குரங்கு அம்மை தடுப்பூசி எப்போது? சீரம் நிறுவன தலைமை செயல் அதிகாரி தகவல்
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவை ஆதார் பூனவல்லா சந்தித்த நிலையில், குரங்கம்மை தடுப்பூசி குறித்த இந்த அறிவிப்பு வந்துள்ளது.
இந்தியாவில் குரங்கு அம்மை நோய் மெதுவாக அதிகரித்து வரும் நிலையில், குரங்கு அம்மை நோய்க்கு எதிரான தடுப்பூசியைத் தயாரிப்பதற்கு தாங்கள் அனைத்து பணிகளையும் மேற்கொண்டு வருவதாக சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (எஸ்ஐஐ) தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லா தெரிவித்துள்ளார்.
குரங்கு அம்மை தடுப்பூசி தயாரிப்பு
முன்னதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவை ஆதார் பூனவல்லா சந்தித்த நிலையில், குரங்கம்மை தடுப்பூசி குறித்த இந்தஅறிவிப்பு வந்துள்ளது.
After meeting with Union Health Min Mansukh Mandaviya, SII CEO Adar Poonawalla said, "my meeting went well like always. All preparations for the vaccine are being done; I briefed the minister on this. We are researching on the vaccine for Monkeypox & if there's a need for it." pic.twitter.com/r8L9VxuKK4
— ANI (@ANI) August 2, 2022
முன்னதாக மத்திய அமைச்சருடனான சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பூனவல்லா, ”மாண்டவியாவுடனான எனது சந்திப்பு எப்போதும் போல சிறப்பாக நடந்தது. தடுப்பூசிக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. இது குறித்து அமைச்சரிடம் விளக்கினேன். குரங்கு அம்மைக்கான தடுப்பூசி மற்றும் அதன் தேவை குறித்து நாங்கள் ஆராய்ச்சி செய்து வருகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் அறிகுறி
முன்னதாக கன்னியாகுமரியைச் சேர்ந்த 4 பேருக்கும், புதுக்கோட்டையில் இருந்து வந்த ஒருவருக்கும் குரங்கு அம்மை நோய் அறிகுறிகள் தென்பட்டதை அடுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்தியாவில் இதுவரை மொத்தம் எட்டு பேர் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் ஐந்து பேர் கேரளாவையும், மூன்று பேர் டெல்லியையும் சேர்ந்தவர்கள் ஆவர். இவர்களில் கேரளாவைச் சேர்ந்த ஒருவர் இதுவரை உயிரிழந்துள்ளார்.
செளமியா சுவாமிநாதன் எச்சரிக்கை
உலகம் முழுவதும் 75 நாடுகளில் 16,000க்கும் மேற்பட்டோர் குரங்கம்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை கட்டுப்படுத்தும் விதமாக உலகம் முழுவதும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், இதுகுறித்து பேசிய உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி செளமியா சுவாமிநாதன், குரங்கம்மை பரவலை எச்சரிக்கை மணியாக கருத வேண்டும் என தெரிவித்துள்ளார்.
முன்னதாக தனியார் தொலைக்காட்சியான என்டிடிவிக்கு அவர் அளித்த பிரத்யேகப் பேட்டியில், "பெரியம்மை தடுப்பூசி திட்டங்கள் 1979-1980 முதல் நிறுத்தப்பட்டன. பெரியம்மை தடுப்பூசிகள் குரங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்தும் ஆற்றலைக் கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது. இந்த ஆண்டு, ஐரோப்பிய மருத்துவ சங்கம் பெரியம்மைக்காக உருவாக்கப்பட்ட ’டெகோவிரிமாட்’ எனப்படும் வைரஸ் தடுப்பு மருந்துக்கு உரிமம் வழங்கியுள்ளது.
சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (SII) உள்ளிட்ட இந்திய மருந்து நிறுவனங்கள், தற்போதுள்ள பெரியம்மை தடுப்பூசி அவர்களுக்கு பரவலாகக் கிடைத்தால், அதை சந்தைப்படுத்தி விநியோகம் செய்வதில் பங்கு வகிக்க முடியும்.
தொற்றுநோய்க்கான தயார்நிலையைப் பற்றி தொடர்ந்து பேசி வருகிறோம். விஷயம் என்னவென்றால், உற்பத்தியை எவ்வளவு விரைவாக பெருக்க முடியும் என்பதுதான். இந்தியாவின் திறன் காரணமாக அவர்கள் மிக முக்கிய பங்கை வகிப்பார்கள்” எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.