Republic Day 2022 | குடியரசு தின விழா 2022: குடியரசு தின விழா அணிவகுப்பு… சுவாரஸ்யமான தகவல்கள்!
இந்த ஊர்வலத்திற்கான தயாரிப்புகள் ஜூலை மாதம் துவங்கியிருக்கும். பங்கேற்பவர்களுக்கும் அப்போதே தெரிவிக்கப்படும்.
இந்தியர்களின் தொடர் போராட்டங்களின் விளைவாக இந்தியாவை விட்டு வெளியேற ஆங்கிலேயர்கள் முடிவு செய்தனர். 1947-ம் ஆண்டு ஆகஸ்டு 15-ந் தேதி இந்தியா சுதந்திரம் அடைந்தது. அப்போது கிடைத்த சுதந்திரம் முழுமையானது அல்ல. ஏனெனில் சுதந்திரம் பெற்ற போது, பிரிட்டிஷ் அரசு இந்தியாவுக்கு டொமினியன் அந்தஸ்து தான் வழங்கியது. அதன்படி ஆங்கிலேயர் சார்பில் நியமிக்கப்பட்ட கவர்னர் ஜெனரல் தான் நாட்டின் தலைவராக இருந்தார். இதன் பின் இந்திய அரசியலமைப்பு 1949-ம் ஆண்டு நவம்பர் மாதம் 26-ந் தேதி இந்திய அரசியல் நிர்ணய சபையால் ஏற்றுக் கொள்ளப்பட்டு 1950-ம் ஆண்டு ஜனவரி 26-ந் தேதி நடைமுறைக்கு வந்தது. அதுதான் குடியரசு தினம். அது வருடா வருடம் நாடு முழுவதும் விமர்சையாக கொண்டாடப்படும். அன்றைய தினம் நாடு முழுவதும் நடக்கும் குடியரசு தின விழா கொண்டாட்டங்களில், டெல்லியில் நடத்தப்படும் கண்கவர் அணிவகுப்புகள் மிக முக்கியமானது.
அதிலும் பல்வேறு மாநில அரசுகள் தங்களது கலாசாரம் மற்றும் பண்பாடு உள்ளிட்டவற்றை நாட்டிற்கு பறைசாற்றும் விதமாக வரும் கண்கவர் வாகனங்கள்தான் இந்த கொண்டாட்டங்களில் முக்கிய இடம் பிடிக்கும். இந்தக் கொண்டாட்டங்களின் ஹைலைட்டே மாநில அரசுகளின் சார்பில் இந்த கண்கவர் அணிவகுப்புகளில் இடம்பெறும் அலங்கார ஊர்திகள்தான்.அதே போல இந்த வருடமும் 73வது குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ளது. இந்த குடியரசு தினம் குறித்த ஸ்வாரஸ்யமான தகவல்கள் பற்றி பார்க்கலாம்.
- ராஜ்பாத்தில் குடியரசுதின அணிவகுப்பு வருடா வருடம் நடைபெறும் என்பது நமக்கு தெரியும். ஆனால் 1950 முதல் 54 வரை எங்கு நடந்தது என்று தெரியுமா? இர்வின் ஸ்டேடியத்தில் முதலிலும், கிங்ஸ்வே, செங்கோட்டை, ராம்லீலா மைதானம் ஆகியவற்றில் அடுத்தடுத்த வருட ஊர்வலங்கள் நடைபெற்றன. அதன்பிறகுதான் ராஜ்பாத்தை நிரந்தரமாக மாற்றினர். அந்த நேரத்தில் ராஜ்பாத்தை கிங்ஸ்வே என்று அழைத்தனர்.
- இந்த அணிவகுப்புக்கு எந்த நாட்டை சேர்ந்த பிரதமர், ஜனாதிபதிகளையும் சிறப்பு விருந்தினராக அழைக்கலாம். முதன் முதலில் 1950ம் ஆண்டு இந்தோனேசிய அதிபர் டாக்டர் சுகார்னோ கலந்துகொண்டார். ராஜ்பாத்தில் முதலில் கலந்துகொண்டவர் பாகிஸ்தான் கவர்னர் மாலிக் குலாம் மொஹமது.
- ஜனாதிபதி விழா நடைபெறும் இடத்திற்கு வந்த பிறகு, தேசிய கீதம் ஒலிக்கும், பாதுகாப்பு பணியில் உள்ளவர்கள் தேசிய கொடியை வணங்குவார்கள். அப்போது 21 பீரங்கிகள் முழங்கும். அது உண்மையில் 21 பீரங்கிகள் அல்ல, 25 பாண்டர்ஸ் என்று அழைக்கப்படும் ராணுவத்தின் 7 பீரங்கிகள், அவை மூன்று சுற்றாக சுட்டபின் 21 என்ற கணக்கு வரும்.
- இந்த பீரங்கிகள் ஒரே நேரத்தில் எல்லா 21 குண்டுகளையும் சுடாது, தேசிய கீதம் தொடங்கும் போது ஒரு முறை சுடுவார்கள், 52 வது நொடியில் கடைசி முறை சுடுவார்கள். 1941ல் செய்யப்பட்ட இந்த பீரங்கிகள் தான் இந்திய அரசின் அத்தனை விழாக்களிலும் பயன்படுத்தப் படுகிறது.
- காலை 8 மணிக்கு மேல் துவங்கும் விழாவிற்கு அணிவகுப்பு செய்பவர்கள் இரவு 2 மணிக்கே தயாராகி விடுவார்கள். 3 மணிக்கு ராஜ்பாத்தில் இருப்பார்கள். மேலும் இந்த ஊர்வலத்திற்கான தயாரிப்புகள் ஜூலை மாதம் துவங்கியிருக்கும். பங்கேற்பவர்களுக்கும் அப்போதே தெரிவிக்கப்படும். ஆகஸ்ட் மாதம் பயிற்சிகளை துவங்கி இருப்பார்கள்.
- இந்தியாவின் ராணுவ வலிமையை வெளிப்படுத்தும் அனைத்து டாங்கிகள், கவச வாகனங்கள் மற்றும் அதிநவீன கருவிகள் அனைத்தும் இந்தியா கேட் அருகே உள்ள பிரத்யேக முகாமில் வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பீரங்கிக்கான மேற்பார்வை செயல்முறை மற்றும் ஒயிட்வாஷ் செய்யும் பணி பொதுவாக பத்து நிலைகளில் செய்யப்படும், இந்த முறை அதில் சில மாற்றங்கள் இருக்கலாம்.
- ஜனவரி 26 ஆம் தேதி நடைபெறும் அணிவகுப்பு நிகழ்வில் ஆரம்பம் முதல் இறுதி வரை ஒவ்வொரு நடவடிக்கையும் உன்னிப்பாக திட்டமிடப்படும். அதில் மிகச்சிறிய துல்லியமின்மை மற்றும் சிறிய தாமதம் ஏற்பட்டால் கூட நிகழ்வை நடத்துபவர்களுக்கு பெரும் பாதிப்பை தரும்.
- அணிவகுப்பில் பங்கேற்கும் ஒவ்வொரு ராணுவ வீரர்களும் 4 நிலை விசாரணைகளுக்குச் செல்ல வேண்டும். அதுமட்டுமல்லாமல், அவர்களின் ஆயுதங்களில் தோட்டாக்களை எடுத்துச் செல்லவில்லை என்பதை உறுதி செய்வதற்காக விரிவாக ஆய்வுக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றனர்.
- மகாத்மா காந்தியின் விருப்பமான பாடலான, "அபைடு வித் மீ" பாடல் ஒவ்வொரு குடியரசு தின அணிவகுப்பு நிகழ்விலும் ஒலிக்கப்படுகிறது. இம்முறை அந்த பாடல் ஒலிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு பதிலாக 'சாரே ஜஹான் சே அச்சா ஹிந்துஸ்தான் ஹமாரா' பாடல் இசைக்கப்படவுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
- ஒவ்வொரு குழுவிலும் உள்ள வீரர்கள் இந்த அணிவகுப்புக்கு தயாரவதற்கு 12 கிலோமீட்டர்கள் நடப்பார்கள், ஆனால் விழாவில் நடக்க வேண்டியது 9 கிலோமீட்டர் தூரம் தான். அவர்கள் போகுமிடத்திலெல்லாம் அவர்களை கண்காணிக்க ஒரு குழு இருக்கும். அந்த குழு 'சிறந்த அணிவகுப்பு குழு' என்ற பட்டத்தை வழங்குவதற்காக ஒவ்வொரு குழிவின் செயல்பாடுகளையும் உற்று நோக்கும்.
- இந்த நிகழ்வில் 'ஃபிளைபாஸ்ட்' என்று கூறப்படும் நிகழ்வுதான் மிகவும் ஸ்வாரஸ்யமானது. வெவ்வேறு ஏவுதளங்களில் இருந்து கிளம்பிய 41 விமானங்கள் முடிவு செய்யப்பட்ட நேரத்திற்கு சரியாக ராஜபாத்தை வந்தடையும்.
- அடுத்ததாக வாகன அணிவகுப்பு, இந்த அணிவகுப்பு வாகனங்கள் சுமார் 5 கிமீ வேகத்தில் மட்டுமே நகரும். அப்போதுதான் அங்கிருப்பவர்கள் அதில் என்னென்ன விஷயங்கள் உள்ளன என்பதை உன்னிப்பாகக் கவனிக்க முடியும். இந்த வாகனத்தின் டிரைவர்கள் ஒரு சிறிய ஜன்னலின் மூலம் தான் அவற்றை இயக்குகிறார்கள். ஜனவரி 26, 2022 அன்று குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்க 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள், ஒன்பது அமைச்சகங்கள் மற்றும் துறைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. ஹரியானா, சத்தீஸ்கர், கோவா, குஜராத், கர்நாடகா, மேகாலயா, பஞ்சாப், உத்தரபிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் வாகனங்கள் பங்கு பெறுகின்றன. கடந்த ஆண்டு கேரளா, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், உள்ளிட்ட மாநிலங்கள் விடுபட்டுப் போய் இருந்த நிலையில் அந்த மாநில அரசுகள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தன. பாரதிய ஜனதா கட்சி ஆட்சி செய்யாத மாநிலங்களான அவை, வேண்டுமென்றே குடியரசு தின அணிவகுப்பில் இடம்பெறக்கூடாது என உள்நோக்கத்துடன் செயல்பட்டு உள்ளதாக குற்றம் குற்றச்சாட்டை முன்வைத்து இருந்தனர். அது இந்த ஆண்டும் தொடர்வதுபோல கேரளா, ஆந்திரா, மேற்குவங்கம் உள்ளிட்ட மாநில அரசுகளின் அலங்கார ஊர்திகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
- உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட INSAS துப்பாக்கிகளைப் பயன்படுத்தி அணிவகுப்பில் ராணுவ வீரர்கள் அணிவகுத்துச் செல்கின்றனர், அதே நேரத்தில் சிறப்புப் பாதுகாப்புப் படையினர் இஸ்ரேலில் தயாரிக்கப்பட்ட தவோர் துப்பாக்கிகளுடன் அணிவகுத்துச் செல்கின்றனர். இந்த முறை அதிலும் மாற்றங்கள் இருக்கலாம்.
- RTI மூலம் பெறப்பட்ட தகவலின்படி, 2014 ஆம் ஆண்டு அணிவகுப்புக்கு மொத்தம் ரூ. 320 கோடி செலவிடப்பட்டுள்ளது. இந்தச் செலவு 2001 ஆம் ஆண்டில் 145 கோடியாக இருந்தது என மதிப்பிடப்பட்டது. இந்த வகையில், 2001 முதல் 2014 வரை, ஜனவரி 26 ஆம் தேதி அணிவகுப்புக்காக செலவிடப்படும் தொகை 54.51% உயர்ந்துள்ளது.
ஆனால் இம்முறை நடைபெறும் அணிவகுப்பிற்கு சில பிரத்யேக விஷயங்கள் உண்டு. 75 ஆண்டுகளில் முதன்முறையாக, குடியரசு தின அணிவகுப்பு வழக்கமான நேரமான, காலை 10 மணிக்கு தொடங்காது. கோவிட்-19 கட்டுப்பாடுகள் மற்றும் ஜம்மு காஷ்மீர் பாதுகாப்புப் பணியாளர்களுக்கு மரியாதை செலுத்துவதன் காரணமாக குடியரசு தின விழா 30 நிமிடம் தாமதமாக தொடங்க உள்ளதாக மூத்த போலீஸ் அதிகாரி தெரிவித்தார். இந்த வருட அணிவகுப்பில் பல்வேறு மாநிலங்கள், துறைகள் மற்றும் பாதுகாப்புப் படைகளின் 25 அலங்கார ஊா்திகள் பங்கேற்கவுள்ளன. இதில் இந்திய ராணுவம் சாா்பில் பிடி-76 பீரங்கி, ஒரு செஞ்சூரியன் பீரங்கி, இரண்டு எம்பிடி அா்ஜுன் எம்கே-1 பீரங்கிகள், போா் வாகனங்கள் உள்ளிட்டவற்றின் அணிவகுப்பு நடைபெறவுள்ளது.
இந்திய ராணுவத்தின் ராஜ்புத் படைப் பிரிவு, அஸ்ஸாம் படைப் பிரிவு, ஜம்மு-காஷ்மீா் இலகுரக ஆயுதப் படைப் பிரிவு, ராணுவ போா் தளவாடப் பிரிவு, பாராசூட் பிரிவு ஆகிய 6 படைப் பிரிவுகள் மற்றும் குதிரைப் படையின் அணிவகுப்பும் நடைபெறவுள்ளது. அத்துடன் இந்திய ராணுவத்தின் விமானப் பிரிவு சாா்பில் ஹெலிகாப்டா் சாகசம் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.