(Source: Poll of Polls)
Rashtriya Bal Puraskar Winners: பாலபுரஸ்கார் விருது வென்ற 6 வயது தமிழக மாணவி..! முழு பட்டியலும் உள்ளே..!
தமிழ்நாட்டைச் சேர்ந்த 6 வயது சிறுமி உள்பட 29 சிறுவர்களுக்கு பாலபுரஸ்கார் விருது வழங்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் கல்வி, கலை, விளையாட்டு, வீரதீர செயல்களில் சிறந்து விளங்கிய சிறுவர்களுக்கு பாலபுரஸ்கர் விருது வழங்கப்படுவது வழக்கம். ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழாவை முன்னிட்டு இந்த விருதுகள் வழங்கப்படும். நடப்பாண்டிற்கான பாலபுரஸ்கர் விருது பெற்ற சிறுவர்களுக்கு பிரதமர் மோடி காணொலி மூலமாக இந்த விருதுகளை வழங்கி கவுரவித்தார்.
நடப்பாண்டில் 14 மாணவிகள் உள்பட 29 சிறுவர்களுக்கு பாலபுரஸ்கர் விருதுகள் வழங்கப்பட்டது. இவர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 6 வயதே நிரம்பிய மாணவி விஷாலினியும் அடங்குவார்.
கண்டுபிடிப்பு :
விருதுநகரைச் சேர்ந்த மருத்துவ தம்பதிகளான நரேஷ்குமார், சித்திரகலா ஆகியோரின் மகள் விஷாலினி( வயது 6) கரையோரம் வசிக்கும் மக்கள் வெள்ள பாதிப்புகளில் இருந்து தப்பிப்பதற்காக பலூன் வீட்டை உருவாக்கியதற்காக பாலபுரஸ்கார் விருது வழங்கப்பட்டது. இந்த வீட்டை உருவாக்கியதற்காக காப்புரிமையும் பெற்றுள்ளார். பார்க்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக பிரத்யேக சாதனத்தை உருவாக்கிய 15 வயதான ஜூய் அபிஜித் கேஸ்கருக்கும், ஸ்பைரோமீட்டர் மென்பொருளை உருவாக்கிய புஹாவி சக்ரவர்த்தி (15), 16 வயதான சிவம் ராவத், 15 வயதான வினிதாதாஸ் ஆகியோருக்கும் பாலபுரஸ்கார் விருது வழங்கப்பட்டுள்ளது.
வீரதீரச்செயல் :
தீவிரவாதிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி தனது குடும்பத்தை மீட்ட 12 வயதான சிறுமி குருகு ஹிமாப்பரியாவிற்கும், மின்கசிவில் சிக்கிக்கொண்ட தனது தாயையும், சகோதரனையும் மீட்ட 6 வயது சிவாங்கி காலி, முதலையிடம் சிக்கிக்கொண்ட தனது சகோதரனை தைரியமாக மீட்ட 14 வயதான தீரஜ்குமார் ஆகியோருக்கு பாலபுரஸ்கர் விருது வழங்கப்பட்டுள்ளது.
கலைப்பிரிவு :
காலிகிராபி எனப்படும் கையெழுத்து சிறப்பாக எழுதியதற்காக 13 வயதே ஆன கவுரி மகேஸ்வரிக்கு பாலபுரஸ்கார் விருது வழங்கப்பட்டுள்ளது. பியானோ வாசிப்பதில் அபார திறமை கொண்ட சையத் பத்தீன அகமதுவிற்கு (வயது 13) பாலபுரஸ்கார் விருது வழங்கப்பட்டுள்ளது. ரேம்னா இவெட் பெர்ரிரே ( வயது 15) பரதநாட்டியத்தில் சிறந்து விளங்கியதற்காக பாலபுரஸ்கர் விருது வழங்கப்பட்டுள்ளது.
புகைப்படம் மற்றும் ஓவியம் வரைவதில் சிறந்து விளங்கிய டோலஸ் லோம்போமாயும் ( வயது 13), கர்நாடக இசையிலும், மிருதங்கத்திலும் சிறந்து விளங்கும் 14 வயதான தேவிஸ்ரீபிரசாத்திற்கும் பாலபுரஸ்கார் விருது வழங்கப்பட்டுள்ளது. அசாம், சமஸ்கிருதம், வங்காளம், இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய 5 மொழிகளில் பாடும் அசாமின் 5 வயது சிறுவன் திரிஷ்டிஸ்மானுக்கும் பாலபுரஸ்கார் விருது வழங்கப்பட்டுள்ளது.
கல்விப்பிரிவு :
வேத கணித நிபுணராகவும், எழுத்தாளராகவும் விளங்கும் 12 வயதான அவிசர்மாவிற்கும், கொரோனா காலத்தில் இணையவழி படிப்பிற்காக இணையதளத்தை உருவாக்கிய 16 வயதான ஆகார்ஷ் கவுசல் ( வயது 16), கொரோனாப்ரீவேர்ல்ட்.காம் என்ற இணையதளத்தை உருவாக்கிய மிஷான்ஸ் குமார் குப்தாவிற்கும் ( வயது11) 10 ஆயிரம் மாணவர்களுக்கு புத்தகம் வழங்கிய 15 வயதான அபினவர்குமார் சவுத்ரிக்கும், பி.எம்.கேர்ஸ் நிதிக்காக பணம் திரட்டிய 6 வயதான பால்சக்திக்கும் பாலபுரஸ்கர் விருது வழங்கப்பட்டுள்ளது.
விளையாட்டுப்பிரிவு:
பாரா நீச்சல் பிரிவில் உலகசாதனை படைத்த 13 வயதான ஜியாராய், மோட்டார் விளையாட்டில் சாதனை படைத்த ஸ்ரியொ லோகியா ( வயது 13), 21 விருதுகளை யோகா போட்டியில் வென்ற 13 வயதான அன்வீ விஜய், சந்த்ரே சவுத்ரி(வயது 12), சுவாயம் பட்டீல்( வயது 14). தருஷீகோர், அருஷீ கோத்வால் ஆகியோருக்கும் விளையாட்டில் சாதித்திற்காக பாலபுரஸ்கர் விருது வழங்கப்பட்டுள்ளது.