Red Fort Blast: வெடித்து சிதறிய ஹுண்டாய் i20 கார், உரிமையாளர் கைது - அதிர்ந்த டெல்லி, குண்டு வெடிப்பு அப்டேட்
Red Fort Blast: டெல்லி செங்கோட்டையில் வெடித்து சிதறிய ஹுண்டாய் i20 காரின் உரிமையாளரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Red Fort Blast: டெல்லி செங்கோட்டையில் வெடிவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களை, உள்துறை அமைச்சர் அமித் ஷா நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளார்.
டெல்லி வெடிவிபத்து:
திங்கட்கிழமை மாலை டெல்லி செங்கோட்டை மெட்ரோ நிலையத்தின் கேட் எண் 1 அருகே, ஏற்பட்ட சக்திவாய்ந்த வெடிப்பில் 9 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பலர் தீவிர காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், உயிரிழப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இந்த சம்பவத்தில் பல வாகனங்கள் எரிந்து நாசமானதாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது. நேற்று மாலை 6.52 மணியளவில் அந்த பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த காரில் இருந்து வெடிபொருள் வெடித்து, பெரிய அளவில் தீயை ஏற்படுத்தி, அந்த பகுதி முழுவதும் வேகமாக பரவியதாக நம்பப்படுகிறது. தலைநகரில் ஏற்பட்ட இந்த சம்பவத்தை தொடர்ந்து, நாட்டின் பல முக்கிய நகரங்களுக்கும் பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காரின் உரிமையாளர் கைது
ஹரியானா மாநிலம் குருகிராமைச் சேர்ந்த காரின் பதிவு செய்யப்பட்ட உரிமையாளரான சல்மானை டெல்லி போலீசார் கைது செய்தனர். டெல்லியின் ஓக்லா பகுதியில் உள்ள ஒருவருக்கு காரை விற்றதாக அவர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இருப்பினும் அது இன்னும் ஹரியானா எண் தகடுடன் முதல் பெயரிலேயே பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பேசிய காவல்துறை வெளியிட்டுள்ள தகவல்களின்படி "டெல்லி காவல்துறையினர் மற்றும் குருகிராம் போலீசார் திங்களன்று சல்மானை கைது செய்து விசாரித்து வருகின்றனர். அவர் அதை ஓக்லாவில் உள்ள தேவேந்திரா என்ற நபருக்கு விற்றுள்ளார். பின்னர், அந்த வாகனம் மீண்டும் அம்பாலாவில் உள்ள ஒருவருக்கு விற்கப்பட்டது, மேலும் போலீசார் காரை கைமாற்றிய நபரை கண்டுபிடித்து வருகின்றனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல்துறை சொல்வது என்ன?
காரின் சிஎன்ஜி சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டு இருக்கலாம் எனவும், சம்பவ இடத்தில் இருந்து மாதிர்கள் சேகரிக்கப்பட்டு ஆய்விற்கு அனுப்பப்பட்டு இருப்பதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் முடிவுகள் அடிப்படையிலேயே பல விவரங்கள் தெரிய வரும் என்றும் தெரிகிறது.
அமித் ஷா சொல்வது என்ன?
சுபாஷ் மார்க் போக்குவரத்து சிக்னலில் ஹூண்டாய் i20 காரில் குண்டுவெடிப்பு ஏற்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். அதன்படி, "மாலை 7 மணியளவில், டெல்லியில் உள்ள செங்கோட்டை அருகே உள்ள சுபாஷ் மார்க் போக்குவரத்து சிக்னலில் ஹூண்டாய் i20 காரில் குண்டு வெடித்தது. இந்த குண்டுவெடிப்பில் சில பாதசாரிகள் காயமடைந்தனர் மற்றும் சில வாகனங்கள் சேதமடைந்தன. குண்டுவெடிப்பு பற்றிய தகவல் கிடைத்த 10 நிமிடங்களுக்குள், டெல்லி குற்றப்பிரிவு மற்றும் டெல்லி சிறப்புப் பிரிவைச் சேர்ந்த குழுக்கள் சம்பவ இடத்திற்கு வந்தன. NSG மற்றும் NIA குழுக்கள், FSL உடன் இணைந்து, இப்போது முழுமையான விசாரணையைத் தொடங்கியுள்ளன. அருகிலுள்ள அனைத்து CCTV கேமராக்களையும் ஆய்வு செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
டெல்லி CP மற்றும் சிறப்புப் பிரிவு பொறுப்பாளரிடமும் பேசியுள்ளேன். டெல்லி CP மற்றும் சிறப்புப் பிரிவு பொறுப்பாளர் சம்பவ இடத்தில் உள்ளனர். நாங்கள் அனைத்து சாத்தியக்கூறுகளையும் ஆராய்ந்து வருகிறோம். அவற்றை கணக்கில் எடுத்துக்கொண்டு முழுமையான விசாரணையை மேற்கொள்வோம். அனைத்து விருப்பங்களும் உடனடியாக விசாரிக்கப்படும்” என அமித் ஷா தெரிவித்தார். தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்ட மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.





















