Raj Kundra Arrest: ராஜ் குந்த்ரா வழக்கு: ஷில்பா ஷெட்டியிடம் மும்பை போலீஸ் விசாரணை!
ராஜ் குந்த்ராவின் மனைவி ஷில்பா ஷெட்டியை மும்பை காவல்துறையினர் இன்று மாலை விசாரணை நடத்தியுள்ளனர்.
ஆபாச படங்களை தயாரித்து சில செல்போன் ஆப்களுக்கு விற்பனை செய்ததாக பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ரா கடந்த 20ஆம் தேதி இரவு கைது செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் ராஜ் குந்த்ராவை ஜூலை 23 வரை போலீஸ் காவலில் வைக்கச் சொல்லி மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து அவர் மும்பை குற்றப்பிரிவு காவல்நிலையத்தில் அவரது சிறை நாட்கள் நீட்டிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், ராஜ் குந்த்ராவை அழைத்துக் கொண்டு அவரது பங்களாவுக்கு விரைந்த காவல் துறையினர், அங்கு சோதனை நடத்தினர். பின்பு, ராஜ் குந்த்ராவின் மனைவி ஷில்பா ஷெட்டியை மும்பை காவல்துறையினர் இன்று மாலை விசாரணை நடத்தியுள்ளனர். அதில், ஷில்பா ஷெட்டியின் பதில்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், ஷில்பா ஷெட்டி நடித்து விரைவில் ஓடிடியில் வெளியாக இருக்கும் ஹங்காமா-2 திரைப்படம் பற்றிய பதிவு ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார்.இன்று மாலை விசாரணை நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், சமூக வலைதளத்தில் அவர் படம் குறித்து பதிவு செய்துள்ளது மேலும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
(1/2)
— SHILPA SHETTY KUNDRA (@TheShilpaShetty) July 23, 2021
I believe and practice the teachings of Yoga, “The only place where life exists is the present moment, NOW.”
Hungama 2 involves the relentless efforts of an entire team that’s worked very hard to make a good film, and the film shouldn’t suffer… ever!#Hungama2 pic.twitter.com/JCeEGXVZ09
முன்னதாக, தன்னுடைய கணவர் கைது செய்யப்பட்ட இரண்ட நாட்களுக்கு பிறகு பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை செய்துள்ளார். அதில், "ஜேம்ஸ் தூபரின், "முன்பு நடந்ததை கோபத்துடனும், இனிமேல் என்ன நடக்கும் என்று பயத்துடனும் பார்க்காமல் தற்போது நடப்பதை கவனமாக பார்க்க வேண்டும்" என்ற வாசகத்துடன் தொடங்கியுள்ளார். நாம் எப்போதும் நமக்கு முன்பு பிறர் செய்த தீங்கு, நமக்கு ஏற்பட்ட சோகம், கெடு வாய்ப்பான சம்பவம் ஆகியவற்றை கோபத்துடன் திரும்பி பார்ப்போம். இல்லையேன்றால் வருங்காலத்தில் தோல்வியை சந்தித்துவிடுவோமா, வேலையை இழந்துவிடுவோமா, நோய் பாதிப்பிற்கு உள்ளாகிவிடுவோமா என்று மிகுந்த பயத்துடன் பார்ப்போம். அப்படி செய்வதற்கு பதிலாக நாம் தற்போது நம்மை சுற்றி நடக்கும் விஷயங்களை கவனத்துடன் பார்க்க வேண்டியது அவசியம்.
இதற்கு முன்பாக நான் பல சவால்களை எதிர்கொண்டுள்ளேன். இனிமேலும் என்னுடைய வாழ்க்கையில் வரும் சவால்களை எதிர்கொள்வேன். அவை எதுவுமே தற்போது என்னுடைய வாழ்க்கையில் நடக்கும் விஷயங்களை கவனிக்காமல் இருக்குமாறு, என்னை தொந்தரவு செய்ததில்லை" எனப் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக திரைப்பட நடிகைகளை நிர்வாணமாக நடிக்கவைத்து அதனை செல்போன் ஆப்களுக்கு விற்பனை செய்வது தொடர்பான புகாரில் ஏற்கெனவே 9 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ராஜ்குந்த்ரா மீது அடுத்தடுத்து சில குற்றச்சாட்டுகளும் முன் வைக்கப்படுகின்றன. ராஜ்குந்த்ரா தன்னை நிர்வாணமாக ஆடிஷன் செய்ததாக நடிகை சகாரிகா சுமன் அளித்த நேர்காணலும் கவனம் பெற்றது. இந்த வீடியோ கடந்த பிப்ரவரி மாதமே வைரலானது. அப்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டத்து. அதன்பின்னர் கடந்த 20ஆம் தேதி இரவு ராஜ்குந்த்ரா கைது செய்யப்பட்டார்.
இது குறித்து மும்பை போலீசார்செய்தியாளர்களிடம் பேசியபோது, "ஆபாசப்படம் தயாரிப்பு வழக்கில் ராஜ்குந்த்ரா கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தில் அவரது மனைவியும், நடிகையுமான ஷில்பா ஷெட்டிக்கு தொடர்பு இருப்பதாக இதுவரை கண்டறியப்படவில்லை. நாங்கள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். ராஜ்குந்த்ராவால் பாதிக்கப்பட்டவர்கள் தாமாக முன் வந்து புகாரளிக்கலாம். புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர். மேலும் இந்த புகார் தொடர்பாக ஷில்பா செட்டியிடம் விசாரணை நடத்தலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்தச் சூழலில் நேற்று ஷில்பா ஷெட்டி பதிவு ஒன்றை செய்துள்ளார்.