Ayodhya Ram Mandir: ’ நான் செய்த சிலை இது இல்லை’ - குழந்தை ராமர் சிலையை வடிவமைத்த அருண் யோகிராஜ்..
பிரான் பிரதிஷ்டைக்கு பின் குழந்தை ராமர் சிலை முற்றிலுமாக மாறிவிட்டது என்றும் நான் செய்த சிலைப்போல் இல்லை என சிலையை வடிவமைத்த அருண் யோகிராஜ் தெரிவித்துள்ளார்.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டு ஜனவரி 22ஆம் தேதி திறக்கப்பட்டுள்ளது. ரூ.1,800 கோடி செலவில் மிக பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள இந்த கோயில் நிலநடுக்கம் மற்றும் வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்களை தாங்கும் வகையில் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது.
இப்படி பல்வேறு அம்சங்கள் கொண்ட அயோத்தி ராமர் கோயிலில், குழந்தை ராமர் சிலையை வடிவமைத்தவர் யார் என்ற ஆர்வம் மக்களிடையே பற்றிக்கொண்டது. அயோத்தியில் நிறுவப்படும் சிலையை செதுக்க மூன்று சிற்பிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த சிற்பிகளில் ஒருவர்தான் கர்நாடகாவை சேர்ந்த அருண் யோகிராஜ். இவர் வடிவமைத்த குழந்தை ராமர் சிலையை தான் தற்போது அயோத்தி கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. தற்போது குழந்தை ராமர் சிலையை வடிவமைத்த அருண் யோகிராஜ், தான் செய்த சிலையில் இருந்து பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலை முற்றிலும் மாறுப்பட்டு உள்ளது என கூறியுள்ளார். மேலும், கடவுள் ராமர் என்ன சொன்னரோ அதை தான் நான் வடிவமைத்தேன் எனவும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், “ கடந்த 7 மாதங்கள் மிகவும் சவாலானதாக இருந்தது. இந்த சிலையை செய்வதில் நிறைய நுட்பங்கள் இருந்தது. 5 வயது குழந்தையின் வெகுளித்தனம் அந்த முகத்தில் இருக்க வேண்டும். சிலையில் முகபாவனைகள் கொண்டு வருவது என்பது சாதாரண விஷயம் இல்லை. பல முறை குழந்தை ராமர் சிலையை பற்றி என் நண்பர்களிடம் கேட்டுள்ளேன். புன்சிரிப்பு, தெய்வக்கடாக்ஷம், 5 வயது குழந்தையின் முகம், ராஜா போன்ற தோற்றம் ஆகியவை அனைத்தும் பிரதிபளிக்கும் வகையில் இந்த சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. சிலையை நான் வடிவமைத்தவுடன் ஒரு தோற்றம் இருந்தது, ஆனால் பிரான பிரதிஷ்டை செய்தவுடன் குழந்தை ராமர் முற்றிலுமாக உருமாறியுள்ளார். இந்த சிலை நான் செய்தது அல்ல என தோன்றும் அளவு இருந்தது” என தெரிவித்துள்ளார்.
யார் இந்த அருண் யோகிராஜ்...?
கர்நாடக மாநிலம் மைசூர் நகரில் வசிப்பவர் அருண் யோகிராஜ். அவர் பிரபலமான சிற்பிகளின் குடும்பத்திலிருந்து வந்தவர். இவர் 5 ஆம் தலைமுறை சிற்பி. நவீன காலத்தில் இந்திய நாட்டின் புகழ்பெற்ற சிற்பிகளில் ஒருவராக இவர் பார்க்கப்படுகிறார். உண்மையில், இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் அருணின் சிலைகளுக்கு கிராக்கி என்றே சொல்லலாம். இதற்கு முன்பு கூட சிற்பி அருணின் திறமையை பிரதமர் நரேந்திர மோடியே பாராட்டியுள்ளார். இந்தியா கேட்டில் சமீபத்தில் நிறுவப்பட்ட 30 அடி உயர சுபாஷ் சந்திரபோஸின் சிலை இவரால் செதுக்கப்பட்டது.
அருண் யோகிராஜ்தான் கேதார்நாத்தில் 12 அடி உயர ஆதி சங்கராச்சாரியார் சிலையையும் செய்துள்ளார். மைசூர் மாவட்டத்தில் உள்ள சுஞ்சன்கட்டேயில் 21 அடி உயர அனுமன் சிலை, 15 அடி உயர அரசியல் சாசனத்தை உருவாக்கிய டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் சிலை, மைசூரில் சுவாமி ராமகிருஷ்ண பரமஹம்சரின் வெள்ளை அமிர்தசிலை சிலை, 6 அடி உயர நந்தி சிலை, 6 அடி உயரத்தில் பனசங்கரி தேவி சிலை, 14.5 அடி உயரம் கொண்ட ஜெயச்சாமராஜேந்திர உடையாரின் வெள்ளை நிற அமிர்தசிலை சிலை என பல சிலைகள் அருண் யோகிராஜால் செதுக்கப்பட்டவை ஆகும்.