மும்பையில் சிக்கிய இரண்டாவது சிறுத்தை.. பீதியில் மக்கள்
மும்பை அரே காலனி பகுதியில் வனத்துறையினர் ஒரு ஆண் சிறுத்தையை பிடித்துள்ளனர். கடந்த 5 நாட்களில் பிடிபடும் இரண்டாவது சிறுத்தை இது.
மும்பை அரே காலனி பகுதியில் வனத்துறையினர் ஒரு ஆண் சிறுத்தையை பிடித்துள்ளனர். கடந்த 5 நாட்களில் பிடிபடும் இரண்டாவது சிறுத்தை இது. அரே காலனியில் யூனிட் 15ல் இன்று காலை அந்த சிறுத்தை சிக்கியது. அரே காலனி என்பது மும்பை கோரேகான் பகுதியின் மேற்கு புறநகரில் இருக்கிறது. சஞ்சய் காந்தி தேசியப் பூங்காவின் அருகில் அரே காலனி இருக்கிறது. பிடிபட்ட சிறுத்தை சஞ்சய் காந்தி தேசிய பூங்காவில் உள்ள மீட்புப் பகுதிக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
முன்னதாக கடந்த திங்கள் கிழமை காலை அரே காலனியில் யூனிட் 15 பகுதியில் ஒன்றரை வயது பெண் குழந்தையை ஒரு சிறுத்தை கொன்றது. புதன் கிழமை யூனிட் 17ல் ஒரு சிறுத்தை சிக்கியது. இந்த சிறுத்தை தான் அந்த ஒன்றரை வயது குழந்தையையும் அந்த சிறுத்தை தான் கொன்றிருக்க வேண்டும் என்று சந்தேகப்படுகிறோம் என்று வனத் துறை அதிகாரிகள் கூறுகின்றனர். அந்த நிகழ்வுக்குப் பின்னர் நாங்கள் மேலும் 3 கூண்டுகளை அமைத்தோம். அதில் எங்களுக்கு மேலும் 3 சிறுத்தைகள் சிக்கின. அப்பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தைக் கண்காணிக்க 30 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அரே காலனி பகுதியில் மனித மிருக மோதல் பிரச்சினையை சமாளிக்க 30 விலங்குகள் நல ஆர்வலர்கள், தன்னார்வ குழுக்களைச் சேர்ந்தவர்கள், வனத்துறை அதிகாரிகள் ஆகியோர் இணைந்து செயல்படுகின்றனர். இருப்பினும் அடுத்தடுத்து சிறுத்தை சிக்குவது அரே காலனி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
தீர்க்கப்பட வேண்டிய மனித விலங்கு மோதல் பிரச்சினை
மனிதனுக்கும் வனவிலங்குகளுக்கும் மோதல் ஏற்பட முக்கிய காரணம் விலங்குகள் வாழிடத்தில் ஏற்படும் மாற்றங்கள். மனித - வனவிலங்கு மோதல்கள், அதனால் ஏற்படும் உயிரிழப்புகள் பெரும்பாலும் வன விலங்கு வசிப்பிடத்தில் நிகழும் ஆக்கிரமிப்பு, வாழ்விட சீரழிவு போன்றவற்றால் ஏற்படுகிறது.
இது குறித்து வனவிலங்கு ஆர்வலர்கள், பல நூற்றாண்டுகளாக சிறுத்தைகள் மனிதர்கள் வசிக்கும் பகுதிகளில் தான் வாழ்ந்து வந்துள்ளது. இதனால் மோதல் என்பது தவிர்க்க முடியாத ஒன்றுதான். அதை கையாள்வதற்கு தான் நாம் மக்களை பயிற்றுவிக்க வேண்டும். பெரும்பாலும் வனப்பகுதியை ஒட்டியுள்ள மனித குடியிருப்புகளில் சிறுத்தைகள் சிக்கிக் கொள்வது நிகழ்கிறது. சிறுத்தைகள் மனிதர்களை தாக்காது, மனிதர்களுடனான தொடர்பை தவிர்க்கத்தான் பார்க்கும்.
எனவே சிறுத்தைகள் தானாக வனப்பகுதிக்குள் திரும்பிச் சென்றுவிடும். சிறுத்தைகள் தென்படும் இடங்களில் மனிதர்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும். கூண்டு வைத்து பிடிப்பதை கடைசி வாய்ப்பாகத் தான் பயன்படுத்த வேண்டும். அவ்வாறு கூண்டு வைத்து பிடித்தாலும் சிறுத்தையை பிடித்த இடத்திற்கு அருகே உள்ள வனப்பகுதியில் விட வேண்டும். சிறுத்தையை வேறு இடங்களில் விட்டால் அவை தங்களுடைய சொந்த எல்லைகளுக்குத் தான் திரும்பி வரும், அது மேலும் மனிதர்களுடனான மோதல்களை அதிகரிக்கும் என்பதால் அது தவிர்க்கப்பட வேண்டும் என்று கூறுகின்றனர்.