Sedition Cases in India : பாஜக ஆட்சியில் பாய்ந்த தேசத் துரோக வழக்குகள் எத்தனை தெரியுமா...?
நாட்டில் கடந்த 2014ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை 326 தேசத்துரோக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, மொத்தம் 6 பேர் மட்டுமே குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
![Sedition Cases in India : பாஜக ஆட்சியில் பாய்ந்த தேசத் துரோக வழக்குகள் எத்தனை தெரியுமா...? Sedition Cases Do You Want know how many cases filed 124A act in 2014 to 2019 in India Sedition Cases in India : பாஜக ஆட்சியில் பாய்ந்த தேசத் துரோக வழக்குகள் எத்தனை தெரியுமா...?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/07/19/3a757590907d13d1b1ab07a640880854_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தேசத்துரோக சட்டப்பிரிவான 124 ஏ-வை ரத்து செய்ய வேணடும் என்று தொடரப்பட்ட வழக்கு கடந்த வாரம் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆங்கிலேயர் காலத்து தேசத்துரோக சட்டம் தற்போது பயன்படுத்தப்பட வேண்டுமா? மகாத்மா காந்தி, கோகலே போன்ற தலைவர்களின் குரலை ஒடுக்குவதற்காக இந்த சட்டம் பயன்படுத்தப்பட்டது. விசாரணை அமைப்புகள் தேசத்துரோக சட்டங்களை தவறாக பயன்படுத்துவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
கடந்த 2014ம் ஆண்டில் இருந்து 2019ம் ஆண்டு வரை தேசத்துரோக சட்டத்தின் கீழ் இந்தியாவில் 326 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாக புள்ளிவிவரங்களில் தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த வழக்குகளில் அதிகபட்சமாக வடகிழக்கு மாநிலமான அசாமில் 54 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த 54 வழக்குகளில் 26 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவற்றில் 25 வழக்குகளில் விசாரணை நிறைவு பெற்றுள்ளது. ஆனால், கடந்த 6 ஆண்டுகளில் அசாமில் தேசத்தரோக சட்டத்தின் கீழ் ஒருவர் கூட குற்றவாளியாக அறிவிக்கப்படவில்லை.
அசாம் மாநிலத்திற்கு அடுத்தபடியாக ஜார்க்கண்ட் மாநிலத்தில் அதிகபட்சமாக 40 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 16 வழக்குகளில் விசாரணை நிறைவு பெற்றுள்ளது. ஒருவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
மகாராஷ்ட்ரா, பஞ்சாப், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் தலா ஒரே ஒரு தேசத்துரோக வழக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது. பீகார், ஜம்மு – காஷ்மீர், உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம், ஹரியானா ஆகிய மாநிலங்களில் குறைவான எண்ணிக்கையில் தேசத்துரோக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குகளில் சில வழக்குகளில் மட்டும் விசாரணை முடிந்துள்ளது.
மேகாலயா, மிசோரம், திரிபுரா, சிக்கிம், அந்தமான் நிகோபர், லட்சத்தீவுகள், புதுச்சேரி, சண்டீகர், டையூ டாமன் ஆகிய மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் ஒரு தேசத்துரோக வழக்குகள் கூட இதுவரை பதிவாகவில்லை. கடந்த 2014 முதல் 2019ம் ஆண்டு வரையில் நாடு முழுவதும் பதிவு செய்யப்பட்ட மொத்தம் 326 தேசத்துரோக வழக்குகளில் 141 வழக்குளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு 6 பேர் மட்டுமே குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
பா.ஜ.க. ஆட்சி அமைந்த 2014ம் ஆண்டு 47 வழக்குகளும், 2015ம் ஆண்டு, 30 வழக்குகளும், 2016ம் ஆண்டு 35 வழக்குகளும், 2017ம் ஆண்டு 51 வழக்குகளும், 2018ம் ஆண்டு 70 வழக்குகளும் நாடு முழுவதும் தேசத்துரோக சட்டப்பிரிவான 124 ஏ- பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்டது.
இதுமட்டுமின்றி, மற்றொரு பாதுகாப்பு சட்டமான உபா-வின் கீழ் 2018ம் ஆண்டு மட்டும் 1,182 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. அவற்றில் 92 சதவீத வழக்குகள் உத்தரபிரதேசம், ஜம்மு-காஷ்மீர், அசாம், ஜார்கண்ட், மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)