக்க வேண்டியிருந்தது. அதனால் 4 நாட்களாக எனது சேவையைத் தொடர முடியவில்லை.
இதோ நான் திரும்பிவிட்டான். உங்கள் சேவைக்காக திரும்பிவிட்டேன். எனது பயணம் தொடரும் எனத் தெரிவித்துள்ளார். சோனு சூட் தாராளமாக சமூக நல உதவிகளைச் செய்ய அவர் பாஜகவில் இணையப் போவதாகத் தகவல்கள் வெளியாகின. ஆனால், அண்மையில் டெல்லி அரசின் பள்ளி மாணவர்களுக்கான வழிகாட்டு திட்டத்திற்கு விளம்பர தூதராக சோனு சூட் நியமிக்கப்பட்டார். அவருக்கு இந்தப் பொறுப்பைக் கொடுத்த ஆம் ஆத்மி அரசு அவரை பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் களமிறக்கலாம் எனக் கூறப்படுகிறது. இந்த அரசியல் பின்னணியின் காரணமாக அவர் வீட்டில் ரெய்டு நடந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. பரவலாகவே, பாஜக தனக்கு வேண்டாதவர்கள் மீது சிபிஐ, வருமானவரித் துறை, அமலாக்கப் பிரிவை ஏவி ரெய்டு நடத்துவதாக ஒரு குற்றச்சாட்டும் நிலவுகிறது.