`மதக் கலவரத்தைத் தூண்டவில்லை!’ - ஜே.என்.யூ மாணவர் ஷர்ஜீல் இமாம்!
தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜே.என்.யூ மாணவர் ஷர்ஜீல் இமாம் டெல்லி நீதிமன்றத்தில் தான் சிஏஏ எதிர்ப்புப் போராட்டத்தில் பேசியது மதக் கலவரத்தைத் தூண்டும் விதமாக இல்லை என்று தெரிவித்துள்ளார்.
குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்புப் போராட்டத்தில் மக்களின் உணர்வுகளைத் தூண்டும் விதமாகப் பேசியதால் கைது செய்யப்பட்ட ஜே.என்.யூ மாணவர் ஷர்ஜீல் இமாம் கடந்த டிசம்பர் 1 அன்று, டெல்லி நீதிமன்றத்தில் தான் பேசிய உரையில் மதக் கலவரத்தைத் தூண்டும் விதமாக எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
டெல்லி உயர் நீதிமன்ற அமர்வு நீதிபதி அமிதாப் ராவத் ஷர்ஜீல் இமாம் மீதான வழக்கை விசாரணை செய்தார். கடந்த 2019ஆம் ஆண்டு, ஷர்ஜீல் இமாம் அசாம் மாநிலத்தையும், வடகிழக்குப் பகுதிகளையும் இந்தியாவில் இருந்து துண்டித்து விடுமாறு மிரட்டியதாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
ஷர்ஜீல் இமாம் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் என்று அழைக்கப்படும் ஊபா சட்டம், தேசத் துரோகம் ஆகிய பிரிவுகளின் கீழ் கிரிமினல் வழக்கு போடப்பட்டுள்ளது. அவர் இந்த இரு வழக்குகளில் இருந்தும் தனக்கு ஜாமீன் வழங்குமாறு கோரியுள்ளார்.
2019-ஆம் ஆண்டு, டெல்லி ஜாமியா பல்கலைக்கழகத்தில் நிகழ்ந்த வன்முறைச் சம்பவம் தொடர்பாகத் தன் மீது பதிவு செய்யப்பட்டிருக்கும் தேசத் துரோக வழக்கில் ஜாமீன் கோரியும் ஷர்ஜீல் இமாம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தொடுத்துள்ளார்.
நீதிமன்ற விசாரணையின் போது, ஷர்ஜீல் இமாமின் வழக்கறிஞர் தன்வீர் அகமது மீர், `ஷர்ஜீல் இமாம் பேசியதாகக் குறிப்பிடப்பட்டிருக்கும் அந்தப் பேச்சில் மத மோதலைத் தூண்டும் விதமாக எதுவும் பேசப்படவில்லை. அந்தப் பேச்சு நிகழ்ந்த சூழலை நாம் கணக்கில் கொள்ளாமல் இருக்க முடியாது. குடியுரிமைத் திருத்தச் சட்டம் குறித்து ஒரு சமூகம் எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்று ஷர்ஜீல் இமாம் கூறுவதைப் பெரும்பான்மைச் சமூகத்தை எதிர்த்துப் பேசியதாகப் பார்க்க முடியாது’ என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து அவர், `தன் சமூகத்தை நேரடியாகப் பாதிக்கும் அரசுத் திட்டம் ஒன்றைப் பற்றி ஒருவர் மற்றொரு சமூகம் தன் சமூகத்துடன் இணைந்து நிற்க வேண்டும் என்றும், நிற்காவிட்டால் தன் சமூகம் மற்றொரு சமூகத்தை ஆதரிக்காது என்று கூறுவது இந்த இரு சமூகங்களை மோதலுக்குத் தூண்டுவதாக நாம் எடுத்துக் கொள்ள முடியாது’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விசாரணைக்குப் பிறகு, நீதிபதி அமிதாப் ராவத், வரும் டிசம்பர் 7 அன்று ஷர்ஜீல் இமாமின் ஜாமீன் குறித்து உத்தரவிடுவதாகவும், மத்திய அரசின் சிறப்பு வழக்கறிஞர் அமித் பிரசாத் இதுகுறித்து அரசுத் தரப்பு விவரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். கடந்த முறை, நீதிமன்ற விசாரணையின் போது, ஷர்ஜீல் இமாம் பேசியதால் மத மோதல்கள் உருவானது என அரசுத் தரப்பில் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.