Repo Rate: ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை: ரிசர்வ் வங்கி அறிவிப்பு
தொடர்ந்து ஐந்தாவது முறையாக ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் மேற்கொள்ளவில்லை.
ரெப்போ வட்டி விகிதம் 6.5 சதவிகிதமாக நீடிக்கும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. தொடர்ந்து ஐந்தாவது முறையாக ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் மேற்கொள்ளவில்லை.
ரெப்போ வட்டி என்றால் என்ன?
நிதி பற்றாக்குறை ஏற்படும் போது, மத்திய வங்கியான ரிசர்வ் வங்கி பிற வங்கிகளுக்கு குறிப்பிட்ட வட்டி வகிதத்தில் கடன் அளிக்கும். அதன் பெயர்தான் ரெப்போ வட்டி ஆகும். பணவீக்கத்தின்போது, கடன் வாங்குவதை தவிர்க்கும் வகையில் ரெப்போ வட்டியை மத்திய வங்கி உயர்த்தும். இதன் மூலம், பொருளாதாரத்தில் பண புழக்கம் ஒழுங்குபடுத்தப்பட்டு, பண வீக்கம் குறைக்கப்படும்.
இந்த நிலையில், ரெப்போ வட்டி விகிதம் 6.5 சதவிகிதமாக நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கூறுகையில், "ரெப்போ வட்டி விகிதத்தை மாற்றாமல் 6.5 சதவிகிதமாக வைத்திருக்க நாணயக் கொள்கைக் குழு ஒருமனதாக முடிவு செய்தது. இதன் விளைவாக, நிலையான வைப்புத்தொகை வசதி விகிதம் 6.25% ஆகவும், விளிம்பு நிலை வசதி விகிதம் மற்றும் வங்கி விகிதம் 6.75% ஆகவும் தொடர்கிறது.
நடப்பு 2023-24 ஆம் ஆண்டிற்கான ஜிடிபி வளர்ச்சி 7 சதவிகிதமாக கணிக்கப்பட்டுள்ளது. மூன்றாம் காலாண்டில் (Q3) 6.5 சதவிகிதம் பதிவாகும். நான்காம் காலாண்டில் (Q4) 6 சதவிகிதம் பதிவாகும் என கணிக்கப்பட்டுள்ளது. 2024-25 ஆம் ஆண்டின் முதல் காலாண்டிற்கான ஜிடிபி வளர்ச்சி 6.7% ஆகவும், இரண்டாம் காலாண்டுக்கு 6.5% ஆகவும் மற்றும் மூன்றாம் காலாண்டுக்கு 6.4% ஆகவும் கணிக்கப்பட்டுள்ளது. அபாயங்கள் சமமாக சமநிலையில் உள்ளன.
நுகர்வோர் விலைக் குறியீடு பணவீக்கம் நடப்பு 2023-24 ஆண்டில் 5.4% ஆகவும், மூன்றாம் காலாண்டில் 5.6% ஆகவும், நான்காம் காலாண்டில் 5.2% ஆகவும் இருக்கும். 2024-25 ஆம் ஆண்டின் முதல் காலாண்டிற்கான நுகர்வோர் விலைக் குறியீடு பணவீக்கம் 5.2%, இரண்டாம் காலாண்டில் 4% மற்றும் மூன்றாம் காலாண்டில் 4.7% இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது" என்றார்.
பணவீக்கம் என்றால் என்ன?
வங்கிகளில், அதிக பணம் இருந்தால், மக்களுக்கு அதிக கடன்களை வங்கிகள் வழங்கும். அதனால் மக்கள் கைகளில் பண புழக்கம் அதிகரிக்கும். இதனால், மக்கள் அதிக பொருட்களை வாங்கும் தன்மை அதிகரிக்கும். மக்கள் அதிக பொருட்களை வாங்கும் தன்மை ஏற்படும் போது, பொருட்களின் விலையும் அதிகரிக்கும். இதுவே பணவீக்கம் என அழைக்கப்படுகிறது.
எனவே பணவீக்கத்தை குறைக்க வேண்டுமானால் ( அதாவது பொருட்களின் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த ), மக்களிடம் பணப்புழக்கத்தை குறைக்க வேண்டும்.
ஆகையால், வங்கிகளில் வழங்கும் கடனுக்கான வட்டி விகிதத்தை உயர்த்துவதன் மூலம், கடன் வாங்குபவர்கள் குறைய தொடங்குவார்கள். கடன் வாங்குவது குறையும் போது, மக்களிடம் பணப்புழக்கம் குறையும். பணப்புழக்கம் குறைந்தால் பொருட்களை மக்கள் வாங்குவது குறையும். பொருட்களை வாங்காத போது, அதன் விலை குறைய தொடங்கும். பணவீக்கமும் குறையும்.